சுயநிர்ணயம், சமஷ்டி குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையில் முக்கிய இணக்கம்!
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களிலும் தனித்தோ அல்லது கட்சி அடிப்படையிலோ செயற்படுவதில்லை என தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு!
இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு கலந்துரையாடல்களிலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களிலும் தனித்தோ அல்லது கட்சி அடிப்படையிலோ செயற்படுவதில்லை என வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பின் கீழ் புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட கலந்துரையாடலிலேயே இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டது.
“தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வை எட்டும் நோக்கில் தமிழ் மக்களின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய சமஷ்டி முறையிலான அரசியலமைப்பொன்றே அவசியமானது” என்ற பொதுவான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறான சமஷ்டி முறையிலான அரசியலமைப்புக்காக தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் சமூக ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கான வரைவு ஒன்றினை தயாரிப்பதற்கு இக்கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அறிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அம்முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளான சிவஞானம் ஸ்ரீதரன், துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ - TELO) அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், அதன் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தமிழ் பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களாக இக்கலந்துரையாடலில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல், ஜனாதிபதி சட்டத்தரணி வி. புவிதரன், பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன், சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா, சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், சட்டத்தரணி ஜி.கே. ரணிதா மற்றும் சட்டத்தரணி எம். ஜூட் த்னேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்குபற்றினர்.
புதிய அரசியலமைப்பினுள் உள்ளடக்கப்பட வேண்டிய சமஷ்டி நிர்வாகத்துக்கான அடிப்படை அம்சங்களினை உள்ளடக்கிய விரிவான அரசியலமைப்பு வரைவு ஒன்றினைத் தயாரிப்பதற்கும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பங்குபற்றிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிப் பிரதிநிதிகளும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேற்குறித்த உடன்பட்ட விடயங்களில் தொடர்ந்து ஒன்றாகச் செயற்படுவது எனவும், இந்த சந்திப்பு இடம்பெற்ற தினத்தில் இருந்து (மார்ச் 02) தமிழரின் இனப்பிரச்சினைக்கான விடயங்கள் தொடர்பாகவும், இலங்கை அரசாங்கத்தினால் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான எந்தவிதமான கலந்துரையாடல்களிலும் தனித்தும், கட்சி அடிப்படையிலும் செயற்படுவதில்லை எனவும் உடன்பாட்டுக்கு வந்ததாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவை மேலும் அறிவித்துள்ளது.
இந்த இணக்கப்பாடுகளுக்கு அமைவாகத் தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான அரசியலமைப்பு தொடர்பான செயற்பாடுகள் பல கட்டங்களூடாக மேலும் முன்னெடுக்கப்படும் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.
- சண் பார்தீபன்


