இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து ஈரானுடன் நடத்தும் போரில் வளைகுடா அரபு நாடுகளுக்கும் பலத்த அடி.
ஈரானுக்கு எதிராக வளைகுடா அரபு நாடுகள் எதிர்வினையாற்றுமா என்ற கேள்வி எல்லாம் எழுந்திருக்கிறது.
இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து ஈரானுடன் நடத்தும் போரில் வளைகுடா அரபு நாடுகளுக்கும் பலத்த அடி.
அமெரிக்காவின் படைத்தளங்களுக்கு இடம்கொடுத்திருக்கும் வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கியிருக்கிறது. அங்கே உள்ள அமெரிக்கத் தளங்களைத் தகர்த்திருக்கிறது. ஈரானுக்கு எதிராக வளைகுடா அரபு நாடுகள் எதிர்வினையாற்றுமா என்ற கேள்வி எல்லாம் எழுந்திருக்கிறது. இந்தநிலையில் கத்தார் நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் மத் பின் ஜசீம் அல்தானி அருமையான கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
‘ஈரானுக்கு எதிராக வளைகுடா அரபு நாடுகள் ஒன்றுகூடி போர் தொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அப்படி வளைகுடா அரபு நாடுகள் ஈரானுக்கு எதிராகப் போரில் குதித்தால், அடுத்தநிமிடமே அமெரிக்கா இந்தப் போரில் இருந்து விலகிக் கொள்ளும். அரபு நாடுகளுக்கு அது ஆயுதம் விற்று லாபம் பார்க்கத் தொடங்கிவிடும்.
ஈரானுக்கும் வளைகுடா அரபு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டால், வளைகுடா பகுதியின் எண்ணெய் வளம், செல்வ வளம் எல்லாம் வற்றத் தொடங்கும். வளைகுடா பகுதி நிலைகுலைந்து தள்ளாடிவிடும். சண்டையிடும் இரு தரப்புமே பலமிழந்து விடும்.
அமெரிக்கா எதிர்பார்ப்பது இதைத்தான்.
அமெரிக்கா இப்போது ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் எபிக் ஃபரி ராணுவ நடவடிக்கையின் நோக்கம், ஈரானின் அணுகுண்டு உருவாக்கும் ஆற்றலைத் தடுத்து நிறுத்துவது அல்ல. மத்தியக்கிழக்கின் அரசியல் வரைபடத்தை மாற்றி அமைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம். அதை நோக்கித்தான் அமெரிக்கா காய் நகர்த்துகிறது.
ஈரானும் வளைகுடா அரபுநாடுகளும் அடித்துக்கொண்டு ஓய்ந்தால் அகண்ட இஸ்ரேலை அமைக்கும் இஸ்ரேலின் முயற்சிக்கு அது உறுதுணையாக இருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது’ இப்படி கூறியிருக்கிறார் கத்தார் முன்னாள் பிரதமர்.
ஒரு பகுதியில் போரைத் திணிக்க வேண்டியது. அந்த பகுதியின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டியது, பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டியது. அதிகாரமற்ற வெற்றிடத்தை ஏற்படுத்த வேண்டியது, பிறகு ஆயுதம் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டியது. இடிந்த கட்டடங்கள், பாலங்களை மீண்டும் கட்டித் தருகிறேன் என்று அந்த நாட்டின் வளத்தை கொள்ளையடிக்க வேண்டியது. இதைத்தான் கடந்த காலத்தில் அமெரிக்கா செய்து வந்திருக்கிறது. இனியும் செய்ய இருக்கிறது.
இதுவரை நடந்த ஈரான், அமெரிக்கப் போரில் கூட அமெரிக்கா இஸ்ரேலைத்தான் காப்பாற்ற முயற்சிக்கிறது. வளைகுடா அரபு நாடுகளை அமெரிக்கா காக்கத் தவறி விட்டது. அரபு நாடுகளை கைவிட்டுவிட்டது என்ற குமுறல் இருக்கிறது. தவிர இந்தப்போரில் பல மர்மங்கள் இருக்கின்றன. அந்த மர்மங்களில் ஒன்று குவைத் வான்பரப்பில் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்.-35 ரக விமானங்கள். குவைத் நாட்டு விமான எதிர்ப்புக்கருவிகள் தவறுதலாக அமெரிக்க விமானங்களைச் சுட்டதாகச் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி அதற்கான கணினியில் புகுந்து யாரோ கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன.
தற்போது ஈராக் வான்பரப்பில் பறந்த, நடுவானில் எரிபொருள் நிரப்பித்தரக்கூடிய கேசி-135 விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது. போர் இப்படி மர்மப் போராக மாறிவரும் வேளையில் அந்த போரில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பதுதான் சரியென்ற முடிவுக்கு வளைகுடா அரபு நாடுகள் வந்திருக்கின்றன.
அதற்காகப் பாராட்டுவோம்.
மோகன ரூபன்


