பிரெஞ்சு சமூகத்திடம் ஈழத்தமிழர் கற்க வேண்டிய சமூகவியல் பாடங்கள்!
தமிழர்கள், தாயகப் பிரச்சினைகளுக்காக வீதிக்கு வருவதோடு சுருக்கிக்கொள்ளாமல், தாங்கள் வாழும் நாட்டின் தொழிலாளர் உரிமைகள், இனவாதத்திற்கு எதிரான போராட்டங்கள், சுற்றுச் சூழல் கோரிக்கைகள் என உள்ளூர் பொதுக்குடிமைப் பிரச்சினைகளிலும் (Enjeux civiques) தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.
பிரெஞ்சு சமூகத்திடம் ஈழத்தமிழர் கற்க வேண்டிய சமூகவியல் பாடங்கள்!
புலம்பெயர்வு என்பது வெறும் நிலம் மாறுவதல்ல; அது இருத்தலியல் (Existentiel) சார்ந்த ஒரு பெரும் பாய்ச்சல். போரினாலும் இழப்புகளாலும் உந்தப்பட்டு ஐரோப்பிய நிலங்களில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களின் முதல் தலைமுறை, 'உயிர்வாழ்தல்' (Survie) மற்றும் 'பொருளாதாரப் பாதுகாப்பு' எனும் அடிப்படைத் தேவைகளை நோக்கியே ஓட வேண்டியிருந்தது. ஆனால், அடுத்தடுத்த தளங்களுக்கு ஒரு சமூகம் நகர வேண்டும் என்றால், அது தான் வாழும் பெருஞ்சமூகத்தின் தத்துவார்த்த மற்றும் பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்க வேண்டும்.
அந்த வகையில், பிரெஞ்சு சமூகத்திடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நான்கு முக்கியப் பண்புகளின் ஆழமான சமூகவியல் மற்றும் தத்துவப் பரிமாணங்கள் இங்கே விரிகின்றன: உழைப்பிற்கும் வாழ்விற்கும் இடையிலான எல்லைக்கோடு: (L'équilibre entre vie professionnelle et vie privée) முதலாளித்துவ அமைப்பு மனிதனை ஒரு 'உற்பத்திக் கருவியாக' (Moyens de production) மட்டுமே சுருக்கிவிடத் துடிக்கிறது. உனது நேரம் என்பது பணம், உனது ஓய்வு என்பது அடுத்த நாள் உழைப்பதற்கான உடலைத் தயார்படுத்தும் சடங்கு என்று அது போதிக்கிறது. ஆனால், பிரெஞ்சு தத்துவம் இந்த நுகர்வுவாதத்தை வன்மையாக மறுக்கிறது.
ஒரு பிரெஞ்சு குடிமகனுக்கு அவனது 'அடையாளம்' என்பது அவனது வேலையில் இல்லை; அவனது இரசனையில், அவன் படிக்கும் புத்தகத்தில், அவன் அருந்தும் கோப்பியில், குடும்பத்தோடு அவன் செலவிடும் மாலையில் இருக்கிறது. அவர்களுக்கு "ஓய்வு என்பது உழைப்பின் மிச்சமல்ல; அது வாழ்வின் உரிமை" (Le droit à la déconnexion). புலம்பெயர் தமிழர்களிடம் காணப்படும் மாபெரும் உளவியல் சிக்கல் 'உழைப்பை மட்டுமே அறமாகக் கருதும்' மனநிலை. வறுமையிலிருந்து மீள வேண்டும் என்ற பதற்றமும், தாயகத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் நம்மை முடிவற்ற உழைப்பு எந்திரங்களாக மாற்றிவிட்டன. வாழ்வின் அழகிய தருணங்களை நுகரத் தவறி, மரணத்தின் விளிம்பில் நின்று சேமிப்புகளைத் திரும்பிப் பார்க்கும் அவலத்தை நாம் கடக்க வேண்டும். "நாம் வேலை செய்வதற்காக வாழவில்லை; வாழ்வதற்காகவே வேலை செய்கிறோம்" என்ற மார்க்சியத்தின் அடிப்படை முழக்கத்தை பிரெஞ்சு மக்களின் அன்றாட வாழ்வில் நாம் கற்க வேண்டும்.
அதிகாரத்தை உரித்துப்பார்க்கும் தர்க்கம்: (L'esprit critique et les débats ouverts) "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்" (Je pense, donc je suis) என்ற ரெனே டெஸ்கார்த்தின் (René Descartes) புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவத்தில்தான் நவீன உலகின் பகுத்தறிவு பிறந்தது. எந்தவொரு கருத்தையும், அது கடவுளாக இருந்தாலும், அரசாக இருந்தாலும், குடும்பப் பெரியவர்களாக இருந்தாலும், அதை அப்படியே கண்மூடித்தனமாக ஏற்காமல், அதன் வேர்களைக் கேள்வி கேட்பது பிரெஞ்சு சமூகத்தின் மரபு.
