ஹார்முஸ் நீரிணை அருகே மர்மமான முறையில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க உலங்கு வானூர்தி!
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!
மத்திய கிழக்குப் போர் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை அருகே அமெரிக்க ராணுவத்தின் 'அப்பாச்சி' ரகத் தாக்குதல் உலங்கு வானூர்தி (Helicoptère) ஒன்று மர்மமான முறையில் விழுந்து நொறுங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான பின்னணி இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை. எனினும், இதில் பயணித்த விமானிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் நலமாக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் கூடைப்பந்துப் போட்டியைக் கண்டுகளித்த பிறகு பேசிய அவர், இந்த விபத்து குறித்த பதற்றத்தைத் தணிக்கும் விதமாகப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், பல மாதங்களாக நீடிக்கும் இந்த மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர, ஈரானுடன் ஒரு "மிகச் சிறந்த ஒப்பந்தத்தை" எட்டும் இறுதிச் சுற்றில் அமெரிக்கா இருப்பதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்ற அவரது அதீத நம்பிக்கை, உலக நாடுகளுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
அதேசமயம், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வெளியுறவுக் கொள்கைகளில் லேசான விரிசல் எட்டிப்பார்ப்பதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். 'ஃபாக்ஸ் நியூஸ்' தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பல பொதுவான நலன்கள் இருந்தாலும், இரு நாடுகளின் இலக்குகளும் மாறுபடும் சில சூழ்நிலைகளும் உள்ளன என்று வெளிப்படையாகக் கூறினார். ஈரானிடம் அணுவாயுதம் இல்லை என்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான நோக்கம் என்றும், இதற்கான நீண்டகால ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நலனுக்குச் சிறந்தது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். இந்த முடிவு இஸ்ரேலுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, அமெரிக்காவின் பாதுகாப்பு நலனே தங்களுக்கு முக்கியம் என்பதை அவரது வார்த்தைகள் ஆணித்தரமாக உணர்த்துகின்றன.
இதற்கிடையே, இஸ்ரேலியக் குண்டுவீச்சுகளின் அச்சம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி (Imam Khomeini) விமான நிலையம், மீண்டும் தனது வழக்கமான சேவைகளைத் தொடங்கியுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் மீண்டும் சீரடைந்துள்ளதாகவும், அனைத்துப் பயணிகள் சேவைகளும் தடையின்றிப் பாதுகாப்பாக நடைபெறுவதாகவும் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவத் சலேஹி ஆர்டிமானி உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
- சிவா சின்னப்பொடி


