நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணி!
இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 21ஆவது வருடாந்த விருது வழங்கும் விழா!
தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்காகவும், விலை அதிகரிப்பைக் கவனத்திற்கொண்டு அதற்கான புதிய பொறிமுறைகளைத் துரிதமாக உருவாக்கிச் செயற்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 21ஆவது வருடாந்த விருது வழங்கும் விழா, இன்று (08) புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் செல்வா பலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், சங்கத்தின் வருடாந்தச் சிறப்பு மலரான 'நிர்மாணிகள்' சஞ்சிகையையும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
நீங்கள் வட மாகாணத்தின் அபிவிருத்திக்கான முக்கிய தூண்களாக விளங்குகிறீர்கள். தற்போதைய ஜனாதிபதி கௌரவ அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் வடக்கு மாகாணம் மீதான விசேட கரிசனையால் நாம் விரைவாக மீண்டெழுந்து கொண்டிருக்கின்றோம். வளர்ச்சியின் இந்த முக்கியமான கட்டத்தை நாம் கடந்து செல்லும்போது, உங்களின் விடாமுயற்சியே திட்ட வரைபடங்களை நமது நிலப்பரப்பின் யதார்த்தமாக மாற்றுகின்றது.
நாம் வெளிப்புற அழுத்தங்களை எதிர்கொள்ளும் அதேவேளையில், நிர்மாணப் பணிகளின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. இங்குள்ள ஒவ்வொரு ஒப்பந்ததாரரும் தேசிய நிர்மாணத் தரநிலைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தரம் என்பது ஒரு விருப்பத் தெரிவல்ல. அது உலகுக்கு நாம் வழங்கும் நமது முத்திரையாகும். அத்துடன், உங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானதாகும்.
தரத்துக்கான உங்களது அர்ப்பணிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில், சுன்னாகம் பிரதேச சபையில் பொறியியல் பரிசோதனை ஆய்வுகூடமொன்றை அமைப்பதற்கு நாம் உத்தேசித்துள்ளோம் என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த முன்முயற்சியானது, மூலப்பொருள் பரிசோதனைக்கான துரிதப்படுத்தப்பட்ட உள்ளூர் தீர்வுகளை வழங்குவதற்கும், தாமதங்களைக் குறைப்பதற்கும், திட்டங்களின் தரத்தை உறுதிசெய்வதற்கும் வழிவகுக்கும்.
ஈரானில் நிலவிய மோதல்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பானது, எமது மாகாணத்தின் நிர்மாணத்துறையை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஒப்பந்ததாரர்களாகிய உங்களைப் பாதுகாக்கும் நோக்கில், நாம் பின்வரும் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்:
விலை ஏற்றத் திருத்தச் சரத்துக்கள் உள்ளடக்கப்படாத தற்போதைய ஒப்பந்தங்களுக்கு விசேட நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்காக, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றுக்கு வட மாகாண சபை உத்தியோகபூர்வமாகக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அத்துடன், தற்போதைய சந்தை நிலவரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மாகாண விலைப்பட்டியலில் அவசர திருத்தங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். எதிர்கால மதிப்பீடுகள் மற்றும் கொள்வனவுச் செயற்பாடுகள் அனைத்திலும் ஒப்பந்ததாரர்களின் பாதுகாப்புக்காக விலை ஏற்றத் திருத்தச் சரத்துக்கள் உள்ளடக்கப்படும்.
மூலப்பொருட்கள் தொடர்பில் நீங்கள் எதிர்கொள்ளும் தடைகளை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். இதற்காக, அனைத்துத் துறைசார் தரப்பினருடனும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டு, மணலின் விலையைக் குறைப்பதற்கும், விநியோகச் சங்கிலியை முறைப்படுத்துவதற்கும் மாகாண நிர்வாகம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உங்கள் தொழிலுக்கான வளங்கள் இலகுவாகவும் நியாயமான விலையிலும் கிடைப்பதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
வட மாகாணமானது தற்போது வீதி அபிவிருத்தி மற்றும் முக்கியமான கட்டட நிர்மாணப் பணிகளுக்காகக் கணிசமான நிதி ஒதுக்கீட்டைப் பெற்று வருகின்றது. முதலீட்டுடன் பொறுப்புக்கூறலின் சுமையும் இணைந்தே வருகின்றது. திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவுசெய்வது மிக முக்கியமானதாகும். தாமதமாகும் ஒவ்வொரு திட்டமும், நமது குடிமக்களுக்கு இழைக்கப்படும் ஓர் அநீதியாகும்.
'வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதி திரும்பிச் செல்கின்றது' என்ற அரசியல் கோஷத்தை அண்மைக்காலமாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது எவ்வளவு தூரம் உண்மைக்கு மாறானது என்பதை எங்களைப் போன்றே உங்களுக்கும் நன்கு தெரியும். 2025ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூடத் திரும்பிச் செல்லவில்லை என்பதை மாகாண ஆளுநராக இங்கு மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவ்வாறான ஓர் இலக்கை எங்களால் மாத்திரம் தனித்து அடைந்திருக்க முடியாது. உங்களின் ஒத்துழைப்புகள் உரிய நேரத்தில் கிடைத்தமையால்தான் அதனைச் சாதிக்க முடிந்தது. இந்த ஆண்டும் அதேபோன்று நீங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். உங்கள் சங்கத்தின் உறுப்பினர்களை அதற்காக ஊக்குவியுங்கள்; அவர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குங்கள்.
இதனை அடைவதற்கு, நாம் புதிய பொறியியல் தீர்வுகளை உள்வாங்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்துடன் சங்கம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என நான் வலுவாக ஊக்குவிக்கின்றேன். எமது தனித்துவமான நிலப்பரப்புக்கு ஏற்ற உள்ளூர் மற்றும் வினைத்திறனான தீர்வுகளைக் கண்டறிய, கல்விசார் ஆராய்ச்சிக்கும் களப் பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்போம். இளம் பொறியியல் மாணவர்களுக்குச் செய்முறை ரீதியான கற்றலுக்கான வாய்ப்புகளை வழங்குங்கள்.
உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் உலகளாவிய போக்குகளை நோக்க வேண்டும். பல நாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே வீதி நிர்மாணப் பணிகளுக்காக மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை நடைமுறைப்படுத்தியிருந்தாலும், நாம் அதில் சற்று மந்தமாகவே செயற்பட்டுள்ளோம். குறிப்பாக எமது வீடமைப்புத் துறைக்கு, குறைந்த செலவிலான நீடித்திருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை நோக்கி நாம் திரும்ப வேண்டிய நேரம் இதுவாகும். நிர்மாணப் பணிகள், மாறுபடும் காலநிலைச் சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாகவும், இயற்கையான வெளிச்சத்திற்காகச் சூரியக் கதிர்வீச்சைப் பயன்படுத்துவதாகவும் அமைய வேண்டும், என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சிறந்த ஒப்பந்ததாரர்களுக்கான விருதுகளை ஆளுநர் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநருடன், யாழ். மாவட்டச் செயலாளர் எம்.பிரதீபன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல் சேவைகள்) ந.சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


