கியூபாவுடன் சமரசம் பேசும் டிரம்ப் - மிரட்டலுக்குப் பணிந்ததா கம்யூனிச தேசம்?
அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான நீண்ட காலப் பகைமை ஒரு புதிய திருப்பத்தைச் சந்திக்கவுள்ளது.
கியூபாவுடன் சமரசம் பேசும் டிரம்ப் - மிரட்டலுக்குப் பணிந்ததா கம்யூனிச தேசம்?
அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான நீண்ட காலப் பகைமை ஒரு புதிய திருப்பத்தைச் சந்திக்கவுள்ளது. கியூபாவைத் தொடர்ந்து மிரட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது அந்நாட்டுடன் ஒரு சுமூகமான ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளதாகத் திடீரென அறிவித்துள்ளார்.
தனித்து விடப்பட்ட கியூபா கியூபாவிற்குப் பக்கபலமாக இருந்த வெனிசுலா நாட்டில் சமீபத்தில் அமெரிக்கா நிகழ்த்திய அதிரடி மாற்றங்களும், அந்நாட்டுத் தலைவரின் கைதும் கியூபாவைத் தனித்து விடச் செய்துள்ளன. "இனி உங்களுக்கு உதவ வெனிசுலா இல்லை" என்று வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப், கியூபாவின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் தடையால் இருளில் தேசம் கியூபாவின் பொருளாதாரக் கழுத்தை நெரிக்கும் விதமாக, ஏற்கனவே வெனிசுலாவிலிருந்து வரும் எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது. போதாதக்குறைக்கு, கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் மற்ற நாடுகள் மீதும் வரி விதிக்கப்படும் என்றும், கியூபாவால் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றும் கூறி டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இதன் விளைவாக, கியூபா முழுவதும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் நாடு இருளில் மூழ்குவதும் வாடிக்கையாகிவிட்டது.
பணியுமா கியூபா? அமெரிக்கா தங்கள் நாட்டைப் பொருளாதார ரீதியாக மூச்சுத் திணறச் செய்வதாகக் கியூபா குற்றம் சாட்டினாலும், கள நிலவரம் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்குமா அல்லது எதிர்த்து நிற்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


