பிரான்சில் வேலை மற்றும் விசா: உண்மைகளும் சட்டங்களும்!
"பணம் கொடுத்தால் விசா எடுத்துத் தருகிறேன்" என்று சொல்லும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
பிரான்சில் விசா அல்லது முறையான வேலை அனுமதி இல்லாமல் வேலை செய்வது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை . "வேலை செய்து சம்பளப் பட்டியல் இருந்தால் அது விசாவுக்குச் சமம்" என்று யாராவது சொன்னால், அது முற்றிலும் தவறான தகவல். சம்பளப் பட்டியல் என்பது நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ததற்கான ஆதாரம் மட்டுமே; அது உங்களுக்கான சட்டப்பூர்வ தங்குமிட அனுமதி (Titre de séjour) கிடையாது. உண்மையில், முறையான அனுமதி இல்லாமல் ஒருவரை வேலைக்கு அமர்த்துவது அந்த நிறுவனத்திற்கும் ஆபத்தானது.
பிரான்சில் ஒருவருக்குத் தங்குமிடம் அல்லது விசா வழங்கும் முழு அதிகாரம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள Prefecture அதிகாரிகளுக்கே உள்ளது. தூதரகங்கள் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு விசா வழங்குகின்றன, ஆனால் பிரான்சுக்குள் நுழைந்த பிறகு உங்கள் நிலையைத் தீர்மானிப்பது பிரிபெக்சர் மட்டுமே.
சமீபத்திய சட்ட மாற்றங்கள் (2024 Immigration Law)
சமீபத்தில், அதாவது 2024-ஆம் ஆண்டு ஜனவரியில், பிரான்சில் புதிய குடிவரவுச் சட்டம் (Loi Immigration) அமல்படுத்தப்பட்டது. இதில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
திறன்மிந்த பணியாளர்கள் (Métiers en tension): கட்டுமானப் பணி, உணவகம் போன்ற ஆட்கள் பற்றாக்குறை உள்ள துறைகளில் (Jobs in demand) சில காலம் விசா இல்லாமல் வேலை செய்தவர்கள், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் தங்களை முறைப்படுத்திக் கொள்ள (Regularization) விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடுமையான விதிகள்: அதே சமயம், சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கான விதிகள் முன்னெப்போதையும் விடக் கடுமையாக்கப்பட்டுள்ளன. தவறான ஆலோசனைகளை நம்புபவர்களுக்கான அறிவுரை. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், குறுக்கு வழிகளைத் தேடாமல் சட்ட நிபுணர்களை (Avocat) அல்லது புலம்பெயர்ந்தோருக்காகச் செயல்படும் தன்னார்வ அமைப்புகளை அணுகுவதே சிறந்தது. "பணம் கொடுத்தால் விசா எடுத்துத் தருகிறேன்" என்று சொல்லும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்; அவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்துத் தந்தால், அது உங்கள் எதிர்காலத்தையே பாதிக்கும்.
முக்கிய குறிப்பு: உங்கள் கையில் இருக்கும் சம்பளப் பட்டியல்கள், நீங்கள் பிரான்சில் எத்தனை ஆண்டுகளாகத் தங்கியிருக்கிறீர்கள் என்பதற்கான ஒரு ஆதாரமாக பின்னாளில் 'கருணை அடிப்படையில்' (Admission exceptionnelle au séjour) விசா கோரப் பயன்படலாமே தவிர, அதுவே ஒரு விசா ஆகாது. அகதி அந்தஸ்து என்பது தனியானது .அது அகதிகளுக்கான ஜெனிவா சடடத்தின் அடிப்படையிலானது.அதை இதனுடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்
- சிவா சின்னப்பொடி


