யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி -14. ஆகஸ்ட் 1 198 மைல் நீளமுள்ள வடபகுதி ரயில்வே சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்தியா,இலங்கைஆகிய நாடுகளின் நேரம் சர்வதேச நேரத்துடன் ஒன்றுபடக்கூடியதாக கிறின்விச் நேரத்தில் இருந்து 5 மணி30 நிமிடம் முன்னதாக மாற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் முதல் தடவையாக ஒரு மோட்டார் வண்டியைக் கண்டது 1905இல் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் 23 இல் நுவரெலியாவில் இருந்து சில ஐரோப்பியர் ஒரு மோட்டார் வண்டியை ஓட்டிகொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்தனர் என அறியக்கிடக்கின்றது. அதே ஆண்டு ஓகஸ்ட் 1 இல் கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரயில் பாதையும் திறக்கப்பட்டது.
1905 சனவரி 5 ' மோர்னிங் ஸ்ரார்' பத்திரிகை வாராந்தம் பெரிய அளவில் பிரசுரிக்க ஆரம்பித்தது.
சனவரி 9 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்கள் ஓர் பழைய மாணவர் சங்கத்தை ஆரம்பிக்கவும், கல்லூரி சஞ்சிகை விடவும் என, கல்லூரி மண்டபத்தில் ஒன்று கூடினர்.
சனவரி 13 வசாவிளான் கோவில் தோட்டக்கிணற்றில், சக்கரவாளி, யாழ்;ப்பாண அரச அதிபர் லூயிஸ், வண பிதாக்கள் கொலின் அலோசியஸ், பரோன், சட்டத்தரணி திசவீரசிங்கி முன்னிலையில் பூட்டப்பட்டது. இதை இறக்குமதி செய்த திரு.தோமஸ் அவர்களை அனைவரும் பாராட்டினர்.
சனவரி 24 வண டாக்டர் மெலிசானின் 25 வருட சேவையை முன்னிட்டு கொழும்பில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. பாப்பாண்டவரின் பிரதிநிதியும், ஐந்து மேற்றிரானியர்களும் இதில் கலந்து கொண்டனர். வாழ்த்துச் செய்தியும், மார்பில் அணியும் சங்கிலியும் குருசும் யாழ்ப்பாண மக்களால் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது.
சனவரி 25 கௌரவ சேர் சார்ள்ஸ் லேயாருக்கும், அவரது மனைவிக்கும் நல்லூர், சுகாதார விழாவில் நடந்த பொழுது போக்கு நிகழ்ச்சியில் வரவேற்பளிக்கப்பட்டது.
சனவரி மதுவிலக்கு இயக்கம் யாழ்ப்பாணம் பூராவும் மிகவும் உற்சாகத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
பெப்ரவரி 9 வழக்கறிஞர் ஐசாக் தம்பையாவின் தந்தை தம்பிப்பிள்ளை 63 வயதில் மானிப்பாயில் காலமானார்.
பெப்ரவரி 19 வட மாகாண அரச அதிபர் டபிள்யு லெவர்ஸ், சசெக்ஸ் வோர்த்திங் என்னுமிடத்தில் காலமானார்.
பெப்ரவரி பிரபல்ய வழக்கறிஞர் பிறிற்ரோவின் முத்த மகளும் வழக்கறிஞர் சேனாதிராசாவின் மனைவி யாகிய திருமதி. சேனாதிராசா கொழும்பில் காலமானார்.
பெப்ரவரி 18 இங்கிலாந்து சென்று மகாராணியை சந்தித்த பொ. அருணாச்சலம் தம்பதிகள் கொழும்பு திரும்பினர். பக்கிங்காம் அரண்மனையில் தம்பதிகளை வரவேற்ற மகாராணி தனது உருவப்படத்துடன் இலங்கைக்கு ஓர் செய்தியையும் திருமதி அருணாச்சலத்தினூடாக வழங்கினார்.
1905 மார்ச் 11 வடமாகாணத்திற்கான அனைத்து ரயில்பாதைகளையும் மதவாச்சியில் இணைக்கும் வேலை உதவி போர்மன் வோற்கான்ட் தலைமையில் முடிவுற்றது.
ஏப்ரல் 23 முதன் முதலாக யாழ்ப்பாணத்திற்கு மோட்டார் கார் வந்தது. நுவரெலியாவிலிருந்து திரு திருமதி டையர், திருமதி ஸ்கூவர் ஆகியோர் இதில் வந்திருந்தனர்.
