செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'!
“செம்மணியில் எனது மகனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டாலும் நான் உடைந்து விடுவேன், கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் நான் உடைந்துவிடுவேன்.”
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதிலும் இலங்கை தொடர்ந்து தோல்வியடைந்து வருவதை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்றின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள செம்மணியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியானது, உண்மையை நிலைநாட்டுதல், நீதியை வழங்குதல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் ஆகிய தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதில், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் திட்டமிட்டு மற்றும் தொடர்ச்சியாக தோல்வியைக் கண்டு வருவதன் அடையாளமாக மாறியுள்ளதாக, செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்' என்ற தலைப்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) ஜூலை 14 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“செம்மணியில் எனது மகனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டாலும் நான் உடைந்து விடுவேன், கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் நான் உடைந்துவிடுவேன்.” 1999 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட தனது மகன் தொடர்பாக பரமானந்தன் செல்வராஜா குறிப்பிட்டார். “நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரே வழி எனது மகன் உயிருடன் என்னிடம் மீண்டும் வருவது மாத்திரமே.”
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்' என்ற 45 பக்க அறிக்கை, மூன்று தசாப்தங்களாகியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களினால் வழங்கப்பட்ட பல வாக்குமூலங்களின் ஆரம்ப வார்த்தையாக காணப்படுகின்றது. முப்பது ஆண்டுகள் கடந்தும், தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை மீட்பது ஒருபுறம் இருக்க, அவர்களின் நிலை என்னவென்று இன்னும் அவர்களால் அறிய முடியாத நிலையில் அக்குடும்பங்கள் காணப்படுகின்றன.
தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மிகப்பெரிய மனிதப் புதைகுழி, குழந்தைகளின் எச்சங்களும் அடங்கலாக 400-ற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ள, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியாகும்.
அதன் பரப்பளவு, அந்த இடத்துடன் தொடர்புடைய ஆதாரங்கள் நீண்ட காலமாக மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், மேலும் ஆயுத மோதல் காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் ஆக்கல்கள், சட்டவிரோதக் கொலைகள் மற்றும் பிற கடுமையான மீறல்களுடன் அந்த இடத்தை இணைக்கும் கணிசமான ஆதாரங்கள் இருப்பதால், இது ஒரு விசேட வழக்காகக் கருதப்பட வேண்டுமென அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
பல தசாப்தங்களாகச் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூல்கள், நீதிமன்றப் பதிவுகள், அக்கால ஆவணங்கள், இராணுவத் தகவல்கள் மற்றும் முந்தைய விசாரணைகள் ஆகியவற்றின் அடிப்படையில், செம்மணியை வெறும் நீதித்துறை தடயவியல் விசாரணையாக மட்டும் கருதக் கூடாது என்றும், அதற்கு பதிலாக வலிந்து காணாமல் ஆக்கல்கள், சட்டவிரோதக் கொலைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சர்வதேசக் குற்றங்கள் குறித்து மீள ஆரம்பிக்கப்பட வேண்டிய குற்றவியல் விசாரணைகளுக்கு ஆதாரமாகக் கருதப்பட வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.
ஜூலை 14 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், செம்மணி சம்பவங்களுடன் தொடர்புடைய மீறல்கள் குறித்து இதுவரை எந்த உயர்மட்ட இராணுவத் தளபதியும் குற்றவியல் பொறுப்புக்குள் கொண்டுவரப்படவில்லை, என ITJP சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை செம்மணியுடன் தொடர்புடைய மீறல்கள் குறித்து எந்த இடைநிலை அல்லது மூத்த நிலை இராணுவத் தளபதியும் குற்றவியல் பொறுப்புக்குள் கொண்டு வரப்படவில்லை. மாறாக, சம்பவங்கள் நடைபெற்ற காலத்தில் அந்தப் பகுதியில் பணியாற்றிய சில அதிகாரிகள் பின்னர் அதிக அதிகாரமும் பொறுப்பும் கொண்ட பதவிகளுக்கு உயர்த்தப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
1998ஆம் ஆண்டுச் சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் தகவல்கள் இல்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களே பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண வேண்டும் எனவும், இந்த ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்திருந்தார்.
செம்மணியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிக்கவும் வழக்குத் தாக்கல் செய்யவும் முதல் நோக்கில் (prima facie) போதுமான அடிப்படை இருப்பதாக ITJP தனது அறிக்கையில் வாதிடுகிறது. மேலும், இவ்வாறான விசாரணைகள் ஆரம்பிக்கப்படாதது ஆதாரங்களின் பற்றாக்குறையால் அல்ல; மாறாக, பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் தொடர்ச்சியான தோல்வியையே பிரதிபலிப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஏழு இராணுவ அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ITJP தெரிவித்துள்ளது. அவர்களில் இருவர் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைப் பணியில் ஹெய்ட்டியில் பணியமர்த்தப்பட்டிருந்ததையும் அறிக்கை நினைவூட்டுகிறது.
அந்த இரு அதிகாரிகள் ஹெய்ட்டியில் ஐ.நா. அமைதிப்படைப் பணியில் இருந்த காலத்தில், இலங்கைப் படையினரால் சிறுவர்களுக்கு எதிராக பரவலான பாலியல் சுரண்டலும் பாலியல் துஷ்பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், சில அதிகாரிகள் பின்னர் ஊடகவியலாளர்களைக் கடத்தல், சித்திரவதை மற்றும் கொலை உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகினர். இவை தனித்தனி சம்பவங்களாக இருந்தாலும், மொத்தத்தில் பார்க்கும்போது, பொறுப்புக்கூறல் இல்லாத தொடர்ச்சியான நிலை, துஷ்பிரயோகங்கள் தொடர்ச்சியாக நடைபெறவும், அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை சிதையவும், கடுமையான மீறல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் உரிய விசாரணையின்றி தொடர்ந்து அதிகாரம் செலுத்தவும் வழிவகுக்கிறது என, அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், செம்மணி என்பது ஒரு வரலாற்றுச் சம்பவ இடம் மட்டுமல்ல; உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை தொடர்ந்து சோதித்து வரும் ஒரு அடையாளமாகும் என்றும் ITJP வலியுறுத்துகிறது.
சர்வதேச சட்டத்தின் கீழ், காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் நிலையும் அவர் அல்லது அவள் இருக்கும் இடமும் உறுதிப்படுத்தப்படும் வரை, வலிந்து காணாமல் ஆக்குதல் தொடர்ச்சியான மனித உரிமை மீறலாகவே கருதப்படுகிறது. குடும்பங்களைப் பொறுத்தவரை, மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுவது ஆரம்பம் மட்டுமே. இறுதியில் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், சுயாதீன குற்றவியல் விசாரணைகள், ஆதாரங்களின் அடிப்படையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காணுதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பயனுள்ள நிவாரணங்களை வழங்குதல் அத்தியாவசியமாகும் என, அறிக்கை குறிப்பிடுகிறது.
2025 மே 15 முதல் 2026 ஜூன் 23 வரை ஓராண்டுக்கும் அதிகமான காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 86 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் மூலம், 412 பேருடைய எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில், அவற்றில் 409 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வாய்வுக் குழுவினருக்கு ஓய்வு வழங்கும் நோக்கில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஜூலை 15, மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.


