ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு ஓர் திறந்த மடல் ! - 1948 முதல் இலங்கை தலைவர்கள் அஞ்சல் ஒடுகிறார்கள்.
இங்கே எனது முக்கிய ஆதங்கம் என்னவெனில், மிக நீண்ட காலமாக பல்வேறு சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளைப் பற்றியது!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு ஓர் திறந்த மடல்! 1948 முதல் இலங்கை தலைவர்கள் அரசியல் தீர்வில் அஞ்சல் ஒடுகிறார்கள்.
ஜனாதிபதி அவர்களே! முதலில், ஜனாதிபதியாக நீங்கள் வெற்றி பெற்றதற்கும், மற்றைய தேர்தல்களுக்கு உங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி அத்துடன் ஜனதா விமுக்தி பெரமுனவிற்கும் எங்கள் வாழ்த்துக்கள். நாம் – உள்ளூர், நாடாளுமன்றத் தேர்தல்கள், தேர்தல் விஞ்ஞாபனங்கள், ஜனாதிபதி மாற்றங்கள், பிரதமர் மாற்றங்கள், அமைச்சர்கள் மாற்றங்கள் போன்று பலவற்றை மிக நீண்டகாலமாக கண்டிருக்கிறோம். ஆனால் தமிழர்களாகிய எமக்கு அரசியல், சமூக பொருளதார வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கடந்த எட்டு தசாப்தங்களிற்கு மேலாக நாம் அனுபவித்ததில்லை.
தேர்தல் பிரசாரத்தின் போது, பலரது காதுகளுக்கு இனிமையாக, யாவும் நன்றாகவும் இருக்கிறது. நான் என் தாயகத்தையும், என் வேர்களையும், அதாவது உறவுகள் நண்பர்களையும் நன்றாக நேசிப்பதால் இலங்கையில் உள்ள பல விவகாரங்களை பற்றி கவலை அடைகிறேன்.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ச – ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் பாரிய வெற்றியை பெற்றவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. நவம்பர் 2019 முதல் மார்ச் 2022 வரை அவருக்கு மூன்று திறந்த கடிதங்களை எழுதியுள்ளேன்.
உங்கள் புதிய அரசியலமைப்பிற்கு முன் நீங்கள் சில விஷயங்களை அறிந்திருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
உங்கள் தகவலுக்கு…
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் முதல் கிளர்ச்சியின் போது, நான் பள்ளி செல்லும் மாணவனாக இருந்தேன். இலங்கையின் முழு அரசாங்கத்தையும் ஆயுதம் மூலம் கைப்பற்றவிருந்த ஜே.வி.பி.யின் கிளர்ச்சி, படுதோல்வியில் முடிவடைந்தது. சமீப காலங்களில் ஜே.வி.பி.யின் முதல் கிளர்ச்சியில் பங்கேற்ற பலரை சந்தித்துள்ளேன். அக்கிளர்ச்சியை தொடர்ந்து அன்று “சேகுவேராக்கள்” என அழைக்கப்படும் ஜே.வி.பி. உறுப்பினர்கள், குற்றவியல் நீதி ஆணையம் – சி.ஜே.சி (CJC – Criminal Justice Commission ) எனும் சட்டரீதியான அரச நிறுவனம் மூலம், விசாரித்து தண்டனை கொடுக்கப்பட்டனர். தற்போதைய பயங்கரவாத தடை சட்டம், அன்றைய சி.ஜே.சி.யை விட மிக மோசமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், 1977 ஆம் ஆண்டில், ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சிக்கு வந்ததும், சி.ஜே. சி.யால் தண்டனை விதிக்கப்பட்ட ஜே.வி.பி.யின் ஸ்தபாகர் ரோஹண விஜேவீர உட்பட அனைத்து ஜே.வி.பி. அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
1983ம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரத்தில் தெற்கில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள், படுகொலை செய்யப்பட்டும், அவர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஜே.வி.பி.யும் இன்னும் இரண்டு அரசியல் கட்சிகள் இருப்பதாக அரசாங்கத்தினால் குற்றம்சாட்டப்பட்டு, அக்கட்சிகளை தடை செய்தது என்பது சரித்திரம்.
1987-1989 க்கு இடையில் ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி 1971 இல் நடந்ததைப் போலவே ஆயுதம் மூலம், சிறிலங்காவின் முழு அரசாங்கத்தையும் கைப்பற்றவிருந்த முயற்சி, மீண்டும் படுதோல்வி அடைந்தது. இந்தக் காலகட்டத்தில் ஜே.வி.பி.யினர் – நாசகார வேலைகள், படுகொலைகள், இராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். அதேநேரத்தில் அரச படைகள் இவர்களிற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை கையாண்டனர்.
