புனித நகரத்தில் சிறுமி வன்புணர்வு: 'விபரங்களை அறியாதிருந்த' பெண் அமைச்சருக்கு NCPA கோப்பு!
பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர்!
பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் தொடர்பில் இதுவரை அறியாதிருந்த விபரங்கள் அடங்கிய கோப்பை பெற்றுக்கொண்ட பின்னர், இது குறித்த மேலதிக விசாரணைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் (NCPA) கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர், அதிகாரசபையின் தலைவர் தலைமையிலான மூத்த அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
மறைக்கப்படும் உண்மை
குறித்த குற்றம் தொடர்பில் பொலிஸாரின் தலையீடானது சந்தேகநபரான தேரருக்குச் சார்பாகக் இருப்பதாகவும், அதேபோன்று பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ரீதியில் சரோஜா சாவித்திரி போல்ராஜின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சமூக ஊடகங்கள் மற்றும் சிறுவர் உரிமை ஆர்வலர்களின் கடும் விமர்சனங்களுக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கும் நிலையிலேயே இவ்விடயம் இடம்பெற்றுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (25) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, அமைச்சரின் தலைமையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் விசேட கலந்துரையாடல் ஒன்று கூட்டப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தொடர்பாக வெளியிட்டுள்ள பிறிதொரு ஊடக அறிக்கையில், ‘சிறுவர் பாதுகாப்பு பிரிவு தொடர்பான தற்போதைய நிகழ்வுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவது குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனினும், அட்டமஸ்தானாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து அங்கு பேசப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
“எனக்குத் தெரியாது”
இருப்பினும், இது குறித்து வினவியபோது, அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை செயல்முறை குறித்து ஆராய்வதற்காகவே இந்த கலந்துரையாடல் பிரதானமாக இடம்பெற்றதாக, அமைச்சரின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரியொருவர் எங்களிடம் தெரிவித்தார்.
"எனக்கு இதன் ஆரம்பமும் முடிவும் தெரியாது. ஊடகங்களுக்கு முன்னால் சென்று என்னால் இதைக் கூற முடியாது. இது எவ்வாறு அறிக்கையிடப்பட்டது எனக் கூட எனக்குத் தெரியாது," என கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதிகாரசபையின் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
"நடந்ததை எனக்குச் சரியாகக் கூறுங்கள்," என அமைச்சர் கூறியுள்ளமையானது, குற்றச்சாட்டு பொலிஸாருக்கு தெரியவந்து 15 நாட்கள் ஆகும் வரையிலும் அமைச்சர் இந்த சம்பவம் குறித்த விபரங்களை அறிந்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
இதனையடுத்து, அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தி இனோகா ரணசிங்க, உப தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா மற்றும் சட்ட நடைமுறைப் பிரிவின் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் ஆகியோர் கோப்பு ஒன்றைக் காண்பித்து ஆரம்பத்திலிருந்து அனைத்தையும் விளக்கியுள்ளனர்.
"எங்களுக்கு இந்த சம்பவம் ஏப்ரல் 22 ஆம் திகதி அறிக்கையிடப்பட்டது. அந்த நேரத்திலும் நிட்டம்புவ பொலிஸாருக்கு இச்சம்பவம் தெரிந்திருந்தது. ஆனால், பொலிஸார் எங்களுக்கு எந்தவொரு அறிவித்தலையும் வழங்கவில்லை. பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் அதிகாரசபைக்கு செய்த முறைப்பாட்டின் காரணமாகவே இச்சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது," என அதிகார சபையின் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்ததாக, தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு இக்கலந்துரையாடலில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் எங்களிடம் தெரிவித்தார்.
சிறுமி நிட்டம்புவ பொலிஸில் அட்டமஸ்தானாதிபதியின் பெயரை ஏப்ரல் 10 ஆம் திகதியே குறிப்பிட்டிருந்தார். பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனை அறிந்ததால், ஊடகவியலாளர் பிமல் ருஹுனகே ஏப்ரல் 22 ஆம் திகதி NCPA அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
இடம்பெறாத விசாரணைகள்
குறித்த குற்றம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை தான் கோரியுள்ளதாக அமைச்சர் இதற்கு முன்னரும் தெரிவித்திருந்த போதிலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையோ, பொலிஸாரோ அல்லது வேறு ஏதேனும் ஒரு தரப்போ அவ்வாறானதொரு அறிக்கையை அமைச்சருக்கு வழங்கியதா என்பது பற்றி அதன்பின்னர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன், அவ்வாறானதொரு அறிக்கையை எந்த நிறுவனத்திடம் கோரினார் என்பதையும் அமைச்சர் திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை.
கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் பொலிஸாரின் செயல்பாடுகள் குறித்து, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் அமைச்சருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதா என நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, பெயர் குறிப்பிடவிரும்பாத குறித்த அதிகாரி, பொலிஸாரின் விசாரணைகள் குறித்து விசேடமாக எதுவும் கலந்துரையாடப்படவில்லை என தெரிவித்தார். "இல்லை, அது குறித்து பெரிதாக பேசப்படவில்லை. ஆனால், அமைச்சர் அது குறித்து பேசுவார் என்று நாம் எதிர்பார்த்தோம். ஏனெனில், நாட்டில் உள்ள மக்கள் பொலிஸ் விசாரணைகள் குறித்தே பேசிக்கொண்டிருக்கிறார்கள்,"
வழக்கிற்குத் தயாராகுங்கள்
குறித்த சிறுவர் வன்புணர்வு தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லுமாறும், எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான சாட்சியங்களை சரியான முறையில் திரட்டி, தற்போதுள்ள குறைபாடுகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் பொலிஸ் விசாரணைகள் குறித்து கண்டறிந்து, அது தொடர்பில் முறையான தலையீட்டை மேற்கொள்வது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை என்றே எமக்கு அறியக் கிடைத்துள்ளது.
இந்த குற்றம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக, பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், கொழும்பு சட்டப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி காலிங்க ஜயசிங்க, குறித்த விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே நிட்டம்புவ பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டதால், எதிர்காலத்திலும் அது அவ்வாறே தொடரும் என திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
“இது எமது வேலை” பொலிஸ்
அத்துடன், அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையையும் அதன் அதிகாரிகளையும் மறைமுகமாக விமர்சித்ததோடு, வேறு நிறுவனங்களின் தேவைக்கேற்ப பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டார்.
"இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டும், சமூக ஊடகங்களினதோ அல்லது வேறு எவரினதும் தூண்டுதலின் பேரிலோ இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை," என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த சிறுமி வன்புணர்வு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து பொலிஸாரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மூடிமறைத்து, சந்தேகநபரை கைது செய்வதைக் கூட தாமதப்படுத்தியதாக அதிகாரசபை நீதிமன்றத்திலும் குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால், விசாரணைகளை நடத்துவதற்கான முறையான அதிகாரத்தைக் கொண்ட தங்களுக்கு அதற்கு நீதிமன்றத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதால், அதிகாரசபையின் தேவைக்கேற்ப செயல்படப்போவதில்லை என்றே பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.
“எனக்கு பொலிஸார் மீது நம்பிக்கையுள்ளது” அமைச்சர்
"எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இந்த விசாரணைகளில் ஈடுபடவில்லை. இந்த விசாரணை முழுமையாக நிட்டம்புவ பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினாலேயே மேற்கொள்ளப்பட்டது," என பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறிய விடயமானது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசாரணை செயல்முறையை நேரடியாகவும் பகிரங்கமாகவும் சிறுமைப்படுத்துவதாக அமைந்திருந்த போதிலும், அமைச்சர், குறித்த கலந்துரையாடலில் அது தொடர்பில் தலையிடுவதாக எதுவும் கூறவில்லை.
திங்கட்கிழமை கூட்டம் நடைபெறும் வரை ‘விபரங்களை அறியாதிருந்த’ அவர், இதற்கு முன்னர் ஊடகங்களிடம் பேசும்போது, பொலிஸ் விசாரணைகள் மிகவும் திருப்திகரமான மற்றும் நம்பிக்கையான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். அப்போது, அவர், தனது அமைச்சின் கீழ் உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து பேசாமல், அந்த நேரத்திலும் அதிகாரசபைக்கு கடுமையான சந்தேகத்தையும் பிரச்சினையையும் ஏற்படுத்தியிருந்த பொலிஸாரின் செயல்பாடுகள் குறித்தே தொடர்ந்து வலியுறுத்திக் கூறிவந்தார்.
அத்துடன், சந்தேகநபரான தேரருக்கும் பொலிஸாருக்கும் சார்பாக சில சட்டத்தரணிகள், முக்கிய தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும், குறிப்பாக அதன் சட்ட நடைமுறைப் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தலைமையிலான விசாரணை அதிகாரிகளுக்கும் எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்படும் அவதூறுகள் மற்றும் அவமதிப்புப் பிரச்சாரங்கள் குறித்து அவதானம் செலுத்தி, அத்தகைய பிரச்சாரங்களால் விசாரணை செயல்முறைக்கு பாதிப்பு ஏற்படுவதைக் கருத்திற்கொண்டு அமைச்சின் மட்டத்தில் ஏதேனும் தலையீட்டை மேற்கொள்ள அமைச்சர் முன்வந்துள்ளாரா என நாம் ஆராய்ந்தபோது, அது போன்ற எந்தவொரு விடயமும் அங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றே அறியக் கிடைத்தது.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒரு தற்காலிக தீர்வா?
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கலந்துரையாடலில், அனுராதபுரம் சிறுமியுடன் தொடர்புடைய சம்பவத்துடன் தொடர்புடையதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், பொலிஸார், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் மேலும் பத்து நாட்களில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும், அத்துடன் அதன் பணிகளுக்காக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் பல ஆர்வலர்கள், இது ஒரு அரசியல் நாடகமே தவிர, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கப்படும் நேர்மையான முயற்சியல்ல என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கே.விஜேசிங்க


