பலதும் பத்தும். 14,10,2025 - இஸ்ரேல் பாராளுமன்றத்தில் டிரம்பிற்கு எதிர்ப்பு!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வீரமணி ஐயர் நினைவரங்கம்!
வட மாகாணத்தில் 13 முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள்
வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முதற்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மற்றொரு சுற்று கலந்துரையாடல் நடைபெறும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலகா கலுவேவா குறிப்பிட்டுள்…
15 வருடங்களுக்கு முன்பு நடந்த நிதி மோசடி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
சுமார் ஐந்து மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர், மதியம் 2.00 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலமளிக்கவே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
68 வயதுடைய வயோதிபரே பலி
பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி பலிகியுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(13) பிற்பகல் 4.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலுடன் கடமையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி மோதுண்டுள்ளது.
சம்பவத்தில் பளை - வண்ணாங்கேணி வடக்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபரே பலியாகி உள்ளார்.
சடலம் கொடிகாமம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கை
இலங்கை கடற்படையினர், மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை மற்றும் யாழ்ப்பாண சிறப்புப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் (2025 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 07 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, உரிமங்கள் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்தைந்து (45) சந்தேக நபர்களுடன், பதினொரு (11) டிங்கி படகுகளுடன் கெப் வண்டியொன்றும் (01) இரண்டு (02) பல நாள் மீன்பிடி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அதன்படி, யாழ்ப்பாண நகர எல்லைகள் மற்றும் திருகோணமலை மலைமுந்தல், கொக்குத்துடுவாய், போல்டர் முனை, கோகிலாய், கதிரவேலி முனை, புடுவகட்டு, பாவுல் முனை, ஓட்டமாவடி, பிளான்டன் முனை, கல்குடா, கல்லராவ ஆகிய கடற்கரைகள் மற்றும் கடற்பரப்புகளை உள்ளடக்கிய, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளின் விளைவாக மீன்பிடி படகுகள், ஒரு கெப் வண்டி மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், இந்த நடவடிக்கைகளில் பிடிபட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் கெப் வண்டி ஆகியவை கிண்ணியா, முல்லைத்தீவு, குச்சவெளி, லங்காபட்டுன, கோட்பே மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி குருக்கள்மட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்!
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மட பகுதியிலுள்ள தென்னந்தொப்பில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள மக்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், பிரேத பரிசோதனைகளுக்காக களுவாங்கிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடத்தைச் சேர்ந்த 81 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக அண்மையில் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
சர்வதேச பொலிஸ் பிரிவினரின் (Interpol)உதவியுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2025 பெப்ரவரி 19 திகதி காலை நீதிமன்ற வளாகத்தில் சமிந்து தில்ஷன் பியுமங்க கண்டனாரச்சி என்ற நபர் மேற்கொண்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைதான சமிந்து தில்ஷனின் காதலி என கூறப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்!
இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (14) காலை வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் இடம் மாற்றிக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு கோரியும், அரசியல் தலையீடுகளை உடன் நிறுத்துமாறு இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான வசனங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆசிரியர் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
ஆளுநரே என் பி பி அரசாங்கத்துக்கு நீ அடிமையா, '' வடக்கு மாகாண கல்வியில் அரசியல் தலையிட்டை நிறுத்து'' , போன்ற வசனங்களை தாங்கிய பதாகைகளை ஆசிரியர்கள் ஏந்தியுள்ளனர்.
இஸ்ரேல் பாராளுமன்றத்தில் டிரம்பிற்கு எதிர்ப்பு!
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.
அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர் உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று புகழாரம் சூட்டினர்.
அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதனால் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர். பின்னர் டிரம்ப் தொடர்ந்து உரையாற்றினார்.
ஐமென் ஓடே மற்றும் ஓஃபர் காசிஃப் அகிய இரண்டு உறுப்பினர்கள்தான் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் இனப்படுகொலை என எழுதப்பட்டிருந்த பதாகையை தூக்கிபிடித்திருந்தார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வீரமணி ஐயர் நினைவரங்கம்!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் 14.10.2025 செவ்வாய் காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் பீடாதிபதி தவமைந்தன் றொபேட் அருட்சேகரன் கலந்து கொண்டு தமிழிசை வளர்ச்சியில் வீரமணி ஐயரின் பங்களிப்பு என்ற பொருளில் நினைவுப் பேருரை ஆற்றினார்.
வீரமணி ஐயர் பற்றிய ஆவணக் காணொளியை ஆசிரிய மாணவி கௌசிகா காட்சிப் படுத்தினார். நடனத்துறை விரிவுரையாளர் ரஜிதா சின்னத்துரை அதிதிக்கான அறிமுக உரையை ஆற்றினார். கலாசாலையில் உள்ள வீரமணி ஐயர் திருவுருவச் சிலைக்கான வழிபாடும் இடம்பெற்றது.


