இலங்கையின் இனவாதச் சக்கரத்தில் ஏறிய ஜனாதிபதியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது?
சட்டம் மற்றும் நீதி என்பதெல்லாம் இது போன்ற விடயங்களில் உடனடியாக சாத்தியமில்லை என்பதுதான் இலங்கை போன்ற நாடுகளின் நிலைப்பாடு.
இலங்கையின் இனவாதச் சக்கரத்தில் ஏறிய ஜனாதிபதியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது?
திருகோணமலை சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் தமிழ் மக்கள் ஏன் யுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள் என்ற நியாயப்பாட்டை தெளிவு படுத்தி நிற்கிறது.
திருகோணமலையில் இந்த விடயத்தில் இரவு நேரங்களில் கூட மக்கள் எழுச்சி மற்றும் இளைஞர்களின் எழுச்சி பாராட்ட தக்கது?
ஆனால் இது ஒரு பௌத்த பேரினவாதத்தின் நிகழ்சி நிரலில் இடம்பெறும் சம்பவம் என்பதை நாம் முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களின் நோக்கம் புத்த மதத்தை போதிப்பதோ, பாதுகாப்பதோ அல்ல அவர்களின் நோக்கம் இன வன்முறைகளை தோற்றுவிப்பதாக அமைகிறது. இவ்வாறான விடயங்களை மிக கவனமாக கையாள வேண்டும்?
அறத்தின் வழி நின்று ஏற்கனவே தமிழர் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்த்து இது குறித்து உணர்வூர்வமாக சிந்திக்கும் ஒவ்வொரு தமிழர்களும் இதற்கு எதிராக கொதித்தெழுவார்கள் என்பது இயல்பானதே.
ஆனால் எங்கிருந்தோ சிலரால் போடப்படும் நிகழ்சி நிரலுக்குள் அதாவது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு சில பேரினவாத சக்திகளை தூண்டிவிட்டு இனவாத அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கோடு இலங்கை அரச தலைவர்களை சிக்கவைக்க எடுக்கப்படும் இது போன்ற சம்பவங்கள் மிகவும் ஆபத்தானது.
இன் நிகழ்சி நிரலை வகுத்தவர்களின் நோக்கம் தெளிவானது.
சட்ட விரோதமாக ஒரு புத்தர் சிலை வைத்தால் அதனை அகற்ற வேண்டும் என்பது சட்டம் ஆனால் இலங்கையில் அவ்வாறான சட்டம் ஒன்றை சிங்கள பௌத்த பேரினவாத கொள்கை வகுப்பாளர்களை மீறி நடைமுறைப்படுத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். அவ்வாறு நடைமுறைப் படுத்தினால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தா விட்டால் அதற்கு எதிராக தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட தமிழ் முஸ்லிம் மக்கள் கொதித்தெழுந்து போராடுவார்கள் என்பதும் தெரியும். அதனை வைத்து சிங்கள இனவாதிகளின் உணர்வுகளை தூண்டி சிங்கள இனவாதிகளை வீதிகளில் இறக்கி போராட வைப்பது மற்றும் வன்முறைகளை தூண்டுவது. இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம்.
இன் நிலையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அரசுக்கு சிங்கள மக்களா, தமிழ் மக்களா என்ற சூழ்நிலை உருவாகும் போது இந்த பிரச்சினையை அரசியல் ரீதியாக பெருபான்மை மக்களின் ஆதரவை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் சிங்கள மக்களை திருப்திப் படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கும்.
சட்டம் மற்றும் நீதி என்பதெல்லாம் இது போன்ற விடயங்களில் உடனடியாக சாத்தியமில்லை என்பதுதான் இலங்கை போன்ற நாடுகளின் நிலைப்பாடு.
இந்த நாடு அரசியலமைப்பு சட்டத்தின் ஊடாக ஒரே நாடு என்று கூறப்பட்டாலும் ஆட்சியாளர்களினால் எப்போதோ துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு விட்டது. யுத்தம் 2009 இல் மௌனிக்கப்பட்டதே தவிர தமிழர்கள் யுத்தம் செய்ததற்கான காரணிகள் முன்பை விட பல மடங்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தொடர்ந்தும் தமிழ் மக்கள், தமிழ் இளைஞர்கள் பொறுத்துக் கொண்டு அடிமைகளாக வாழ வேண்டும் மீறினால் பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை கொண்டு சிறையில் அடைப்போம் என்ற நோக்கோடுதான் பெரும்பான்மை சிங்கள அரசுகள் உள்ளன. இந்த அரசு கூட அவ்வாறுதான் சிந்திக்கும். ஏனெனில் என்னதான் மாற்றத்தை உருவாக்க ஜனாதிபதி அனுர சிந்தித்தாலும், JVP யின் சிங்கள இனவாத சித்தாந்தம் மற்றும் மாறி மாறி ஆட்சி செய்த இனவாத அரசுகள் உருவாக்கி வைத்துள்ள ஜனாதிபதி என்ற இனவாத சக்கரத்தில் ஏறிய எவராலும் அதில் இருந்து இறங்கி வேறு விதமாக செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட முயற்சி செய்தால் இலங்கையில் பண்டாரநாயக்கவுக்கு, விஜயகுமாரதுங்கவுக்கு, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இன்னும் பலருக்கு நிகழ்ந்த சம்பவங்களே நடைபெற வாய்ப்புள்ளது.
75 வருடங்களாக இலங்கையில் வேரூன்றி இருக்கும் பௌத்த இனவாதம் என்ற புற்றுநோய் தங்களையும் அழித்து ஏனைய சிறுபான்மை இன மக்களையும் அழிக்கும் நிலையில் தான் உள்ளது. எத்தனை முயற்சிகள் செய்தாலும் அதில் இருந்து சிறுபான்மை மக்கள் தப்பிக்க வழி இன்றி தவிக்கின்றனர். இனவாத நோய் தோற்றி உள்ள பகுதிகளை தமிழர்களுக்கான அதிகார பரவலாக்கம் ஊடாக இரண்டாக வெட்டி பிரித்தால் மாத்திரமே தமிழினம் விடுதலை பெற்று இந்த நாடு சாந்தியும் சமாதானமும் உள்ள நாடாக மாறும்.


