2008 சிவராத்திரி தினத்தில் கிளைமோர் தாக்குதல்!
மக்கள் பணியே மகேசன் பணியென வாழ்ந்த மாமனிதர் கி. சிவநேசன்.
2008 மார்ச் 6 சிவராத்திரி தினத்தன்று பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வன்னிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தால் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
மக்கள் பணியே மகேசன் பணியென வாழ்ந்த கி. சிவநேசன்.
யாழ்ப்பாண மண் ஈன்றெடுத்த தன்னலமற்ற அரசியல்வாதிகளில் முக்கியமானவர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள். கரவெட்டியில் பிறந்து, தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் உயர்வுக்காகவும், தமிழ் தேசிய விடுதலைக்காகவும் உழைத்த ஒரு மாமனிதர்.
1957 ஆம் ஆண்டு ஜனவரி 21 இல் கரவெட்டியில் பிறந்த சிவநேசன் அவர்கள், தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி கிழக்கு அரசினர் பாடசாலையிலும், உயர்கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் பயின்றார். சிறு வயது முதலே சமூக அக்கறை கொண்டவராகத் திகழ்ந்தவர்.
பனை, தென்னை அபிவிருத்திச் சபையில் ஆற்றிய பணி: அரசியலுக்கு வருவதற்கு முன்பே, வட பிராந்திய பனை மற்றும் தென்னை அபிவிருத்துக் கூட்டுறவுச் சபைகளின் பொது முகாமையாளராக (1996 - 2004) கடமையாற்றி, பாரம்பரியத் தொழில்களை மீட்டெடுக்க அயராது பாடுபட்டார்.
ஏ9 (யு9) வீதி மூடப்பட்ட காலத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோது, அவர்களுக்குத் துணையாக நின்று பல திட்டங்களை முன்னெடுத்தார்.
2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட அவர், பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தமிழினத்தின் குரலாக ஒலித்தார்.
- சர்வதேச ரீதியில் ஈழத் தமிழர்களின் அவலங்களை எடுத்துக்கூறினார்.
- அஞ்சா நெஞ்சுடன் மக்களின் உரிமைகளுக்காக வாதாடினார்.
- தன்னலமற்ற சேவைக்காக இவருக்குத் தமிழீழத் தேசியத் தலைமையால் 'மாமனிதர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2008 மார்ச் 6 சிவராத்திரி தினத்தன்று பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வன்னிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தால் நடாத்தப்பெற்ற கிளைமோர் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இவருடன் இவரது வாகன ஓட்டுநர் மகேஸ்வரராஜாவும் உயிரிழந்தார்.
கரவெட்டியின் மண்ணுக்குப் பெருமை சேர்த்த இந்த மக்கள் சேவகரின் நினைவுகள் என்றும் எமது நெஞ்சங்களில் வாழும். அவர் காட்டிய நேர்மை மற்றும் சமூகப் பற்று, இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
- விஎஸ் தவபாலன்


