தேசியத் தலைவரும் போராளிகளும் போற்றப்படுவது ஏன்? துரோகிகள் தூற்றப்படுவது ஏன்?
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகப்பெரிய அபாயம் வெளிப்புற எதிரி மட்டும் அல்ல. அந்த சமூகத்தின் உள்ளே புகுந்து, மக்களையே மக்களுக்கு எதிராக நிறுத்தும் நிலையே பெரிய அபாயம்.
தேசியத் தலைவரும் போராளிகளும் போற்றப்படுவது ஏன்? துரோகிகள் தூற்றப்படுவது ஏன்? - ஒரு தத்துவார்த்தப் பகுப்பாய்வு.
இதனை நிதானம் கொண்டு வாசித்து, இவ்வுண்மைகளை உணர்ந்து கொள்க!
"போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், விடுதலைப் புலிகளை ஏன் இன்னும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றார்கள்? வருமானம் கிடைப்பதனாலேயே அவ்வாறு கொண்டாடுகின்றார்கள்," என்று ஒட்டுக் குழுவினரை ஏன் மக்கள் கொண்டாடுவதில்லை என்ற ஆதங்கத்துடன் 'புதியவன் வள்ளி' (Puthiyavan Valli) என்பவர் உரைத்திருந்தார். இவர் முன்னர் ஓர் ஒட்டுக்குழுவில் இயங்கியவர் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஒட்டுக்குழுக்களின் ஆதரவாளர்களும் எழுப்பி வருகின்றனர். இவர்களுக்குச் சவுக்கடியாகத் தக்கதொரு மறுமொழி வழங்க விரும்புகின்றேன்.
இந்திய விடுதலைக்காகப் போராடிய வீரர்களை இந்திய மக்கள் இன்றளவும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். நாட்டின் விடுதலைக்காகப் போராடி இன்னுயிர் ஈந்தவர்களை மக்கள் பன்னெடுங்காலமாக நினைவுகூர்ந்து போற்றுவது இயல்பான ஒன்றே. தமது விடுதலைக்காகப் போராடியவர்களை அம்மக்கள் கொண்டாடுவதில் எப்பிழையும் இல்லை; அது அவர்களின் உரிமையாகும்.
மிலன் குந்தேரா ஒரு செக்-பிரெஞ்சு நாவலாசிரியர், கட்டுரையாளர், நாடகாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். "அதிகாரத்திற்கு எதிரான மனிதனின் போராட்டம் என்பது, மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே". மேலும், "நினைவுகளை அழிப்பது அரச பயங்கரவாதத்தின் முக்கிய ஆயுதம்; அதனைத் தக்கவைப்பது மக்களின் ஜனநாயக ஆயுதம்" என்று அவர் குறிப்பிடுகின்றார்.
இதன் அடிப்படைப் பொருள் என்னவென்றால், ஒரு அரசு அல்லது ஆதிக்க சக்தி மக்களை வெல்ல விரும்பினால், முதலில் அவர்களின் நினைவுகளைத் தாக்கும். அதாவது, அவர்கள் யார், அவர்கள் என்ன அனுபவித்தார்கள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்ன, அவர்கள் இழந்தவர்கள் யார், அவர்களின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவை என்ன என்பவற்றை அழிக்க முயலும். அரச பயங்கரவாதத்தின் ஒரு முக்கிய ஆயுதம் வெறும் துப்பாக்கியோ சிறையோ அல்ல; அது மறதியாகும்.
அதாவது அழிவுகளை “நடக்கவே இல்லை” என்று மறுப்பது, கொல்லப்பட்டவர்களின் பெயர்களை அழிப்பது, வரலாற்றை மாற்றி எழுதுவது, மக்களின் துயர நினைவுகளை “பிரச்சாரம்” என்று குற்றம்சாட்டுவது, மொழி, கல்லறை, நினைவிடம், பாடல், இலக்கியம், ஆவணம் ஆகியவற்றை அழிப்பது. அதற்கு எதிராக மக்கள் செய்யும் செயல் தான் நினைவுகளைத் தக்கவைப்பது. நினைவு என்பது பழிவாங்கும் ஆயுதம் அல்ல, உண்மையை அழிக்க விடாத ஒரு ஒழுக்க ஆயுதம்.
