கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள்.
.

பாட்டுக்கோட்டை எனப் புகழ்பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பொதுவுடமை பாடல்களில் மட்டுமல்ல, காதல் பாடல்களிலும் கூட கலக்கியவர் அவர்.
காதலிக்கும் பெண்ணை நிலவின் தங்கை என முதன்முதலில் வர்ணித்தவர் பட்டுக்கோட்டையார்தான்.
கல்யாணிக்குக் கல்யாணம் (1959) என்ற படத்தில் இடம்பெற்ற 'உன்னை நினைக்கையிலே கண்ணே, எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?' என்ற பாடலில்,
'வட்டக்கருவிழி மங்கையே! ஒளி கொட்டும் நிலவுக்குத் தங்கையே' என்று வர்ணித்தார் பட்டுக்கோட்டையார்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960) என்ற படத்திலும் இதே உத்தியை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கைக்கொண்டார்.
'என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?' என நிலவிடம் கேள்வி எழுப்பினார் அந்த நிகரில்லா பாவலர்.
பட்டுக்கோட்டையாருக்குப்பின் இந்த உத்தியை பக்குவமாகக் கையாண்ட ஒருவர் உண்டென்றால் அவர் காவியக் கவிஞர் வாலி.
ஐந்து திரைப்பாடல்களில்இ பெண்ணை வெண்ணிலவின் தங்கையாக்கி இருக்கிறார் வாலி.
ஒன்றுஇ எங்க வீட்டுப்பிள்ளை (1965) திரைப்படம். அதில் 'குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா?' என்ற குதூகலமான பாடலில், 'திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள்' என்ற வாலியின் வரி கச்சிதமாக வலம் வரும்.
அதே காவியக் கவிஞர் வாலி, அதே 1965ம் ஆண்டு வெளிவந்த 'அன்புக்கரங்கள்' திரைப்படத்தின் பாடல் ஒன்றிலும் இதே பாணியைக் கையாண்டார்.
'உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா?' என்ற பாடலில், 'திங்களுக்குத் தங்கை தென்றலுக்குத் தோழி வஞ்சியிவள் வந்தேன் என்றாள் வந்தேன் என்றாள்' என்ற வளமான வரிகளை அவர் வார்த்துத் தந்திருப்பார்.
நடிகர் திலகம் நடித்த இருமலர்கள் (1967) என்ற திரைப்படத்தில் 'மகராஜா ஒரு மகராணி, இந்த இருவருக்கும் இவள் குட்டிராணி' என்ற பாடலிலும் இதே திங்களுக்குத் தங்கை என்ற உவமையழகு இடம்பிடித்தது.
'பொங்கும் அழகு தங்கநிலாவின் தங்கச்சிப் பாப்பாவோ, புத்தம் புதிய பூச்செண்டாட்டம் புன்னகை செய்வாளோ' என்ற வரியில், அந்த பெண் குழந்தையை இந்தமுறை நிலவின் 'தங்கச்சிப் பாப்பா'வாக்கி இருந்தார் காவியக்கவிஞர் வாலி.
ஊருக்கு உழைப்பவன் (1976) படத்தில், இடம்பெற்ற 'இதுதான் முதல் ராத்திரி அன்புக்காதலி என்னை ஆதரி' என்ற பாடலும் காவியக்கவிஞர் வாலி எழுதிய பாடல்தான்.
அதில், 'திருமுக மங்கை திங்களின் தங்கை' என்று ஒரு வரி இடம்பெற்றது.
பின்னாட்களில் நடிகர் திலகம் நடித்த மோகனப்புன்னகை (1981) என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலிலும் மீண்டும் இந்த நிலவின் தங்கை இடம்பிடித்தாள்.
'தென்னிலங்கை மங்கை, வெண்ணிலவின் தங்கை, தேனருவி நீராடினாள் தாமரைப்போலே' என்ற பாடல்வரி அந்தப் படத்தில் வரும்.
அந்தப் பாடலை எழுதியவர் யார்? சொல்லவே தேவையில்லை. அவர் காவியக் கவிஞர் வாலியேதான்!
கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள்.