அடக்குமுறையாளர்கள் எப்போதும் உரிமைக் குரல்களை நசுக்கிவிடுவதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள்.
கலைஞனாக, பாடகனாக இருந்தும் ஒருவனது குரல் புரட்சிக்குரலாக ஒலிக்க முடியும்- ‘பொப் மாலி’

பொப் மாலி’ ஒரு புரட்சியின் குரல்.
எத்தனை அர்த்தங்கள் பொதிந்த, நம் இனத்தின் தற்கால நிலையைப் பிரதிபலிக்கின்ற வாக்கியம். ‘பொப் மாலி’ ஒரு புரட்சியின் குரல். கலைஞனாக, பாடகனாக இருந்தும் ஒருவனது குரல் புரட்சிக்குரலாக ஒலிக்க முடியும் என்பதற்கு ‘பொப் மாலி’ என்ற உலகம் விரும்பும் கலைஞன் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
அடக்குமுறையாளர்கள் எப்போதும் உரிமைக் குரல்களை நசுக்கிவிடுவதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். ஒரு உரிமைக்கான குரல், கூட்டுக் குரலாக ஒலிக்காதவரை, அவை தனித்தனியே அடக்குமுறைக்குள் வலுவிழந்து மாய்ந்து போவனவே!
அடிமையென்று எண்ணம்கொண்டு நாமாக வாழாதவரை, நாம் யார்க்கும் அடிமையில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே எம் வாழ்க்கையில் வெற்றிபெற்று விட்டவர்கள், சாதனை படைத்தவர்கள் மற்றும் சிறப்பானவர்கள் என அவரவர் அடைவுமட்டங்களைத் தனித்தனியே
எண்ணிக்கொண்டாலும், நாம் எல்லோரும் சேர்ந்த கூட்டாக எமக்கான இடத்தை இன்னமும் போய்ச்சேரவில்லை. மற்றும் கூட்டு வெற்றியைத் ‘தேசத்திற்கான வெற்றியாக’ அர்ப்பணித்து ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளும் பக்குவமும் இதுவரை இடம்பெற்றுவிடல்லை. ஆகவே இதற்கான பலாபலன்களையே நாம் இன்றும் அறுவடை செய்துகொண்டிருக்கின்றோம். ஆனால், இந்த நிலைமைகள் ‘மாறவேண்டிய அல்லது மாற்றவேண்டிய’ களயதார்த்தத்தினை நாம் அண்மித்துக் கொண்டிருக்கின்றோம். இதற்காக, அங்கொன்றும், இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்கின்ற…
1. அறிவுசார், சிந்தனை வளங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
2. மனிதவலுக்கள் பெரும் கூட்டு சக்தியாக இணைக்கப்பட வேண்டும்.
3. பொருளாதார கூட்டுப் பலமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.
4. அமைப்புசார் சமூக, அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ‘தமிழ்த்தேசியம்’ எனும் கூட்டுசக்திக்குள் வலுவாக்கப் பெறவேண்டும்.
5. எம் உரிமைபற்றிய நியாயமான நிலைப்பாட்டினை, உலகிற்கும் ஏனைய மாந்தர்களுக்கும் எடுத்துச் சொல்லக்கூடிய ‘ஒருமித்த குரலாக’ நாம் அனைவரும் ஒலிக்கத் தயார்கொள்ளவேண்டும்.
இவயனைத்தும் ஒருசேர நிகழும்போது, ‘2000ம் ஆண்டுகளில்’ எம் வாசல் வந்து கதவுதட்டிய, நாம் எமக்கான உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய மிகப்பெரும் ‘பேரம்பேசும் சக்தி’ ஒன்றை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும்.
இவயனைத்தும் நடந்தேறக்கூடிய சமூகச் சீர்நிலையொன்றைக் கட்டிவளர்க்க நாம் ஒவ்வொருவரும், முதலில் தனித்தனியே மனதளவிலும், இயங்குநிலையிலும் தயாராகிக் கொள்ளவேண்டும்! அதுவே எமக்கான ‘கூட்டுப் பலமொன்றை’ நிச்சயம் கட்டியெழுப்பி, வெற்றியை நோக்கி நகர அத்திவாரமிடும்.
-சாதுரியன்-