Sanskathi
Mar 15

எழுச்சிப் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக அணி திரண்டு குரல்கொடுக்க வேண்டும்

எழுச்சிப் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக அணி திரண்டு குரல்கொடுக்க வேண்டும்

எழுச்சிப் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக அணி திரண்டு குரல்கொடுக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் எழுச்சிப் பேரணியில் கட்சிபேதம் பாராது தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு குரல் கொடுக்க வேண்டும்.

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும், தமிழ் மக்களின் கோரிக்கைககள் அனைத்தும் கவனத்திற்கொள்ளப்படவில்லை. எமது மக்கள் வேதனையின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். யாரிடம் போய் எதைக் கேட்பது என்ற விரக்தியில் துவண்டுபோய்விட்டார்கள்.

இந்த எழுச்சிப் பேரணியாவது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்குப் போய்ச் சேரட்டும். இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்துவிட்டு, இழப்பதற்கு எஞ்சி இருக்கும் உயிரைத் தவர வேறெதுவும் இல்லை என்று ஏங்கி தவிக்கும் மக்களின் வேதனைகள் தீரட்டும்.

எனவே இதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு, நாளை முன்னெடுக்கும் இந்த எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டு சர்வதேசத்திற்கு உண்மையை உணர்த்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.