ஒரு மக்கள் தங்கள் நினைவுகளை இழந்தால், அவர்கள் தங்கள் உரிமைக் கோரிக்கையின் அடித்தளத்தையே இழக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நினைவுகளை காக்கும்போது, அதிகாரம் எழுதிய பொய்யான வரலாற்றுக்கு எதிராக மக்கள் தங்கள் உண்மையான வரலாற்றை நிறுத்துகின்றார்கள். ஒரு போர் முடிவடைந்ததும், வெற்றி பெற்ற அரசு தனது ஆதிக்க வரலாற்றை மட்டுமே திணிக்க முயலும். இதற்கு எதிராக, தோற்கடிக்கப்பட்ட தரப்பு தமக்காகத் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்வது என்பது அரசறிவியலில் 'நினைவக அரசியல்' எனப்படும். 17 வருடங்கள் அல்ல, 100 வருடங்கள் ஆனாலும் நீதியும் அரசியல் தீர்வும் கிடைக்காத வரை அந்த நினைவுகள் உயிர்ப்போடுதான் இருக்கும். விடுதலைப் பு*களை மக்கள் போற்றுவது என்பது வெறும் கடந்த கால ஏக்கம் அல்ல; அது இன்றும் தொடரும் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனைக்கு எதிரான 'குறியீட்டு எதிர்ப்பு' ஆகும். தமக்காக இறுதிவரை எந்த ஒரு சமரசமுமின்றிப் போராடி வீழ்ந்தவர்களைக் கொண்டாடுவதே மானுட அறம்.
உண்மையில் அரசு என்பது வெறும் அரசாங்கம் மட்டுமல்ல; அது ஒரு வன்முறைக் கட்டமைப்பு. அரசோடு சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்கள், அந்த அரச பயங்கரவாதக் கட்டமைப்பின் ஒரு சிறு பற்கச்சக்கரமாகவே செயல்பட்டனர். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக அல்லாமல், சிங்கள அரசின் தேவைகளுக்காகவே அவர்கள் இயங்கினர். மக்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வைக்கூட அந்த அரசுகளிடம் இருந்து அவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. எந்தவொரு அரசியல் திட்டமும் இன்றி, வெறும் 'அடியாட் படைகளாக' வாழ்ந்து மடிந்தவர்களை வரலாறு ஒருபோதும் விடுதலைப் போராளிகளாக அங்கீகரிக்காது.
இந்த தமிழரின் அரசியல் உரிமையையும் உணர்வையும் வெறும் காசுக்கான வியாபாரம் என்று சுருக்குவது, மக்களின் வரலாற்று நினைவுகளை அழிக்கும் பேரினவாத அரசின் மறைமுக நிகழ்ச்சி நிரலாகும். எந்தவொரு சமூகத்திலும் சில சுயநலவாதிகள் இருக்கலாம், அதற்காக ஒட்டுமொத்தத்தில் 'வியாபாரம்' என்று முத்திரை குத்துவது, சிங்கள ஆதிக்கவாத மனோபாவத்தின் வெளிப்பாடாகும்.
பு*களை மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்குக் காரணம், அவர்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை எவரிடமும் அடகு வைக்காமல் அதற்காகத் தம்மையே முழுமையாக அழித்துக்கொண்டார்கள் என்பதனாலேயே ஆகும். மாற்று ஆயுதக் குழுக்களை மக்கள் நிராகரிப்பதற்குக் காரணம், அவர்கள் ஒடுக்குபவனுடன் கைகோர்த்துச் சொந்த மக்களின் விடுதலையைக் காட்டிக்கொடுத்தார்கள் என்பதனால்.