மே 8 அரச காணிகளை தமக்கு சார்பாக குத்தகை தவணைகளை வழங்காததையிட்டு, யாழ்ப்பாண விவசாய கம்பனி குறைபட்டுக்கொண்டது.
மே 20 மானிப்பாய் தபால் கந்தோரில் இருந்து ஒன்றரை மைல் தூரத்தில் நவாலியில் கடல் நீர் வயலுக்குள் வந்தது. 90 அடி சுற்றளவும் 36 அடி ஆழமும் உள்ள பள்ளத்திற்குள் அது நின்றது.
மே மதுரை தமிழ்ச்சங்க உறுப்பினரும் கல்விமானுமாகிய சேர் கதிரவேற்பிள்ளை இந்து சமயம் குறித்து தொடர்ச்சியான உரைகளை யாழ்ப்பாணத்திலும், பருத்தித்துறையிலும் நிகழ்த்தினார்.
மே 30 அநுராதபுரத்தில் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்ட கத்தோலிக்க தேவாலயத்திற்கு 1000 ரூபா நஷ்ட ஈடாக, மேதகு கவர்னரின் அறிமுக கடிதத்துடன், அநுராதபுர பௌத்த தலைமை குரு ஜயவர்த்தனா, ஆயர் டாக்டர் யூலானிடம் கையளித்தார்.
யூன் 12 நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலில் 'சம்பு ரோக்சனம் பூசை' நடைபெற்றது.
யூன் இந்தியா,இலங்கைஆகிய நாடுகளின் நேரம் சர்வதேச நேரத்துடன் ஒன்றுபடக்கூடியதாக கிறின்விச் நேரத்தில் இருந்து 5 மணி30 நிமிடம் முன்னதாக மாற்றப்பட்டது.
யூன் 27 கொழும்பு பேராயர் டாக்டர் தியோபிலிஸ் அன்றூ மெலிசான் பிரான்ஸ் தூளுசில் காலமானார்.
ஆகஸ்ட் 1 198 மைல் நீளமுள்ள வடபகுதி ரயில்வே சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஆகஸ்ட்2 பொதுவைத்திய அதிகாரிகள் பதிவுச்சட்டம் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2 ஓய்வு பெற்ற வலிகாமம் வடக்கு மணியகாரர் விசுவநாத சின்னப்பர் முதலியார் காலமானார்.
ஆகஸ்ட் 19 மேதகு கவர்னர் பிளேக்கும் அவரது மனைவியும் அநுராதபுரத்திலிருந்து விசேட ரயிலில் யாழ்ப்பாணம் வந்தனர். மாட்டீன் வீதியூடாக, பின் பிரதான தெருவூடாக முற்ற வெளிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொழும்பிலிருந்து கவர்னரின் யாழ் விஜயத்தைபற்றி எழுத, பத்திரிகையாளர்கள் வந்தனர்.
ஆகஸ்ட் 22 கவர்னரும் பாரியாரும் யாழ். மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.
ஆகஸ்ட் 24 கவர்னரும் பாரியாரும், சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டதுடன், புதிதாக கட்டப்பட்ட றிச்வே மண்டபத்தையும் திறந்து வைத்தனர்.
ஆகஸ்ட் மானிப்பாய் வைத்தியசாலையை டாக்டர் தொம்சன் பொறுப்பேற்றார்.
1905 ஆகஸ்ட் இலங்கைத்தீவு பூராவும் மேற்பார்வை வேலைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களின் போக்குவரத்திற்கென மோட்டார் கார்களை பாவிக்க அனுமதிக்கப்பட்டனர்.
செப்டம்பர் கலாநிதி யோசுவா இலங்கை திரும்பி அரச சேவையில் இணைந்து கொண்டார்.
