ஐ நாவில் தமிழீழத் தேசியக் கொடியும் பறக்க வேண்டும் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தேசியக்கொடி நாளை பிரகடனப்படுத்திய ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நமது தேசியக் கொடியினை ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் உள்ள திடலில் ஏற்றி வருகிறோம்.
நவம்பர் 21, 2025
ஐ நாவில் தமிழீழத் தேசியக் கொடியும் பறக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பயணிப்போம்!
நவம்பர் 21. இன்று தமிழீழத் தேசியக் கொடி நாள்.
தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம்திகதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
தமிழீழத் தேசியக் கொடியை அறிமுகம் செய்யும் போது, தமிழீழத் தேசியக்கொடி ஈழத் தமிழினத்தின் தேசிய அடையாளத்தினதும், சுயநிர்ணய உரிமையினதும், இறைமையினதும் குறியீடாக அமைகின்றது எனத் தலைவர் அவர்கள் பிரகடனம் செய்தார்.
மேலும், தமிழீழத் தேசியக்கொடி ஈழத் தமிழினத்தின் அரசியல் பெருவிருப்பின் வெளிப்பாடாக அமைவதோடு , எமது தேசியக்கொடி ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் மற்றைய நாட்டுக் கொடிகளுடன் என்றோ ஒரு நாள் பறக்கும் என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பாகவும் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழீழத் தேசியக் கொடியுன் அறிமுகம் குறித்து ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையில், “தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்துக்கு ஒரு தேசியக்கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக்கொடி சித்தரித்துக் காட்டுகிறது. தேசாபிமானத்தின் சின்னமாகவும் அது திகழ்கிறது. அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக்கொடி அமைகிறது» எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமையினை இந் நாளில் நினைவு கொள்வது பொருத்தப்பாடானது.
2021 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை, நவம்பர் மாதம் 21ஆம் திகதியை தமிழீழத் தேசியக்கொடி நாளாக பிரகடனம் செய்தது.
இப் பிரகடனத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், நாளை மலரவிருக்கும் தமிழீழ தேசம் அனைத்துலக பரப்பில் இறைமை,மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் மற்றைய நாடுகளுடன் நிமிர்ந்து நிற்கும் என்ற செய்திக்கு கட்டியம் கூறும் வகையில் தமிழீழத் தேசியக்கொடி பறப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டது.
மேலும், நமது சுயநிர்ணய உரிமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும்(to realize our freedom, sovereignty and our inherent right to self determination) வென்றெடுக்கத் துணை செய்யும் வகையில், எமது போராட்ட வரலாற்றை இரண்டாம் தலைமுறைக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் எடுத்துச் செல்லும் கருவியாக தமிழீழ தேசியக்கொடி திகழ்வதையும் அப்பிரடனத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டியது.
பிரித்தானிய உள்துறை அமைச்சால் 2021 ஆம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தடை தொடர்பான கடிதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிக்கும், தமிழீழத் தேசியக் கொடிக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டு இருப்பதன் மூலம் தமிழீழத் தேசியக் கொடிக்கு கிடைத்த உள்ளடக்கமான அங்கீகாரத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ் வருடம். கனடாவின் பிரம்டன் (Brampton) மாநகரம் தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரிப்பதாகப் பிரகடனம் செய்திருப்பது நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ தேசியக் கொடி நாளைப் பிரகடனப்படுத்திய நாளிலிருந்து ஒவ்வொரு வருடமும் புலம் பெயர் தமிழீழ மக்களால் தாம் வாழும் நாடுகளில் இந் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வகையில் தமிழீழத் தேசியக் கொடி நாளான புலம்பெயர் தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு நாளாக அமைகின்றது.
புலம் பெயர் தேசங்களில் தமிழீழத் தேசியக் கொடிநாள் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில், தாயகத்தில் தமிழ்த் தேசிய இனம் ஆறாவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறது.
தாயகத்தில் வாழும் எமது உறவுகள் அங்குள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளிக்குள் முடங்கி கிடக்காமல், அவ் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளிக்குள் மூலோபாயத்துடனும் தந்திரோபாயத்துடனும் இயங்கி, அவ் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளியை பெரிதாக்கும் முயற்சியிலும், அரசியல் வெளியை மட்டுப்படுத்தும் காரணிகளை நீக்குவதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டும்.
ஆறாவது அரசியலமைப்பு திருத்தம், தமிழீழம் கோருவதைத்தான் தடை செய்கின்றதே ஒழிய ஆறாவது அரசியலமைப்பு திருத்தத்தையே நீக்கும் கோரிக்கையையோ அல்லது இதற்கான போராட்டங்களையோ தடை செய்யவில்லை என்பதனைத் தாயக மக்கள் கவனத்திற் கெள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.
கடந்த 600 ஆண்டுகளாக எங்கள் இறைமை காலனித்துவ ஆட்சியாளர்களால், சிங்கள பௌத்த பேரினவாத்த்தாலும் பறிக்கப்பட்டுள்ளது.
போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னர் இலங்கைத் தீவில் மூன்று சுதேச பூர்வீக அரசுகள் தெளிவான எல்லைகளுடன் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.
இவற்றில் வடபுலத்தில் இருந்த யாழ்ப்பாண அரசு இன்றைய வட மாகாணத்தின் எல்லைகளுக்கு அப்பால் பரந்திருந்தது. வடக்கும் கிழக்கும் வங்காள விரிகுடாவும், தெற்கில் புத்தளக் கடலேறியும், மேற்கில் கோடிக்குடாக் கடலும் எல்லைகள் என அறியக் கிடக்கின்றது.
போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் இலங்கை தீவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சமயம் சுதேச அரசுகளின் எல்லைகளை அவர்கள் மாற்றவில்லை. அடுத்து 1836 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ அரசே சுதேச அரசுகளின் எல்லைகளை அழித்து மொழியால், பண்பாட்டால் வேறுபட்டிருந்த தமிழ் அரசையும், சிங்கள அரசையும் இணைத்தனர்.
பிரித்தானியாவின் இந்த வரலாற்று தவறே இன்றைய தமிழின அழிப்பிற்கும் அத்திவாரம் இட்டது. இதன் வரலாற்று எதிர் வினையாக, ஈழத் தமிழினம் என்று சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், ஈடு செய் நீதி அடிப்படையிலும், இழந்த இறைமையை மீள எடுத்தல் (reversion to sovereignty) அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். இப் போராட்டத்துனதும், தமிழர் வீரத்தினதும் ஈகத்தினதும் குறியீடாகத் தமிழீழத் தேசியக்கொடி அமைந்திருக்கிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தேசியக்கொடி நாளை பிரகடனப்படுத்திய ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நமது தேசியக் கொடியினை ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் உள்ள திடலில் ஏற்றி வருகிறோம்.
உலகின் பல நாடுகளும் தேசங்களும் தமது தேசியக்கொடிக்காக ஒரு நாளைப் பிரகடனம் செய்து கொண்டாடி வருகின்றன. சுதந்திரவேட்கையுடன், தனக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்க வேண்டும் என்ற வேணவா கொண்ட தமிழீழத் தேசமும் தமிழீழத் தேசியக்கொடி நாளைக் கொண்டாடுவது சிறப்பு மிகுந்த நிகழ்வாகும்.
ஐக்கிய நாடுகள் சபை முன்றலின் உள்ளே மற்றைய நாட்டுக் கொடிகளுடன் எமது தேசியக் கொடியும் பறக்கக வேண்டும் என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் பயணிப்போம்.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்