ஒரு சமூகம் யாரை நினைவுகூர வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது வெறும் உணர்ச்சிகள் அல்ல; அது ஆழமான அரசியல் மற்றும் தத்துவார்த்த அடிப்படைகளைக் கொண்டது. எந்தவொரு அரசியல் அல்லது ஆயுத அமைப்புக்கும் உயிர் கொடுப்பது மக்களால் வழங்கப்படும் 'அரசியல் அங்கீகாரம்' ஆகும். விடுதலைப் பு*கள் இறுதிவரை சிங்களப் பேரினவாத அரசின் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறையை எதிர்த்து, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக சமரசம் இன்றிப் போராடினர். அதனால் மக்கள் அவர்களைத் தங்களின் 'தற்காப்புத் தேசியத்தின்' குறியீடாகப் பார்க்கின்றனர். ஆனால், மற்றைய குழுக்கள் தமது சுயநலத்துக்காகவும், உயிர் பிழைப்பதற்காகவும் ஒடுக்குபவனான சிங்கள அரசிடமே சரணடைந்து, அவர்களின் ஒட்டுக்குழுக்களாகவும் மாறினர்.
தத்துவவியலாளர் பிரான்ஸ் ஃபனோன் (Frantz Fanon) ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உருவாகும் 'கூலிப்படைகள்' பற்றி குறிப்பிடும்போது, "ஒடுக்குபவனின் ஆயுதமாக மாறி, சொந்த மக்களையே வேட்டையாடுபவர்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு வீசப்படுவார்கள்" என்கிறார். தம் சொந்த மக்களையே கொன்று, காட்டிக்கொடுத்து, கடத்தி, சித்திரவதை செய்து, சிங்கள இராணுவத்தின் அடியாள்களாகச் செயல்பட்டவர்களை மக்கள் எப்படிக் கொண்டாடுவார்கள்? துரோகத்தை நிராகரிப்பது ஒரு சமூகத்தின் அரசியல் முதிர்ச்சியே அன்றி, அது குற்றமல்ல.
பிரான்ஸ் ஃபனோன் ஒரு தலைசிறந்த அரசியல் தத்துவவியலாளர். அவர் கூலிப்படையின் மூன்று வடிவங்களை விவரிக்கின்றார். அவை: ஆயுதக் கூலிப்படை, அரசியல் கூலிப்படை, சிந்தனைக் கூலிப்படை என்பனவாகும். இம்மூன்றுக்கும் முன்னுதாரணமானவர்கள் டக்ளஸ் தேவானந்தாவைப் போன்ற ஒட்டுக்குழுவினர். இதில் சிந்தனைக் கூலிப்படைகளைப் பற்றித் தத்துவவியலாளர் பிரான்ஸ் ஃபனோன் அவர்கள் விவரிப்பதனைப் பாருங்கள்.
இவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை, ஆனால் ஒடுக்குபவனின் சித்தாந்தத்தை நியாயப்படுத்தித் திரிக்கும் சிந்தனைக் கூலிப்படைகள், ஒரு சமூகத்தின் ஆன்மாவையே சிதைக்கக் கூடியவர்கள். “உங்கள் போராட்டம் பயனற்றது”, “உங்கள் வரலாறு தோல்வி”, “உங்கள் எதிர்ப்பு அர்த்தமற்றது”, “ஆட்சியாளருடன் ஒத்துழைப்பதே அறிவு” என்று மக்களின் மனதில் தோல்வி உணர்வை விதைப்பார்கள்.
பல தசாப்தங்களுக்கு முன்னரே ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலைத் துல்லியமாக வாசித்தவர் தத்துவவியலாளர் பிரான்ஸ் ஃபனோன். அன்று அவர் உதிர்த்த தீர்க்கதரிசன வரிகள், இன்று சிங்கள ஆதிக்கத்திற்குச் சாமரம் வீசும் 'சிந்தனைக் கூலிப்படைகளுக்கு' அச்சுப்பிசகாமல் பொருந்திப் போவது வரலாற்று விந்தையாகும்.