செப்டம்பர் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்குரிய சொத்துக்கள் மீது கோவிலில் பூசை செய்யும் பிராமணர்களால், உரிமைகோரி போடப்பட்ட வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு சட்டவாளர் தம்பையாபிள்ளையின் தகப்பனார் டாக்டர் சிவப்பிரகாசபிள்ளைக்கே, கோயிலும், கோவிலின் அசையும் , மற்றும் அசையா சொத்துக்கள் யாவும் உரித்தாகும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
செப்டம்பர் மக்கள் வசியாத கேரதீவுப்பிரதேசம் அரச வர்த்தமானி பிரகடத்தினூடாக நெடுந்தீவுடன் இணைக்கப்பட்டு கேரதீவின் வருமானங்கள் நெடுந்தீவிற்கு சேர்க்கப்பட்டன. '1889 கிராம சங்கங்கள் சட்டத்தின்' கீழ் 1901ம் ஆண்டு காலம் சென்ற யாழ்ப்பாண அரசாங்க அதிபர் லெவர்ஸ் இனால் நெடுந்தீவு கிராம சங்க நிலைக்கு உயர:;த்தப்பட்டது.
செப்டம்பர் 'இந்தோரில்', ஆசிரியராக கடமை புரிந்த உடுவிலைச் சேர்ந்த திரு குரொசெத் கல்கத்தாவில் நடந்த எம். ஏ. பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தி எய்தினார்; கல்கத்தா மாகாணத்தில் ஆங்கிலத்தில் மேல் பட்டம் பெற்ற முதல் ஆளும் இவரே.
செப்டம்பர் யாழ்ப்பாணத்தில் உள்ளுர் அதிகார சபையை அமைக்க அரசு அனுமதி அளித்தது.
செப்டம்பர் 24 யாழ்பொலிஸ் நிலையத்தில் இருந்து கச்சேரிக்கு ரெலிபொன், தந்திக்கம்பி போடப்பட்டது. உதவி தந்தி பரிசோதகர் திரு. வொன் லீங்கன்போர்க் இவ்வேலையை மேற்பார்வை செய்தார்.
ஒக்டோபர் 12 யாழ்ப்பாணம் வை. எம் சி .ஏ மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் எப்.என்.எஸ் வைத்தியசாலையை அரசிடம் ஒப்படைக்கும் விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதை அரசிடம் ஒப்படைப்பது நல்லதல்ல என்று தீர்மானமாயிற்று.
நவம்பர் இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட ஓர் வியாபார கூட்டுஸ்தாபனத்திற்கு இலங்கையில் இருந்த முத்துக்குளித்தல் நிறுவனத்தை 20,000 ஸ்ரேலிங் பவுணிற்கு வருடாந்த குத்தகைக்குவிட, இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதால், அரச செயலாளர் அனுமதி வழங்கினார்.
நவம்பர் 7 'அரச சத்திர சிகிச்சை அவை அங்கத்தவர';, பட்டத்தை இங்கிலாந்தில் பெற்றுத்திரும்பிய டாக்டர் பி. மயில்வாகனத்திற்கு, சுண்டுக்குளி சென் ஜோன்ஸ் கல்லூரியில் வரவேற்பளிக்கப்பட்டது.
நவம்பர் 9 திருகோணமலை கச்சேரியில் பிரதம லிகிதராக கடமையாற்றிய போல் சின்னத்துரை நிக்கலஸ் முதலியார் பட்டம் வழங்கி, கௌரவிக்கப்பட்டார்.
நவம்பர் 10 யாழ்ப்பாண உள்ளுர் அதிகாரசபை, அரச வர்த்தமானி பிரகடத்தினூடாக உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நவம்பர் 17 பரராசசிங்க முதலியார் சண்டிலிப்பாயில் காலமானார்.
நவம்பர் 29 இங்கிலாந்தில் சேவை செய்த பின் திரு ஏ.சி.தம்பு இலங்கை திரும்பினார்.
டிசம்பர் 5 ஓய்வு பெற்ற பொலிஸ் மாஜிஸ்திரேட் ரி.எம்.தம்புவின் மகன் ஏ.சி.தம்பு இந்திய சிவில் சேவையில் முதலிடம் பெற்ற இலங்கையராவார். இவருக்கு பெரும் வரவேற்பளிப்பதென யாழ் மத்திய கல்லூரியில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1905 டிசம்பர் 11 யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சேர் ஏ. கனகசபையின் மனைவி திருமதி. ஏ. கனகசபை காலமானார். இவர் பிரபல சமூக சேவகியும் தயாள சிந்தனையுள்ளவரும் ஆவார்.
டிசம்பர் 11 நீராவிக்கப்பல் ' ஜப்னா 'சம்மந்தமாக வாக்கர்ஸ் அன்ட் சன்ஸிற்கும் யாழ்ப்பாண நீராவி போக்குவரத்து கம்பனிக்குமிடையில் நடந்த வழக்கில் கொழும்பு மேலதிக நீதவான் விண்ணப்பத்தாருக்கு சாதகமாக அவர் கேட்டுக்கொண்டபடி 13000 ரூபா வழங்கும்படி எதிர் தரப்புக்கு உத்தரவிட்டார்.
