நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்...மரண பீதியடைந்த பயணிகளின் திக் திக் நொடிகள்!
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கிய நிலையில், பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் 200 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று மாலை (மே 21) புறப்பட்ட இண்டிகோ விமானம் கடுமையான காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கியதால் நடுவானில் பறக்க முடியாமல் திணறியது. அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில் பயணிகள் அலறிய நிலையில் விமானம் பாதுகாப்பாக ஸ்ரீநகரில் தரையிறங்கியது. இதனால் 200 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று மாலை இண்டிகோ பயணிகள் விமானம் (6E-2142) புறப்பட்டது. இந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 227 பேர் பயணித்தனர். ஸ்ரீநகரை நோக்கி நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கடுமையான காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. விமானம் மீது ஆலங்கட்டி விழுவதை உணர்ந்த பயணிகள் பயந்து கூச்சலிட்டு பிராத்தனை செய்ய துவங்கினர்.
ஆலங்கட்டி மழையால் விமானம் சேதமடைவதற்கு வாய்ப்பு அதிகம் இருந்ததால் உடனே விமானி ஸ்ரீநகர் விமான நிலைய கட்டுப்பாடு அறைக்கு 'AOG' அவரச தகவலை அனுப்பினார். தொழில்நுட்ப சிக்கல்களால் விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாத நேரத்தில் விமானி இந்த சிக்னலை அனுப்புவது வழக்கம். இக்கட்டான சூழலில் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் மாலை 6.30 மணிக்கு ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஆனால், ஆலங்கட்டி மழையால் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்து இருந்தது. இருப்பினும், விமானத்தை லாவகமாக விமானி இயக்கியதாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் விமானத்தை தரையிறக்கியதாலும் 200 பயணிகள் உட்பட 227 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
மேலும், இதுகுறித்து ஷேக் சமியுல்லா என்ற பயணி கூறுகையில், '' விமானி திடீரென்று எங்களுக்கு அவசர அறிவிப்பை ஒன்றை அறிவித்து சீட் பெல்ட்டை கட்டியே இருக்குமாறு அறிவுறுத்தினார். விமானத்தில் அதுவரை எந்த தடுமாற்றமும் இல்லை. சில நொடிகளில் விமானம் பலத்த ஆலங்கட்டி மழையில் சிக்கியது. நான் அடிக்கடி விமானத்தில் பயணித்து வருகிறேன் ஆனால் இதுபோன்ற பதற்றமான சூழலை சந்தித்ததில்லை. விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதற்கு விமானிக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்'' என்றார்.
விமானம் நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கியதை அடுத்து விமானத்திற்குள் நிலவிய பதற்றத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வரும் அந்த வீடியோவில், பயணிகள் உயிருக்கு பயந்து பிராத்தனை செய்வதும், விமானத்தின் மீது ஆலங்கட்டிகள் விழும் சத்தமும் காண்போரை கதி கலங்க செய்கிறது. இந்நிலையில், சாதுரியமாக விமானத்தை இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.