மாற்றுக்கருத்து என்ற போர்வையில் துரோகம்.
ஆரம்பத்தில் இயக்கங்களுக்கு இடையிலான அரசியல் முரண்பாடுகளாக ஆரம்பித்தவை, பின்னர் 'மாற்றுக்கருத்து' என்ற போர்வையில் ஒடுக்குபவனிடமே தஞ்சம் புகும் நிலைக்குச் சென்றன. ஒருவன் தனது சொந்த இனத்தின் விடுதலைப் போராட்ட அமைப்பை விமர்சிப்பது என்பது ஜனநாயக உரிமை; ஆனால், அந்த விமர்சனத்தின் பெயரால், தனது இனத்தை அழிக்கும் எதிரியின் இராணுவக் கவச வாகனங்களில் ஏறிச்சென்று, சொந்த இனத்து இளைஞர்களைக் காட்டிக்கொடுப்பது என்பது 'மாற்றுக்கருத்து' அல்ல, அது அப்பட்டமான கூலிப்படைத்தனம்.
சிங்கள அரசுக்கு இந்த ஒட்டுக்குழுக்கள் ஏன் தேவைப்பட்டார்கள் என்பதை அரசறிவியலில் 'பிரித்தாளும் சூழ்ச்சி' மற்றும் 'எதிர்-கிளர்ச்சி தந்திரோபாயம்' ஊடாகப் புரிந்துகொள்ளலாம். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒரு 'தேசிய விடுதலைப் போராட்டம்' என உலகம் அங்கீகரிப்பதைத் தடுக்க, சிங்கள அரசுக்கு அது ஒரு"தமிழர்களுக்கு இடையிலான உள்மோதல்" எனக் காட்ட வேண்டிய தேவையும் இருந்தது.
இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம். ஈழப் போராட்ட வரலாற்றில், அரச ஒடுக்குமுறையின் மிகக் கொடூரமான மற்றும் தந்திரமான பரிணாமங்களில் ஒன்று இந்த ‘ஒட்டுக்குழுக்களின்’ பயன்பாடு ஆகும். அரசு ஏன் இந்த "அழுக்கான வேலைகளை" (Dirty War Tactics) நேரடியாகச் செய்யாமல், ஒட்டுக்குழுக்களிடம் குத்தகைக்கு விட்டது என்பதை அரசறிவியல், சர்வதேச சட்டம் மற்றும் உளவியல் யுத்தக் கோட்பாடுகளின் ஊடாகப் பின்வருமாறு ஆழமாகப் பகுப்பாய்வு செய்யலாம்.
ஜெனிவா ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின்படி, சீருடை அணிந்த ஒரு அரச இராணுவச் சிப்பாய் ஒரு பொதுமகனைக் கடத்தினாலோ, சித்திரவதை செய்தாலோ அல்லது படுகொலை செய்தாலோ, அதற்கான நேரடிப் பொறுப்பை அரசும், அதன் இராணுவத் தளபதிகளுமே ஏற்க வேண்டும். இது சர்வதேசப் போர்க்குற்ற நீதிமன்றம் வரை அவர்களை இழுத்துச் செல்லும்.
இதிலிருந்து தப்பிக்கவும் அரசு ஒட்டுக்குழுக்களைப் பயன்படுத்திக் கொண்டன. சீருடை அணியாத, ஆனால் அரசின் புலனாய்வுத்துறையால் ஆயுதம் வழங்கப்பட்ட நபர்கள் 'வெள்ளை வான்களில்' வந்து கடத்தல்களையும், படுகொலைகளையும் செய்தனர். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அரசிடம் கேள்வி எழுப்பியபோது, "நாங்கள் செய்யவில்லை, இது ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களுக்கு இடையிலான உள்மோதல்" என்று இலங்கை அரசு மிக எளிதாகக் கைகழுவிக்கொண்டது. இதன் மூலம் அரசின் உயர்மட்டத் தலைவர்கள் போர்க்குற்றப் பழியிலிருந்து தங்களைக் காத்துக்கொண்டனர்.