1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும், அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டமூலம் மாகாண சபைகளிற்கான அதிகாரப் பகிர்வை ஜே.வி.பி. எதிர்த்து நின்று போராட்டம் நடத்தி தெற்கில் ஒரு இரத்தக்களரி மோதலுக்கு வழிவகுத்தீர்கள். இதன் மூலம் உங்கள் ஸ்தபாக உறுப்பினரான ரோஹண விஜேவீர உட்பட வேறு பல ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களை இழந்தீர்கள்.
1987 – 1989ம் ஆண்டு கால பகுதியில், நீங்கள் இந்தியர்களை குறிவைத்து- இந்திய சினிமா, இசை, சரக்கு பொருட்களைப் புறக்கணிக்க ஒரு பிரசாரத்தைத் தொடங்கியதுடன் அன்றைய காலகட்டத்தில், நீங்கள், “தேசபக்தி மக்கள் இயக்கம்” – DJV (Patriotic People’s Movement) என்று அழைக்கப்படும் ஒரு இந்திய எதிர்ப்பு இராணுவப் பிரிவையும் உருவாக்கியிருந்தீர்கள்.
தமிழ் அரசியல் கைதிகள்
1993 ம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி பிரேமதாசவின் இறப்பை தொடர்ந்து, சிறிலங்காவின் அரசியல் ஜே.வி.பி.க்கு ஆதரவாக மாறியது. அந்த காலகட்டத்தில் ஜே.வி.பி. தடைசெய்யப்பட்ட கட்சியாகவே திகழ்ந்தது. 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், ஜே.வி.பி.யி.னர் சந்திரிகா குமாரதுங்கவுக்காக வேலை செய்ததை தொடர்ந்து, ஜே.வி.பி.யின் தடையை சந்திரிகா குமாரதுங்கா நீக்கினார் என்பதும் சரித்திரம்.
இங்கே எனது முக்கிய ஆர்வம் என்னவெனில், மிக நீண்ட காலமாக பல்வேறு சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளைப் பற்றியது. சமீபத்தில் உங்கள் அமைச்சர்களில் ஒருவர், பத்திரிகைகளுக்கு, “மிகவும் கடுமையான வழக்குகளினால், நீதிமன்றங்கள் மூலம் தண்டனை விதிக்கப்பட்ட எந்த தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க முடியாதென கூறியுள்ளார்.
இங்கு எனது கேள்வி என்னவெனில், 1971ம் ஆண்டும் 1987-89 ஆண்டுகளில் இருமுறை சிறிலங்காவின் ஜனநாயக அரசாங்கங்களை கவிழ்க்க முயன்ற ஜே.வி.பி. உறுப்பினர்கள், இரு தடவையும், ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் எவ்வாறு மன்னிப்பு வழங்கினார்கள் என்பதை உங்கள் அமைச்சர் உட்பட நீங்கள் யாவரும் மறந்துள்ளீர்கள் போல் உள்ளது. ஆகையால் இவ் விடயமாக, ஊடகங்களிற்கு அவ் அமைச்சர் விளக்கமளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், தமிழ் அரசியல் கைதிகள் யாவரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை முடிவில் இதே பயங்கரவாத தடை சட்டத்திற்கு அமைய, அவர்களிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் யாரும், ஜே.வி.பி. உறுப்பினர்கள் போன்று, சிறிலங்காவின் ஜனநாயக அரசாங்கங்களை கவிழ்க்க முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அல்ல! ஆகையால், ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு ஒரு சட்டம், தமிழ் அரசியல் கைதிகளிற்கு இன்னுமொரு சட்டம் என்பது உலகில் யாராலும் ஏற்க முடியாத விடயம்.
தற்போதைய தமிழ் அரசியல் கைதிகள் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகள், ஜே.வி.பி. உறுப்பினர்கள், சிறிலங்காவின் ஜனநாயக அரசாங்கங்களை ஆயுதங்கள் மூலம் கவிழ்க்க முயன்றதிற்கு மேலான, கடுமையான குற்றமாக நீங்கள் கருதுகிறீர்களா? இதேவேளை, தேர்தல் காலங்களில் நீங்கள், இதே பயங்கரவாத தடை சட்டத்தை அகற்றுவதாக கூறியது உங்களுக்கு ஞாபம் இருக்கிறதா? இத்தகைய சூழ்நிலையில், ஜனநாயக அரசாங்கத்தை, ஒருபோதும் கவிழ்ப்பதற்கு முயற்சிக்காத தமிழ் அரசியல் கைதிகளை, விடுவிப்பதில் உங்களுக்கோ அல்லது உங்கள் அரசாங்கத்திற்கோ என்ன சிக்கல்கள் உள்ளது என்பதை யாவரும் அறிய விரும்புகிறோம்.
