சிறுமி லிஹன்னாவின் மரணத்தால் கொந்தளிக்கும் பிரான்ஸ்; வீதிக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!
"விழித்தெழு நீதியே... டார்மனான் பதவி விலகு!"
"விழித்தெழு நீதியே... டார்மனான் பதவி விலகு!": சிறுமி லிஹன்னாவின் மரணத்தால் கொந்தளிக்கும் பிரான்ஸ்; வீதிக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!
பதினோரு வயதுச் சிறுமி லிஹன்னாவின் கொடூர மரணம், பிரான்ஸ் மக்களின் நெஞ்சங்களில் ஆறாத ரணத்தையும், ஆளும் அரசின் மீதான மாபெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைத் தப்பவிடும் நீதித்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து, "விழித்தெழு நீதியே!", "டார்மனான் பதவி விலகு!" போன்ற முழக்கங்களுடன் நேற்று திங்களன்று (ஜூன் ???? பிரான்சின் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் திரண்டெழுந்தனர்.
"இனி ஒருபோதும் இது நடக்கக் கூடாது", "எங்கள் குழந்தைகளுக்கான நீதியைத் திருப்பித் தாருங்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, பிரான்ஸ் முழுவதும் சுமார் 160-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள நீதிமன்றங்கள் முன்பாகப் பொதுமக்கள் ஒன்றுகூடினர். 'நூதூத்' (NousToutes), 'பொண்டாசியோன் டே ஃபாம்' (Fondation des femmes) உள்ளிட்ட பல்வேறு பெண்ணிய மற்றும் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்புகள் முன்னெடுத்த இந்த அறப்போராட்டத்தில், சிறுமியின் மரணத்திற்குக் காரணமான நீதித்துறையின் கட்டமைப்புச் சீர்கேடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
தலைநகர் பாரிஸில், நீதித்துறை அமைச்சகம் அமைந்துள்ள 'பிளேஸ் வண்டோம்' (Place Vendôme) பகுதியில் போராட்டம் நடத்தக் காவல்துறை ஆரம்பத்தில் தடை விதித்தது. "பொது அமைதிக்குக் குந்தகம்" ஏற்படும் என அதற்குக் காரணம் கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணிய அமைப்பின் தலைவர் ஆன்-செசில் மெய்ல்ஃபெர்ட் (Anne-Cécile Mailfert), "இவர்கள் எதற்குப் பயப்படுகிறார்கள்? பெண்களும் குழந்தைகளும் காட்டும் நியாயமான கோபத்திற்கா?" என ஆவேசமாகக் கேள்வியெழுப்பினார்.
ஆயினும் தடையை மீறி அமைச்சகத்தின் ஜன்னல்களுக்குக் கீழே திரண்ட மக்கள், நீதித்துறை அமைச்சரான ஜெரால்டு டார்மனான் (Gérald Darmanin) பதவி விலகக் கோரி முழக்கமிட்டனர். பிரபல நடிகைகளான ஜூடித் கோட்ரெஷ் (Judith Godrèche), அன்னா மௌக்லாலிஸ் (Anna Mouglalis) உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் இந்த எழுச்சிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
"குற்றவாளிக்குத் தரப்படும் முன்னுரிமை குழந்தைகளுக்கு இல்லை" லிஹன்னாவின் வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ள ஏஜென் (Agen) நகரிலும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஆஷ் (Auch) நகர நீதிமன்றத்தின் முன்பாகவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். "பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குரல்களை விட, குற்றவாளியின் உரிமைகளுக்கே இங்குள்ள நீதித்துறை அதிக முக்கியத்துவம் அளிக்கிறது" என அங்குள்ள மக்கள் வேதனை தெரிவித்தனர்.
லியோன் (Lyon) நகரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 68 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் ஒருவர் கூறுகையில், "ஒரு பாட்டியாக நான் இங்கு வந்துள்ளேன். இந்த நிலைமை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாதது. பிரான்சின் நீதித்துறையில் உள்ள மாபெரும் ஓட்டைகளைப் பார்க்கும்போது, என் பேரக்குழந்தைகளை நினைத்தே எனக்குப் பெரும் அச்சமாக இருக்கிறது" எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.
"குழந்தைகள் உதவி கேட்டு அலறும்போது, நாம் காட்டும் ஒவ்வொரு மவுனமும் அவர்களுக்கு இழைக்கப்படும் இன்னொரு வன்கொடுமையே" எனப் போராட்டக்களத்தில் ஒலித்த குரல்கள் அரசின் மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்திருந்தன.
தொடர் குற்றவாளிகளால் நமது குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதைத் தடுக்க, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு இதுவரை விவாதிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் முழுமையான சட்டத்தை' உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே வீதிக்கு வந்த மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும் .
- சிவா சின்னப்பொடி