மாமனிதர் குமார் பொன்னம்பலம், ஊடகவியலாளர் தராக்கி சிவராம், மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் போன்ற முக்கிய அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களின் படுகொலைகள் 'அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால்' செய்யப்பட்டன. இவை அனைத்தின் பின்னணியிலும் அரசின் புலனாய்வுத்துறை இருந்தாலும், களத்தில் நின்று அடித்துச் சுட்டவர்கள் இந்த ஒட்டுக்குழுக்களே.
இலங்கை இராணுவத்திற்கு ஈழத்தின் புவியியல், மக்கள் கட்டமைப்பு, மற்றும் தமிழ் மொழி ஆகியவை ஒரு பெரும் தடையாக இருந்தன. இதனால் தமிழர்களை வேட்டையாடத் தமிழர்களையே அரசு பயன்படுத்தியது. ஒரு விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய பலம் மக்களின் 'கூட்டு ஒருமைப்பாடு' ஆகும். ஒட்டுக்குழுக்களின் உருவாக்கம் தமிழர்களின் அந்த ஒருமைப்பாட்டை உடைக்கும் ஒரு உளவியல் யுத்தமாகப் பயன்படுத்தப்பட்டது.
இந்த ஒட்டுக்குழுக்களை அரசியல் கட்சிகளாகவோ அல்லது மாற்றுக்கருத்தாளர்களாகவோ வரலாறு ஒருபோதும் அங்கீகரிக்காது. ஏனெனில், அவர்களின் கைகளில் படிந்திருப்பது சிங்கள அரசால் சுடப்பட்ட தோட்டாக்கள் அல்ல; மாறாக, சிங்கள அரசின் கட்டளைப்படி அவர்களால் சுடப்பட்ட சொந்தத் தமிழ் மக்களின் இரத்தமாகும். ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில், ஒடுக்குபவனின் தந்திரோபாய வலையில் சிக்கித் தங்களையே அழித்துக்கொண்ட மிகக் கொடூரமான வரலாற்றுப் பாத்திரங்களே இவர்கள்.
ஒரு சமூகத்தின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றாலோ தோற்றாலோ, காலம் கடந்தபின் மக்கள் யாரை நினைவில் வைத்துக் கொள்வார்கள்? துன்பத்தில் மக்களுடன் நின்றவர்களையா, அல்லது துன்பத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தின் பக்கம் நின்றவர்களையா? ஃபனோனின் பதில் தெளிவானது: மக்களைக் காட்டிக்கொடுத்தவர்கள் ஒருகாலத்தில் அதிகாரம் பெற்றிருந்தாலும், வரலாற்றின் நீதிமன்றத்தில் அவர்கள் மரியாதையுடன் நினைவுகூரப்பட மாட்டார்கள். அவர்கள் பெயர்கள் அதிகாரத்தின் ஆவணங்களில் இருக்கலாம்; ஆனால் மக்களின் நினைவில் அவர்கள் துரோகத்தின் சின்னங்களாகவே நிற்பார்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகப்பெரிய அபாயம் வெளிப்புற எதிரி மட்டும் அல்ல. அந்த எதிரியின் மொழி, தர்க்கம், பயம், ஆசை, அதிகார வேட்கை ஆகியவை சமூகத்தின் உள்ளே புகுந்து, மக்களையே மக்களுக்கு எதிராக நிறுத்தும் நிலையே பெரிய அபாயம்.
மட்டு - எஸ்.குமரன்


