பலதும் பத்தும். 10.12.2025 - மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டாரை கண்டுபிடித்துக்கொடுத்த நாய்!
ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்
டித்வா புயல் தாக்கம் - மேலும் அதிகரிக்கும் உயிரிழப்பு!
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (09) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 203 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். சீரற்ற காலநிலையினால் 529,741 குடும்பங்களைச் சேர்ந்த 1,824,771 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 234 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 27,145 குடும்பங்களைச் சேர்ந்த 86,040 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
பண்டாரவன்னி கிராம மக்களுக்கான அவசர அறிவிப்பு!
வவுனியா வடக்கு பகுதியில் தற்போது மிக அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புபிரிவு தெரிவித்துள்ளது.
இன்றிரவு மேலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், குருவிச்சை ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் நிலவுகிறது.
எனவே பண்டாரவன்னி பகுதியில் வசிக்கும் மக்கள் நிலைமையை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
வெள்ளம் அபாய மட்டத்திற்கு உயர்ந்தால், தயவுசெய்து உடனடியாக கருவேலன்கண்டல் பாடசாலைக்கு பாதுகாப்பாக இடம்பெயருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டாரை கண்டுபிடித்துக்கொடுத்த நாய்
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பல குடும்பங்கள் மண்ணுக்கு இரையாகின.
இந்நிலையில் மாத்தளை, பல்லேபொல, அம்பொக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.
குறித்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்தநிலையில், அவ் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டாரை கண்டுபிடித்துக்கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் தற்போதும் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதால் அங்குள்ள மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது.
இந்த உதவியானது "திட்வா" (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்க உதவும் என ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை (Red Crescent) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும், அந்த அமைப்புகள் ஊடாக வழங்கப்படும் 5 இலட்சம் யூரோக்களும் இந்த மனிதாபிமான உதவித் தொகையில் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இதில் மேலும் குறிப்பிட்டுள்ளது.


