தையிட்டியில் அமைதியான போராட்டத்தின் மீது வன்முறைஅடக்குமுறை மற்றும் தமிழ் சிவில் சமூகத்தின் மீதானதாக்குதல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது!
தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை, தனியாருக்குச் சொந்தமான தமிழ் நிலங்கள் மீதான திட்டமிட்ட அத்துமீறல்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), டிசம்பர் 21 அன்று யாழ்ப்பாணம், தையிட்டியில் தமிழ் குடியியல் சமூகத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட அமைதியான போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறது. சிறிலங்காவின் புதிய ஆட்சியின் கீழ் சீர்திருத்தங்கள் குறித்த கூற்றுக்கள் இருந்தபோதிலும், இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை, தனியாருக்குச் சொந்தமான தமிழ் நிலங்கள் மீதான திட்டமிட்ட அத்துமீறல் மற்றும் தமிழ் தாயகத்தில் மத சுதந்திரம் தொடர்ந்து அபகரிக்கப்படுவதை கோடிட்டுக் காட்டுகிறது.
டிசம்பர் 21 அன்று, தமிழ் நில உரிமையாளர்கள், உள்ளூர்வாசிகள், குடியியல் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட மற்றும் சர்ச்சைக்குரிய திஸ்ஸவிகார பௌத்த கோவிலுக்கு வெளியே அமைதியாகக் கூடினர். ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும், பிக்குகள் மற்றும் சிங்களப் பார்வையாளர்கள் பலத்த இராணுவப் பாதுகாப்புடன் அந்த இடத்திற்கு வரும் நிலையில், நடைபெறும் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் அமைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியாருக்குச் சொந்தமான தமிழ் நிலங்களை விடுவிக்கக் கோரியதுடன், கோவிலுடன் தொடர்புடைய ஒரு மூத்த பிக்கு பதவி உயர்வு பெறுவதாகக் கூறப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜனவரி 3, 2026 அன்று அந்த இடத்தில் மேலதிக புத்தர் சிலையை நிறுவுவதற்கு அனுமதி கோரி சிறிலங்கா ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இந்தப் போராட்டமும் இடம்பெற்றது.
போராட்டம் அமைதியாக இருந்தபோதிலும், சிறிலங்கா காவல்துறை பெருமளவில் குவிக்கப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் உட்பட 29 நபர்களின் பெயர்களைத் குறிப்பிட்டு, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதைத் தடை செய்யும் நீதிமன்ற உத்தரவை வழங்கியது. இந்த முன்கூட்டியே விதிக்கப்பட்ட தடை, மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் மற்றும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகளின் அப்பட்டமான மீறலாகும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்ததாக காவல்துறை குற்றம் சாட்டியபோது பதற்றம் அதிகரித்தது, இது மோதல்களுக்கும் ஐந்து தமிழ் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதற்கும் வழிவகுத்தது. கைது செய்யப்பட்டவர்களில் மரியாதைக்குரிய இந்து மதத் தலைவரான தவத்திரு வேலன் சுவாமிகளும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவர் திரு. தியாகராஜா நிரோஷும் அடங்குவர். இருவரும் ஒரு பொலிஸ் வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டபோது சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மேலதிக மூன்று உறுப்பினர்களும் தடுத்து வைக்கப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டார் என்றும் அறிக்கைகள் மேலும் குறிப்பிடுகின்றன. தடுத்து வைக்கப்பட்ட ஐந்து பேரும் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தவத்திரு வேலன் சுவாமிகள் மீது மேற்கொள்ளப்பட்ட உடல்ரீதியான தாக்குதலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் கொடூரமான செயலாகக் கருதுகிறது. ஒரு இந்து மதத்தலைவர் மீது அரச பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த அத்துமீறல், சிறிலங்கா, இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அவமானமாகும். இன்னும் பரந்த அளவில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் குடியியல் சமூகத் தலைவர்களின் கைது மற்றும் தாக்குதல் என்பது ஜனநாயகப் பங்கேற்பின் மீதே தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இது, அரச காணி அபகரிப்புக்கு எதிராக அமைதியான முறையில் போராடுவதற்கான அடிப்படை உரிமை கூட தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதை நிரூபிக்கிறது.
