பலதும் பத்தும். 03.04 .2026 - இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது!
அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம்!
சந்திரகாந்தன் நீண்ட இடைவெளியின் பின்னர் வெளிக் காட்சி.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் / முன்னாள் அமைச்சர் பிள்ளையான் எனப்படும் " சி.சந்திரகாந்தன் " நீண்ட இடைவெளியின் பின்னர் வெளிக் காட்சி.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), சட்டமா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் இன்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
"பிரபஞ்சம் பழகு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற செயலமர்வு!
சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் சண்டிலிப்பாய் மணிமோகன் முன்பள்ளி மாணவர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு நேற்றையதினம் [02] முன்பள்ளித் தலைவரும் மேனாள் அதிபருமான வரதராஜசர்மா ஸ்ரீகாந்தன் அவர்களின் தலைமையில் முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது. இயற்கையை நேசித்தல், மொழிப்பயன்பாடு, உணவுப் பழக்கவழக்கம், இலத்திரனியல், சாதனங்களின் பாதிப்புக்கள், தியானம், கிராமிய விளையாட்டுக்கள், கூடிவாழ்தல் குடும்ப ஒட்டுறவு முதலான விடயங்களை உள்ளடக்கிய இச்செயலமர்வில் மாணவர்கள் குதூகலத்துடன் கலந்து கொண்டனர்.
"பிரபஞ்சம் பழகு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இச்செயலமர்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ப.தமிழ்மாறன் வளவாளராகக் கலந்து கொண்டு ஆற்றுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம்!
ஈரானுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசால் ரெண்டி ஜோர்ஜ் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், அமெரிக்க இராணுவத்தின் தற்காலிக தலைமை தளபதி பொறுப்பை ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் ஏற்றுள்ளார்.
சாதனை படைத்த மாணவியை நேரில் சென்று வாழ்த்திய சிறீதரன் எம்.பி!
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்த, மாணவி விஜயரூபன் இசைப்பிரியாவுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதன்போது கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் இராசரத்தினம் அரவிந்தன், பூநகரிப் பிரதேச சபையின் உப தவிசாளர் ( நல்லூர் வட்டாரம்) குலவீரசிங்கம் குணலட்சுமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது!
இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர். சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் சீனாவைச் சேர்ந்த 133 பேரும், வியட்நாமை சேர்ந்த ஒருவரும், பங்களாதேஷை சேர்ந்த 13 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


