பலதும் பத்தும். 11.04 .2026 - பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில்அ மைதிப் பேச்சுவார்த்தை !
பஸ் வண்டிகளில் மயக்கமருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளை; கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தல்!
அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில்
மத்திய கிழக்கு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று (11) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட குழுவின் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர்.இருப்பினும் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் சில நிபந்தனைகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பில்லியன் கணக்கான ஈரானிய ரியால்களை உடனடியாக விடுவிப்பதோடு, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் ஏறாவூரில் போதைப் பொருள் மற்றும் பணத்தொகையுடன் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் ஆற்றங்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, ஒரு தொகையிலான போதைப்பொருட்களுள் மற்றும் பணத்தொகையுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவருமான உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களே இவ்வாறு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
வடக்கு சூடான் டர்பரில் திருமண நிகழ்ச்சியொன்றில் ட்ரோன் தாக்குதல் 32 பேர் உயிரிழப்பு!
சூடானின் வடக்கு டர்பரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்து முகமை தெரிவித்துள்ளது. நேற்று (09) இடம்பெற்ற இத் திருமணத்தை இலக்குவைத்தே இட் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றது. இத் தாக்குதலுக்கு அரசின் இராணுவப் படைகளே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பல பகுதிகளில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் வந்த உலகின் அதிக தரம் வாய்ந்த மோட்டார் சைக்கிள்!
மலேசியாவில் இருந்து தத்தோ ஆனந்த் தலைமையில் யாழ்ப்பாணம் வந்த உலகின் விலை உயர்ந்த தரம் வாய்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ( 1700CC, 1900CC) உரிமையாளர்களான தமிழ் சகோதரர்களை யாழ் நகரில் சந்தித்த வேளை. ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் உலகம் சுற்றும் பிரயாணங்களை மேற்கொள்வது வழக்கம்.
அதேபோல் இச் சகோதரர்கள் யாழ் நகரம் உல்லாசப் பயணத்திற்கு உகந்தது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டு முகமாக இரண்டு நாள் யாழ்ப்பாண சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு சர்வதேச ஊடகங்களுக்கு இப் பயணத்தை எடுத்துச் சொல்லுவார்கள். இதன் மூலம் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்பவர்கள் பலர் யாழ்நோக்கி படையெடுக்கும் சந்தர்ப்பம் உருவாகும்.
பஸ் வண்டிகளில் மயக்கமருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளை; கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தல்!
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது. எனவே தனியாக பிரயாணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட் வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பஸ் வண்டிகளில் பிரயாணிகள் போல பிரயாணிக்கும் கொள்ளையர்கள் பஸ் வண்டியில் தனியாக யார் பிரயாணிக்கின்றனர் என நோட்டமிட்டு பின்னர் அவர்களுக்கு அருகிலமர்ந்து இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.