டி.எஸ். சேனநாயக்கவின் காலம் முதல் இன்று வரை…
டி.எஸ். சேனநாயக்கவின் காலம் முதல் இன்று வரை, இலங்கைத் தீவில் நடைபெறுவதை ஆய்வு செய்ததன் அடிப்படையில், எங்கள் நிலை என்னவெனில், தெற்கில் உள்ள அரசியல் கட்சிகளிடையே, அனைவரும் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கலாம். ஆனால் தமிழர்கள் விடயத்தில் உங்கள் சகலருடைய செயற்பாடுகளும் ஒரே விதமானவையே. உங்களிற்கு முன்பு பதவியிலிருந்தவரது தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை, “அஞ்சல் ஓட்டம்” மூலம் பின்பற்றுகிறீர்கள்.
தேர்தல் காலத்தில், முன்னைய ஒவ்வொரு ஜனாதிபதிகளும், பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் ஒழிப்போமென கூறி வந்தார்கள். ஆனால் இவ்விடயங்களில் எந்த முன்னேற்றத்தையும் நாம் கண்டது கிடையாது. இப்போது நீங்கள் அல்லது உங்கள் அரசாங்கம் இவற்றை அகற்றுவார்களென கூறுவதை யார் நம்புவார்கள்?
‘சுத்தமான சிறிலங்கா’ என்று உங்கள் அரசாங்கம் கூறுவதை கேட்டு, அரசியல் ஞானம் இல்லாத சில தமிழ் மக்கள் குதூகலம் அடைந்தார்கள். அப்படியானால், நீங்கள் முதலில் உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டான யூலை 1983 ல், தெற்கில் வாழ்ந்த தமிழர்கள் மீதான மிக மோசமான படுகொலைகளை, நீங்கள் மேற்கொண்டதாக மிக பாரதூரமான குற்றச்சாட்டுள்ளதை அறிவீர்கள். அப்படியானால், உங்களிற்கும் யூலை 1983ல் தமிழர்கள் மீதான படுகொலைகளுக்கும், உங்களில் எவருக்கும், எந்த சம்பந்தமுமில்லை என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய மிக முக்கியமான கடமைப்பாடு உங்களுக்கு உள்ளது.
போர்க் காலத்தில், உங்கள் செயல்பாடுகளைப் பார்க்கும்போது – ஜனாதிபதி சந்திரிகா மற்றும் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து, ‘தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான’ போராட்டத்தை அவர்கள் அடக்க வேண்டும் என்ற நிபந்தனையில், அவர்களிற்கு ஆதரவு அளித்தீர்கள் என்பதும் சரித்திரம். இப்படியான அணுகுமுறையை கொண்ட ஜே.வி.பி, தமிழர்களது அரசியல் விடயங்களில், எப்படியான நிலைப்பாட்டை கொள்வார்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. யூலை 1983ல் தமிழர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னால், நீங்கள் இருந்தது என்பதை பல ஊடகங்களில் படித்துள்ளோம்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்து, ஜே.வி.பி.யின் கொள்கையை ரோஹண விஜேவீர மாற்றியதிலிருந்து, உங்கள் கட்சியினால் பல தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்பதில் எமக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆனால், ராஜபக்சக்கள் போன்றோ அல்லது தெற்கில் உள்ள மற்றைய மிக மோசமான இனவாதிகளைப் போலல்லாமல், நீங்கள் அனைவரும் கவர்ச்சிகரமான சொற்களால் மென்மையாகப் பேசி, தமிழர்களை அமைதியாக குழி பறிக்கிறீர்கள்.
1987 முதல், காணாமல் போன ஜே.வி.பி.யினர் குறித்து மகிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார, மங்கள சமரவீர போன்று சிலர், அன்று சர்வதேச அளவில் பணியாற்றினார்கள். இதனது நன்றிக் கடனாக, இன்று எந்த நிலையிலும், மகிந்த ராஜபக்ச மீது நீங்கள் எந்த விசாரணையும் செய்ய மாட்டீர்களை என்பது உலகறிந்த உண்மை.
