நாட்டில் பாரிய உப்புத் தட்டுப்பாடு! இறக்குமதி செய்யப்பட்டுள்ள முதற்றொகுதி உப்புத் தொகை நாளை.
15 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த ஆண்டு டிசம்பரில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள முதற்றொகுதி உப்புத் தொகை நாளை (21) நாட்டை வந்தடையுமென வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம் பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பாரிய உப்புத் தட்டுப்பாடு நிலவுகின்றது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நிலவும் உப்புத் தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தையில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிவரை உப்பு இறக்குமதிசெய்ய அரசாங்கம் தீர்மானித்து, அதற்காக அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
15 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த ஆண்டு டிசம்பரில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது. அதன்படி, சுமார் 06 மாத காலப்பகுதியில் உப்பு இறக்குமதி செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்நிலையில், நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, உப்பு பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் பொருட்டு இறக்குமதிசெய்யப்பட்ட முதல்தொகுதி உப்பு நாளை (21) நாட்டை வந்தடையுமெனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘நாங்கள் மார்ச் மாதம் உப்பு உற்பத்திசெய்ய எதிர்பார்த்திருந்தோம். எனினும், மழையுடன் கூடிய காலநிலையால் அது கைவிடப்பட்டது. முன்னதாக 12,500 மெற்றிக்தொன் உப்பு இறக்குமதிசெய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் உப்பு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் உப்பு உற்பத்தியாளர்கள் வேண்டாமெனக் கோரிக்கை விடுத்தனர். நாங்கள் மார்ச் மற்றும் மே மாதங்களில் உப்பு அறுவடையை எதிர்பார்த்திருந்தோம். எனினும், நாங்கள் எதிர்பார்த்த உப்பு அறுவடை கிடைக்காததால் உப்பு இறக்குமதிசெய்ய தீர்மானித்தோம்.
முதற்கட்டமாக வர்த்தகர்களுக்கு உப்பை தருவித்துத் தர தீர்மானித்துள்ளோம். அதன்படி இறக்குமதிசெய்யப்பட்ட 30,000 மெற்றிக்தொன் உப்பு நாளை முதல் கட்டம் கட்டமாக நாட்டை வந்தடையும். இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ள உப்பு போதுமாக இருக்காது. காரணம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை ஹம்பாந்தோட்டை உப்பளத்திலிருந்து எதிர்பார்த்திருந்தோம். எனினும், 60,000 மெற்றிக்தொன் உப்பே அறுவடை செய்ய முடியுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உப்புப் பற்றாக்குறை நிலவக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.