நமது தமிழ் சமூகக் கட்டமைப்பில் 'கேள்வி கேட்பது' என்பது பெரும்பாலும் 'அவமரியாதையாகவே' பார்க்கப்படுகிறது. கீழ்ப்படிதல் (Obéissance) ஒரு உயர்ந்த பண்பாகக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் பிரெஞ்சு சமூகம் தர்க்கத்தையும் (Logique) விவாதத்தையும் (Débat) அறிவின் திறவுகோலாகப் பார்க்கிறது. ஒரு தேநீர் விடுதியில் அமர்ந்து இரண்டு பிரெஞ்சுக்காரர்கள் அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து மணிக்கணக்கில் விவாதிப்பார்கள். கருத்து வேறுபாடுகளைத் தனிப்பட்ட பகையாக மாற்றாமல், சிந்தனைகளின் மோதலாகப் பார்க்கும் இந்த 'விமர்சனச் சிந்தனை' (L'esprit critique) புலம்பெயர் சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கு மிக மிக அவசியம். இதுவே, போலியான பிம்பங்களை உடைத்து உண்மையான அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும்.
உறைந்த காலமும் கூட்டு நினைவுகளும்: (La préservation de l'histoire et de la culture) கட்டிடங்கள் என்பவை வெறும் செங்கற்களும் காரைகளும் அல்ல; அவை 'உறைந்துபோன காலம்'. ஒரு சமூகம் தனது கடந்த காலத்தை எப்படிப் பேணுகிறது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. பிரெஞ்சு தத்துவவியலாளர் மாரிஸ் ஹால்பவாக்ஸ் (Maurice Halbwachs) முன்வைத்த 'கூட்டு நினைவு' (La mémoire collective) என்ற கோட்பாட்டின் நேரடிச் சாட்சி பிரான்ஸ்.
பிரெஞ்சு மக்கள் தங்கள் வரலாற்றை வாய்மொழி மரபாக மட்டும் விட்டுவைக்கவில்லை. அதைக் கல்லிலும், வெண்கலத்திலும், அருங்காட்சியகங்களிலும் நிறுவனப்படுத்தி (Institutionnaliser) விட்டார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய வீதியின் கற்கள் கூட சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன. நிலத்தை இழந்து, அடையாளங்கள் அழிக்கப்பட்டு, மாபெரும் இனப்படுகொலையின் வடுக்களைச் சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் சமூகத்திற்கு இந்தப் பண்பு ஆகப்பெரிய பாடமாகும். நமது வலிகளையும், வரலாற்றையும், வீரத்தையும் வெறும் கண்ணீரோடும் பேச்சுக்களோடும் சுருக்கிவிடாமல், அவற்றை எழுத்துக்களாக, ஆவணப்படங்களாக, கலையாக, நினைவிடங்களாக மாற்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் (Transmission) வரலாற்றுப் பொறுப்பை இவர்களது அழகியலில் இருந்து நாம் ஆழமாகக் கற்க வேண்டும்.
வீதி என்னும் அரசியல் அரங்கு: சமூக ஒப்பந்தமும் கூட்டு அறமும் (Le sens civique et la solidarité) ஜோன் ஜாக் ரூஸோ (Jean-Jacques Rousseau) எழுதிய 'சமூக ஒப்பந்தம்' (Du contrat social) என்ற நூலின் உயிர்நாடி பிரெஞ்சு மக்களின் இரத்தத்தில் ஓடுகிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு; அது தனது கடமையிலிருந்து தவறும்போது, அதை வீதிக்கு வந்து தண்டிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்பது பிரெஞ்சு புரட்சி கற்றுத்தந்த பாடம்.
இங்கு போராட்டம் (Manifestation) என்பது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையல்ல; அது ஜனநாயகத்தின் திருவிழா. ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத்திற்கோ, மாணவர்களுக்கோ ஒரு அநீதி இழைக்கப்பட்டால், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத மற்ற சமூகத்தினரும் வீதிக்கு வந்து தோள் கொடுப்பார்கள். இதைத்தான் அவர்கள் தோழமை அல்லது சகோதரத்துவம் (Fraternité) என்கிறார்கள்.
தமிழர்கள், தாயகப் பிரச்சினைகளுக்காக வீதிக்கு வருவதோடு சுருக்கிக்கொள்ளாமல், தாங்கள் வாழும் நாட்டின் தொழிலாளர் உரிமைகள், இனவாதத்திற்கு எதிரான போராட்டங்கள், சுற்றுச் சூழல் கோரிக்கைகள் என உள்ளூர் பொதுக்குடிமைப் பிரச்சினைகளிலும் (Enjeux civiques) தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கியிருக்கும் மனநிலையை உடைத்து, 'சக மனிதனின் உரிமை மறுக்கப்படும்போது, என் சுதந்திரமும் பறிக்கப்படுகிறது' என்ற உயர்ந்த சமூகப் பொறுப்புணர்வைக் கற்றுக்கொள்வதே மெய்யான சமூக ஒருங்கிணைப்பாகும்.
- சிவா சின்னப்பொடி