தெற்கில் காணாமல் போவோரின் உச்சகட்ட காலங்களில், சில முக்கியமான ஜே.வி.பி. ஆட்களை எனது மனைவியார் சிறிலங்காவிலிருந்து காப்பாற்றினார் என்பது பற்றி, இன்றைய ஜே.வி.பி.யிலுள்ள எந்தனை பேருக்கு தெரியும்? இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் பழைய சகாக்களிடமிருந்து விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். உண்மையில், அது ஒரு மிக ஆபத்தான நடவடிக்கை. இன்னும் பல கதைகளைச் சொல்வதற்கு துரதிர்ஷ்டவசமாக இன்று மங்கள சமரவீர உயிருடன் இல்லை.
சமீபத்தில், உங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல செயல்களில் ஒன்று, நீங்கள் கோத்தாபய ராஜபக்சவை விட மோசமானவர்களா என்று பலரை சிந்திக்க வைத்துள்ளது. உதாரணமாக, ‘யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள்’ அர்த்தமின்றி விசமத்தனமாக நிராகரிக்க மேற்கொள்ளப்பட்ட வழிகள். இவை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும். அந்த வேட்புமனுக்களை நிராகரிப்பதன் மூலம், அப் பகுதிகளில் உங்கள் கட்சியை வெற்றிபெறச் செய்யலாமென்ற கபட நோங்கங்கள் உங்களிடையே நிலவியுள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தன.
கதிர்காமத்தைச் சேர்ந்த பிரேமாவதி மனம்பேரி என்ற ஒரே ஒருவரின் துயரக் கதையை நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் நினைவு கூருகிறீர்கள். ஆனால், வடக்கு, கிழக்கில் ஆயிரக்கணக்கான பிரேமாவதி மனம்பேரிகளை நாங்கள் அறிவோம். உங்கள் இரண்டாவது கிளர்ச்சியின் வேளையில், பிரேமாவதி மனம்பேரியின் குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை, ஜே.வி.பி பழிவாங்கியுள்ளது என பேசப்படுகிறது. அப்படியானால், நாம் எத்தனை ஆயிரம் பழிவாங்கல்கள் செய்ய வேண்டும்?
புதிய அரசியலமைப்பு
உங்கள் புதிய அரசியலமைப்பு குறித்து, எனக்கு பல கேள்விகள் உள்ளன. முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் – சமத்துவம், ஜனநாயகம், ஒவ்வொரு உள்ளூர் அரசாங்கத்திற்கும், மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும் அரசியல், நிர்வாக அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் என்றும் இதனால் அனைத்து மக்களும் ஒரே நாட்டிற்குள் ஆட்சியில் ஈடுபட முடியும் என்றும் உங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த எட்டு (8) தசாப்தங்களான தொடர்ச்சியான பாகுபாடு, ஏமாற்றம், போலி வாக்குறுதிகளை அனுபவிக்கும் தமிழர்களாகிய நாங்கள், எமது தாயகமான வடக்கு – கிழக்கின் ‘வாக்கு வங்கியை’ குறிவைத்து வெளியிடப்பட்ட கற்பனை தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் எங்களை ஏமாற்ற முடியாது.
1972 ம் ஆண்டில், சிறிலங்கா சுதந்திர கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி – இணைந்து முன்வைத்த ‘குடியரசு’ அரசியலமைப்பில், இதற்கு முன்னைய அரசியலமைப்பில், தமிழ் மக்களிற்கு கொடுக்கப்பட்டிருந்த குறைத்தபட்ச உரிமைகளை நாங்கள் இழந்தோம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இவ் அரசியலமைப்பு “தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின்” உருவாக்கத்திற்கு வழிவகுத்ததுடன், அவர்கள் சுதந்திர “தமிழ் ஈழம்” அரசை கோருவதற்கு தூண்டுகோலாகியது. இதுவே தமிழ் இளைஞர்கள் ‘ஆயுதப் போராட்டத்தை’ நடத்துவதற்கான பாதையை உருவாக்கியதுடன், ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக போர் நீடித்தது.
ஜே.வி.பி. தேசிய மக்கள் கட்சியாக மறுசீரமைக்கப்பட்ட பின்னரும், நீங்கள் 13வது திருத்த சட்டத்தை முற்றிலும் எதிர்க்கிறீர்கள். இவ் யதார்த்தம் உண்மைகளை மனதில் கொண்டு, உங்களால் கொண்டு வரவிருக்கும் புதிய அரசியலமைப்பில், 13வது திருத்தத்தில் உள்ளவை தன்னும் இருக்குமா என்ற சந்தேகம் யாவருக்கும் உள்ளது.
