இரிஸ் டெனா (IRIS DENA) கப்பலிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களை ஒப்படைக்குமாறு ஈரான் அரசாங்கம் கோரிக்கை!
மத்திய கிழக்கு போர் விடயத்தில் நாங்கள் நடுநிலையான அரசு. இந்த யுத்தத்தில் நாங்கள் பங்குபற்றவில்லை.
அமெரிக்காவின் தாக்குதலால் விபத்துக்குள்ளான இரிஸ் டெனா (IRIS DENA) கப்பலிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களை ஒப்படைக்குமாறு ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அந்தச் சடலங்களை அவர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும், விபத்துக்குள்ளான இரிஸ் டெனா கப்பல் தற்போது வரையில் இலங்கை தரைப்பகுதியிலிருந்து 09 கடல் மைல்தொலைவில் இருப்பதாகவும் கப்பலின் எஞ்ஜினில் கோளாறு இருப்பதால் இலங்கை கடற்படையால் அந்தக் கப்பலைப் பொறுப்பேற்று திருகோணமலை துறைமுகத்துக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (10) இடம்பெற்ற அமைச் சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘மத்திய கிழக்கு போர் விடயத்தில் நாங்கள் நடுநிலையான அரசு. இந்த யுத்தத்தில் நாங்கள் பங்குபற்றவில்லை. நடுநிலையான அரசு என்ற அடிப்படையில் சமுத்திர சட்டதிட்டங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறோம். இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 84 சடலங்கள் இலங்கை அரசின் பொறுப்பிலேயே இருக்கிறது. ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அந்த சடலங்களை ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதேபோன்று, மேலும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 பேர் கடற்படையின் பொறுப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நடுநிலை அரசொன்று செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக சட்டங்கள், ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் செயற்பட தயாராக இருக்கிறோம்.