டிசம்பர் 29 தைட்டி ஓய்வு பெற்ற உடையார் கதிரிப்பிள்ளை மரணமானார். அவர் நூறு வயதிற்கு மேல் உயிர் வாழ்ந்தார்.
1906 சனவரி 1 யாழ்ப்பாணம் உப்பளம் வருடாந்தம் குத்தகைக்கு விடப்படுவது நிறுத்தப்பட்டு சில்லறையாக விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அந்தர் 2.25 ரூபாவிலிருந்து 3.50 ரூபா வாக விலை அதிகரிக்கப்பட்டது.
சனவரி 6 யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் பிரபல்யமானவர்களால் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் 'யாழ்ப்பாணத்தவர் சங்கம்' ஸ்தாபிக்கப்பட்டது. 54 பேர் சங்க அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். ஜேம்ஸ் கென்;ஸ்மன் அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
சனவரி 7 யாழ்ப்பாண பொலிஸ் நீதிமன்ற மொழிபெயரப்பாளர் சபாபதி முதலியார் காலமானார்.
சனவரி 7 'பொது மராமத்து வேலை' யாழ்ப்பாண அதிகாரி விசுவலிங்கம் காலமானார். இவர் யாழ்ப்பாணத்தில் பல கோவில்களும், கிணறுகளும் கட்ட பெரும் பங்களித்தவராவார்.
சனவரி நோய்காரணமாக டாக்டர் றொக்வூட் ஓய்வு பெற்றதையடுத்து, இலங்கை சட்டசபையில் தமிழர்களுக்கான இடம் காலியாகவிருந்தது.
சனவரி 8 வட மாகாணத்தில் புகையிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஓர் நிபுணரை நியமிப்பது என கொழும்பில் விவசாய சபையில் நடந்த கூட்டத்தில் முடிவாயிற்று.
சனவரி 10 டச்சு காரர்களால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மரவள்ளிக்கிழங்கு பற்றி யாழ்ப்பாண விவசாயிகள் சபையில் யாழ்ப்பாண அரச அதிபர் பி. லூயிஸ் ஓர் ஆய்வறிக்கையை வாசித்தார்.
சனவரி 16 வண்ணார்பண்ணையில் திரு. திருமதி மாசிலாமணியின் வீட்டில் முதல் முதலாக தமிழ் பெண்கள் ஒன்று கூடல் நடைபெற்றது.
சனவரி 20 யாழ்ப்பாணத்தில் முதல் முதலாக 'வாறன் சேர்க்கஸ்' கம்பனி வந்திருந்தது. முதலாவது நிகழ்ச்சி 22ம் திகதி ஆரம்பமானது. குடா நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் வந்து பார்வையிட்டனர்.
பெப்ரவரி 4 டாக்டர் றொக்வூட்டின் இடத்திற்கு தமிழ் மக்கள் பிரநிதியாக வழக்கறிஞர் கனகசபை சட்ட சபைக்கு நியமிக்கப்பட்டார்.
பெப்ரவரி யாழ்ப்பாண காணிப்பதிவாளர் காராளசிங்கம் கொழும்புக்கு மாற்றாலாகிச் சென்றார். அவரின் இடத்திற்கு மட்டக்களப்பிலிருந்து காணிப்பதிவாளர் பிரான்ஸ்சிஸ் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டார்.
பெப்ரவரி 19 சார்ள்ஸ் வொட்ஸ்வோத் நினைவாக கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்திற்கான மூலைக்கல்லை, கொழும்பு ஆயர் நாட்டினார்.
பெப்ரவரி அரச அதிகாரிகளுக்கான சம்பள திட்டம், அரச செயலாளரினால் அங்கீகரிக்கப்பட்டது.
1906 பெப்ரவரி 23 வண்ணார்பண்ணை தபால் அதிபர் நிக்கோலஸ் எதிர்வீரசிங்கி காலமானார். இவர் ஓர் நேர்மையான, புத்திசாலியான அதிகாரியாவார்.
பெப்ரவரி 27 மானிப்பாய் வைத்தியசாலை அதிகாரி டாக்டர் தொம்சன் மதராசிற்கு மாற்றலாகச் சென்றார்.
