நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: 33 நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுப்பு - வான் கதவுகள் திறப்பு!
தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆறுகளை அண்டிய பகுதிகளில் வசிப்போரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் கடும் மழை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (13) காலை 6.00 மணி நிலவரப்படி இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது வான்பாய்ந்து வரும் முக்கிய நீர்த்தேக்கங்களின் விபரங்கள் மாவட்ட ரீதியாக வருமாறு:
அனுராதபுரம்: இராஜாங்கனை நீர்த்தேக்கம்.
பதுளை: அபேவெல நீர்த்தேக்கம்.
அம்பாந்தோட்டை: மௌஆற, லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்கள்.
குருநாகல்: அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்கள்.
கண்டி: நாலந்த மற்றும் வேமெடில்ல நீர்த்தேக்கங்கள்.
மொனராகலை: அலிகொட்டஆற நீர்த்தேக்கம்.
மன்னார்: யோத வாவி.
அதிகப்படியான நீர் வரத்து காரணமாகப் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன: இராஜாங்கனை நீர்த்தேக்கம்: 12 வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 14,000 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்துவிடப்படுகிறது.
லுணுகம்வெஹெர நீர்த்தேக்கம்: 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 4,100 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவிற்கு விடுவிக்கப்படுகிறது. வெஹெரகல நீர்த்தேக்கம்: 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்குள் வெளியேற்றப்படுகிறது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், ஆறுகளுக்கு நீர் திறந்துவிடப்படுவதாலும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆறுகளை அண்டிய பகுதிகளில் வசிப்போரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


