பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞரின் சட்டத்தரணியை தடுத்த பொலிஸ்!
"மற்ற குற்றங்களைப் போலவே இதையும் மறைப்பதே பொலிஸாரின் நோக்கம். அதனால்தான் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணியைக்கூட அனுமதிக்காமல் இடையூறு செய்கிறார்கள்,"
பொலன்னறுவை மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவால் துரத்தப்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு அவரது பெற்றோர் முன்னிலையில் மார்பில் சுடப்பட்ட இளைஞர் ஜி.ஏ.கே. திஷானின் கொலை தொடர்பான நீதவான் விசாரணையில் சாட்சியங்களை பரிசோதிப்பதை பொலிஸ் அதிகாரிகள் தடுத்ததாக பாதிக்கப்பட்டவரின் சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த திங்களன்று அன்று (பெப்ரவரி 17) விசாரணையில் பொலன்னறுவை நீதவான் எராண்டி மிஹிராணி சாட்சியங்களை பரிசோதிக்கத் தொடங்கியபோது, பாதிக்கப்பட்டவரைப் பிரதிநிதித்துவப்படுத்த தனக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி பொலன்னறுவை மாவட்டத்திற்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ஆட்சேபித்ததாக, சிறைக்கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி சேனக பெரேரா கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி மறுக்கப்பட்டதா?
"கொலை செய்யப்பட்ட இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உரிமைகளுக்காக நான் முன்னிலையானேன். ஒரு சட்டத்தரணியாக, அது எனது பொறுப்பு மற்றும் உரிமை. ஆனால் பொலன்னறுவை எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இறந்தவருக்காக முன்னிலையாக எனக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் கூறினார்," என சட்டத்தரணி சேனக பெரேரா கூறினார்.
இருப்பினும், மூத்த காவல் கண்காணிப்பாளரின் ஆட்சேபனையைப் புறக்கணித்து, பாதிக்கப்பட்டவரின் சார்பாக வாதாட நீதிபதி அவருக்கு அனுமதி அளித்ததாக சட்டத்தரணி கூறினார்.
குறித்த கொலை தொடர்பான ஆரம்பக்கட்ட சாட்சி வினவல்களுக்காக 19 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற நீதவான் விசாரணையில் பொலிஸாரால் 8 சாட்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பொலிஸாரின் நடத்தை சந்தேகத்திற்குரியது
"பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகளில் திஷானை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி ஒருவரும் இருக்கின்றார். முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு சாட்சியும் எந்தக் குற்றமும் நிகழாதது போலவே சாட்சியமளித்தனர்," என சட்டத்தரணி சேனக பெரேரா கூறினார், பொலிஸாரின் நடத்தை இந்தக் குற்றத்தை மறைக்க அவர்களுக்கு வலுவான விருப்பம் இருப்பதைக் குறிக்கிறது என அவர் வலியுறுத்தினார்.
"மற்ற குற்றங்களைப் போலவே இதையும் மறைப்பதே பொலிஸாரின் நோக்கம். அதனால்தான் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணியைக்கூட அனுமதிக்காமல் இடையூறு செய்கிறார்கள்," என அவர் கூறினார்.
பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 25 வயது டிஷான், இரத்தக் கசிவு மற்றும் இதயத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினாலேயே உயிரிழந்ததாக, பிரேத பரிசோதனையை மேற்கொண்ட பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி லசந்த எஸ்.கே, த, சில்வா, ஜனவரி 13ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