மார்ச் 9 சைவ பரிபாலனசபை அதிகாரி பசுபதி செட்டியார் வண்ணார்பண்ணையில் காலமானார்.
மார்ச் 9 கௌரவ ஏ. கனகசபை, கல்விச் சபையின் ஓர் அங்கத்தவராக நியமிக்கப்பட்டார்.
மார்ச் 12 'ஈஸ்டன் ஆபேல்' என்னும் மிகப்பெரிய சேர்க்கர்ஸ் கொம்பனி யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சிகளை நடாத்தியது.
மார்ச் வட இலங்கை வெஸ்லியன் மிசனின், ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர் வணக்கத்துக்குரிய எட்மன்ட் றிக் காலமானார்.
ஏப்ரல் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவரும், அனைவருக்கும் தெரிந்தவருமான யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற செயலாளர், ஆர் கந்தையா முதலியார் லிகிதர் சேவையில் முதல்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். யாழ் மாவட்ட நீதிமன்றின் முதலாவது தமிழ் செயலாளர் இவரே அனைத்து இலாகாவிலும் திறம்படச் செயற்படக்கூடிய ஆளுமையுள்ளவரே இவர்.
ஏப்ரல் மானிப்பாயில் டாக்டர் ஏ.சி.ரி.மில்ஸ் காலமானார்.
மே காலம் சென்ற முருகேசுவினது மகளும், வழக்கறிஞர் அருளானந்தத்தின் சகோதரியுமான, செல்வி நல்லம்மா முருகேசன், மட்ராஸ் பல்கலைக்கழக எல்.எம்.எஸ் பரீட்சையில் ஆரம்ப விஞ்ஞான பிரிவில் சித்தியெய்தினார். தென் இந்திய கிறிஸ்தவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 10 மே 1906ம் ஆண்டு, பாரிசில் நடாத்தப்பட்ட, இளம் பெண்கள் கத்தோலிக்க சங்க கூட்டத்தில் பங்குபற்றினர்.
யூன் 7 சட்டசபை தமிழ் அங்கத்தவர் பொன்னம்பலம் குமாரசாமி கொழும்பில் காலமானார்.
யூன் 23 யாழ்ப்பாணத்திற்கு வந்த மாலை ரயிலில் சுவாமி அப்கேனந்தா குழுவினர் வந்தடைந்தனர்.
யூலை 10 வணக்கத்திக்குரிய டபிள்யு சி. ரக்கர் காலமானார்.
ஆகஸ்ட்4 யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான திரு. எஸ் பேதுறுப்பிள்ளை காலமானார்.
ஒக்டோபர் 13 வட இலங்கை கல்விச் சங்கத்தை உருவாக்கும் நோக்குடன் யாழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஓர் கூட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 22 கொழும்பு வைத்தியசாiலையில் டாக்டர் பி . சந்தியாகோ காலமானார்.
டிசம்பர் 28 யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கும் நோக்குடன் ஓர் கூட்டம் நடைபெற்றது.
டிசம்பர் கல்கத்தா புதுமுக பரீட்சை யாழ்ப்பாணத்தில் கடைசியாக நடைபெற்றது.
1907 சனவரி 1 யாழ்ப்பாண அமெரிக்கன் மிசனை சந்திப்பதற்கென, நியுயோர்க் நகரம், சிகாகோ ஆகியவற்றிற்கான செயலாளர்கள் வண கிறிகோனும், வண கிச்கொக்கும் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
சனவரி சண்டிலிப்பாயைச் சேர்ந்த அருணாசலம் சேது பைசான் உடையார், 97வது வயதில் காலமானார்.
பெப்ரவரி 1 இந்து இளைஞர்களுக்கான விடுதி இல்லம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.
பெப்ரவரி 16 நன்கு அறியப்பட்ட திறமையான வர்த்தகர் ஞானமுத்து யாழ்ப்பாணத்தில் காலமானார். யாழ்ப்பாணத்தில் கோச்சு வண்டி சேவையை இவர் நடாத்தினார்.
பெப்ரவரி 21 புதிய கட்டிட நிதிக்காக யாழ் மத்திய கல்லூரியில் ஓர் கலைநிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
பெப்ரவரி யாழ்ப்பாண மணியகாரராக திரு சின்னையா நியமிக்கப்பட்டார்.