தையிட்டி பௌத்த விகாரை, அரச அனுசரணையுடனான சிங்களமயமாக்கல் மற்றும் கலாச்சார இனப்படுகொலையின் சின்னமாக தமிழர்களால் கருதப்படுகிறது. வடகிழக்கில் தமிழ்நில உரிமையாளர்களின் சம்மதமின்றி மற்றும் சட்ட, நிர்வாக நடைமுறைகளை மீறி கட்டப்பட்டு விரிவாக்கப்பட்டும் இந்தஇடம், குருந்தூர் மலை, குச்சவெளி, கீரிமலை, காங்கேசன்துறை ஆகிய இடங்களில் இருந்த இந்து ஆலயங்களும் தமிழ்பாரம்பரியத் தலங்களும் அழிக்கப்பட்ட அல்லது இடம்பெயர்க்கப்பட்ட ஒரு பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பெப்ரவரி11, 2025 பத்திரிகை அறிக்கையில் சுட்டிக்காட்டியது போல, இந்த நடவடிக்கைகள் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல, மாறாக 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழ் தாயகத்தின் சனத்தொகை, கலாச்சார மற்றும் மத தன்மையை மாற்றுவதற்காகப் பின்பற்றப்படும் (to alter the demography cultural and religious character Of Tamil Homeland) ஒரு திட்டமிட்ட கொள்கையின் கூறுகளாகும்.
சிறிலங்கா இராணுவத்தால் தனிநபர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலங்கள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவது, உள்நாட்டுச் சொத்துரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகிய இரண்டையும் மீறுகிறது. நான்காவது ஜெனிவா உடன்படிக்கையின்படி, பொதுமக்களின் நிலங்களை இராணுவ ரீதியாக ஆக்கிரமிப்பது, தீவிரமான போரினால் கடுமையாகத் தேவைப்படும்போது மட்டுமே அனுமதிக்கப்படுகிறது; ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அத்தகைய நிலைமைகள் நிலவவில்லை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச அறிக்கைகள், இத்தகைய நில அபகரிப்புகளும் மதக் கட்டுமானங்களும் இராணுவமயமாக்கல் மற்றும் அடக்குமுறைப் பாதுகாப்புச் சட்டங்களின் ஆதரவுடன் எவ்வாறு ஒருவித நிர்ப்பந்தக் கருவிகளாகச் செயல்படுகின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ளன.
தையிட்டியில் நடந்த நிகழ்வுகள், சிறிலங்காவில் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துவிட்டது என்ற கூற்றுக்களின் பொய்மையையும் அம்பலப்படுத்துகின்றன. தலைமை மாற்றம் ஏற்பட்டபோதிலும், சிங்கள-பௌத்த மேலாதிக்கமும் கட்டமைப்பு ரீதியான இனவாதமும் ஆழமாக வேரூன்றியுள்ளன. இது, தமிழர்கள் தங்களின் உரிமைகளை அமைதியான முறையில் நிலைநாட்டுவதற்கு எந்தவொரு அர்த்தமுள்ளஅரசியல் வெளியையும் விட்டுவைக்கவில்லை. ஜனநாயகம், மதசுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு இந்தச் சம்பவம் ஏற்படுத்தும் கடுமையான தாக்கங்கள் இருந்தபோதிலும், இன்றுவரை சிறிலங்காவில் உள்ள எந்தவொரு வெளிநாட்டுத் தூதரகம் அல்லது இராஜதந்திரப் பணியகமும் இந்தச் சம்பவத்தை பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை என்பது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவலை தெரிவிக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கு ஒரு முறையான கடிதத்தை அனுப்பியுள்ளதுடன், இந்த விடயத்தை அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர அலுவலகத்திற்கும் தெரிவித்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை பகிரங்கமாகக் கண்டிக்கவும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் நிலங்களை விடுவிக்கக் கோரவும், ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்றத்தின் கருவிகளாக பயன்படுத்தப்படும் மதத் தளங்களை அகற்றுமாறும் சிறிலங்கா அரசை வலியுறுத்தவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறது.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