1907 யூன் 1 சுங்க இலாகாவில் விலை மதிப்பீட்டினராக திரு. சுந்தரம் நியமிக்கப்பட்டார். வருட சம்பளமாக 3000 ரூபாவும் தனிப்படியாக 500 ரூபாவும் இவருக்கு வழங்கப்பட்டது.
யூன் 30 மலேசியாவில் ஒப்பந்தக்காரராக வேலை செய்த திரு கே கனகநாயகம் கோலாலம்பூரில் காலமானார். இவர் நெடுந்தீவில் கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவராவார்.
யூலை தென் இந்திய பாடசாலைகளின் பரிசோதகர் சி வில்லியம்ஸ்பிள்ளையின் மகன் ஆர் வில்லியம்ஸ் எடின்பரோ கிளாஸ்கோ மருத்துவ பல்கலைக்கழகங்களில்; மூன்று துறைகளில் சித்தியெய்தினார்.
யூலை 4 நீண்டகால சேவைக்காக கவர்னரிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்ற தம்பாபிள்ளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியபோது ரயில்வே நிலையத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
யூலை 10 கௌரவ கவர்னர் தம்பதிகள் திரு திருமதி சேர். கென்றி பிளேக் 'நீராவிக் கப்பல்' கார்டினியா மூலம் இங்கிலாந்து திரும்பினார்.
யூலை ரத்தினபுரி மாவட்ட தற்காலிக நீதிபதியாக, வழக்கறிஞர் க. பாலசிங்கம் நியமிக்கப்பட்டார்.
யூலை 17 திரு எஸ்.சி. சிதம்பரம் செட்டியார் கொழுப்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தார். வியாபார செட்டிமாரில் மிகவும் புகழ்பெற்ற பணக்காரரான இவரின் முதல் எழுத்துக்களில், இந்தியா, இலங்கை இன்னும் பல கடல் கடந்த நாடுகளில் இவரின் வர்த்தக நிறுவனங்கள் இருந்தன. உள்ளுர் செட்டிமார் இவருக்கு பெரும் வரவேற்பளித்தனர்.
ஆகஸ்ட் முன்னைய தமிழ் அரசர்களின் அரண்மனை முன்னால் யாழ்ப்பாண நகரிற்கான வரவேற்பு வாசல் அரசால் நிர்மானிக்கப்பட்டது.
ஆகஸ்ட் சுவாமி தயாராம் யாழ்ப்பாணம் வந்தார். ஏழாலை, கொழும்புத்துறை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் சொற்பொழிவு ஆற்றினார். கோயம்புத்தூர் ராமச்சந்திர ஆதினத்தை சேர்ந்த இவர் 13ம் திகதி திரும்பிச் சென்றார்.
1907 ஆகஸ்ட் 9 அமெரிக்க சிலோன் மிசனை பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாக இணைக்கும் அறிவித்தல் அரச வர்த்த மானியில் பிரசுரிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 17 இலங்கை அரசை நிர்வகிக்கும் அதிகாரியான சேர் கியூக் கிளிபோர்ட் யாழ்ப்பாணம் வந்தார். இவர் பழைய பூங்காவில் அமைந்த அரசாங்க அதிபர் எச். பிறைஸ் இன் வாசஸ்தலத்தில் தங்கியிருந்தார்.
ஆகஸ்ட் மேல்நீதிமன்ற சட்டத்தரணி திரு. எஸ். கதிரேசு யாழ்ப்பாணத்தில் ஆங்கிலமொழியில் செற்படும் பிரசித்த நொத்தாரிசாக நியமிக்கப்பட்டார். யாழ்மாவட்ட நீதிமன்ற சபையின் அங்கத்தவராகவும் இவர் இருந்தார்.
ஆகஸ்ட் 24 மேதகு சேர் எட்வார்ட் மக்கலெம் இலங்கை வந்து அரசாங்;கத்தை பொறுப்பேற்றரார்.
செப்டம்பர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற கோடீஸ்வரரான சிதம்பரம் செட்டியார் தேவ கோட்டையில் மரணமானார்.
செப்டம்பர் சேர் வில்லியம் ரூவைனம் யாழ்ப்பாண பதில் அரச அதிபராக வேலைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 80 வயதிலும் மிகவும் ஊக்கமாக இவர் செயற்பட்டார்.
செப்டம்பர் 6 கலை, இலக்கிய வேலைகளுக்கான 'உரித்துரிமை' அரச வர்த்தமானியில் சட்டமாக பிரசுரிக்கப்பட்டது.
1907 செப்டம்பர் கொழும்பு விண்ணப்ப ஆணையாளர் ஜே.எஸ் டிர்பேர்க் கொழும்பில் காலமானார்.
இவர் சிறிது காலம் பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய இடங்களில் பொலிஸ் மாஜிஸ்திரேடிட் ஆகச் செயற்பட்டவர்.
செப்டம்பர் 11 செட்டித்தெரு அபிவிருத்தி சபை ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் வடபகுதி ரயில்வேயுடன், மன்னாரையும் மன்னார் ஊடாக தென்னிந்தியாவையும் இணைக்கும் ரயில் பாதை அமைக்கும் நில அளவை வேலைகளுக்கு அரச செயலாளர், அனுமதி வழங்கினார்.
செப்டம்பர் 'யாழ்ப்பாண கத்தோலிக்க பாதுகாவலன்' ஆசிரியர் ஜேம்ஸ்.கெ. மார்ட்டின் காலமானார்
ஒக்டோபர் ' யாழ்ப்பாண ராஜா' என்றழைக்கப்பட்ட பி.ஓ டைக் இன் பெரிய உருவப்படத்தை பிரான்சிலிருந்து, வடமாகாண அதி அரச அதிபர் ஜே.பி.லூயிஸ் பெற்றுக்கொண்டார்.
ஒக்டோபர் 6 சென்பற்றிக்ஸ் கல்லூரியின் தலைமை ஆசிரியரும், கணித ஆசிரியருமான எஸ் ஏபிரகாம் நாரந்தனையில் காலமானார்.
ஒக்டோபர் 27 வழக்கறிஞர் திருநாவுக்கரசு கொழும்பில் காலமானார்.
ஒக்டேபார் 28 சட்டதரணி விசுவலிங்கம் மானிப்பாயில் காலமானார்.
நவம்பர் 6 டாக்டர் வி. சின்னையாபிள்ளை, மாந்தோட்டம் மன்னாரில் காலமானார். இவர் பருத்தித்துறை பண்டிதர் குமாரசாமிப்பிள்ளையின் மைத்துனருமாவார்.
நவம்பர் 8 தபால் அதிபரும், யாழ்ப்பாண தபால் அத்தியட்சகருமான பி. சமரசிங்க முதலியார் காலமானார்.
நவம்பர் 8 யாழ்ப்பாண பொது வைத்தியசாலையின், மேற்பார்வையாளர்களாக, சட்டத்தரணி ரி.பி. சங்கரப்பிள்ளையும், எஸ் சபாபதியும் நியமிக்கப்பட்டனர் என அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
நவம்பர் 21 பஞ்பாபின் பிரபல பேச்சாளர் 'தாகூர் கான் சந்திர வர்மா' யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தொடர்சியாகப் பல உரை நிகழ்த்தினார்.
டிசம்பர் 1 தெல்லிப்பளையில் தபால் கந்தோர் திறக்கப்பட்டது.
டிசம்பர் 14 ' யாழ்ப்பாண உள்ளுர் சபையின்' இரண்டாண்டுகளுக்கான 1908-1909 உத்தியோக பற்றற்ற அதிகாரிகள் தேர்தலில் திருவாளர்கள் எஸ் தம்பையாபிள்ளை, ஏ. கதிரவேலு, ஏ.சபாபதி ஆகியோர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.
டிசம்பர் டாக்டர் சந்தியாவோவின் மகனான அல்பிரட் சந்தியாகோ, இங்கிலாந்தில் நடந்த சட்டப்பரீட்சையில், உரோமச் சட்டத்தில் சித்தியெய்தி இரண்டாம் வகுப்பு கௌரவ பட்டத்தை பெற்றார்.
டிசம்பர் லண்டன், 'ரொக்காடேறோ' உணவுச்சாலையின், மண்டபத்துள் இலங்கையர்களின் இரவு விருந்துபசாரம் நடைபெற்றது.
டிசம்பர் 23 யாழ்ப்பாணக்கச்சேரி மண்டபத்தில், திரு.ஆர், டபிள்யு லிவர்சின் உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டது. இதை திரு. லீவர்சின் நண்பர்களும் ஆதரவாளர்களும் பணம் செலுத்தி விடுவித்திருந்தார்கள்.
"வரலாறு எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம் -