உங்கள் வார்த்தையில் ‘தேசியப் பிரச்சினை’ என்ற விடயம், உங்களால் கொண்டு வரவிருக்கும் புதிய அரசியலமைப்பு, தமிழ் ‘தேசத்தின்’ அபிலாஷையைப் புறக்கணிக்கும் என்பதில் நாம் மீண்டும் உறுதியாகவுள்ளோம். உங்களை பொறுத்தவரையில், போலியான தொல்பொருள் கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பௌத்த சிங்களவர்களின் வரலாற்றுப் பிரதேசங்கள் என்று கூறுவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள். மேலும், சிறிலங்காவின் குடிமக்களாக வாழும், எந்தவொரு இனமும் சிறிலங்காவில், அவர்கள் விரும்பும் பிராந்தியங்களில் நகரங்கள் மற்றும் மாகாணங்களில் எந்தப் பகுதியிலும் வாழலாம் என்பதுடன், மற்றும் வர்த்தகம், வணிகம், சுற்றுலா, கடல்சார் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடலாம் என்று கூறுவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்.
சிங்கள பௌத்தர்களாகிய நீங்கள், தமிழர்களுக்கும் உங்களிற்கும் இடையிலான வேறுபாடுகளை புரிந்து கொள்ளாத வரை, தமிழர்கள் – சைவர்கள்/இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் மொழி, மதங்களின் நெறிமுறைகள், கலாசாரம், மரபுகள் போன்றவற்றை நீங்கள் புரியாத வரை, இலங்கைத் தீவில் இனப் பிரச்சினை தொடரும்.
நீங்கள் அனைவரும் தமிழர்களது விடயங்களில், வெவ்வேறு அணுகுமுறைகளை கொண்டிருக்கிறீர்கள். இவை இனரீதியான புரிந்துணர்வை ஒரு பொழுதும் கொண்டுவர முடியாது. நீங்கள் கூறும் பொய் வாக்குறுதிகள் வாய்மொழியாக மட்டும் இருக்காது, உங்கள் இதயங்கள், மனங்களில் இருப்பதுடன் செயலில் இருக்க வேண்டும்.
யாழ். மாவாட்டத்தில் உங்கள் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக நீங்கள் சர்வதேசத்திற்கு கூறுகிறீர்கள். வெளிப்படையாகச் சொன்னால், கடந்த காலங்களில் – ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க வேட்பாளர்கள் – திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை நீங்கள் ஏன் மறைத்துள்ளீர்கள்? இவ்விடயத்தை விவேகமுள்ள எந்தவொரு நபரும் பெரிதுபடுத்த மாட்டார்கள். சந்திரிகா குமாரதுங்க, ராஜபக்ஷக்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் அரசியல் செய்த டக்ளஸ் தேவானந்தாவும் கடந்த காலத்தில் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை மறைக்காதீர்கள்.
சுனாமி கட்டமைப்பும், வடக்கு – கிழக்கு பிரித்தலும்
எது என்னவானாலும், உங்கள் கட்சி 2005 ம் ஆண்டு யூலை மாதம், சிறிலங்காவின் சுனாமி கட்டமைப்பிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்து அதில் வெற்றியும் கண்டீர்கள். இக் கட்மைப்பு மூலம், சுனாமியினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு கிடைக்கவிருந்த நிவாரணங்கள் யாவற்றையும் நிர்மூலம் ஆக்கிய பெருமை ஜே.வி.பி.யையே சாரும். அத்துடன், 2006 அக்டோபரில் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் தாயகமாக விளங்கும் வடக்கு- கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு வழக்கைத் தாக்கல் செய்து அதிலும் வெற்றியும் கண்டீர்கள்.
இன அடிப்படையில் எதுவும் இருக்கக்கூடாது என்று கூறும் நீங்கள், கதிர்காமம் மற்றும் தெற்கின் பிற பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் குடியேற்றுவதற்கு முயற்சிப்பீர்களா? கதிர்காமத்தை யார் உருவாக்கினார்கள் என்பதை உங்களால் வெளிப்படையாக கூறமுடியுமா? ஆரம்பத்தில், கதிர்காமத்திலும் சுற்றுப்புறங்களிலும் எத்தனை புத்த கோவில்கள் இருந்தன என்பதையும் கூறுங்கள்? 1960 பிற்பகுதி முதல் நான் கதிர்காமத்திற்கு விஜயம் செய்துள்ளேன். ‘புனித நகரம்’ என்ற பெயரில், கதிர்காமத்தில் நடந்த மாற்றங்களைக் பார்வையிட்டுள்ளேன். 1970 ல் கதிர்காமத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ள அனைத்து சைவ கோயில்களும் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்தன.
ஒற்றுமை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பு பற்றி பேசும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் தையிட்டியில் ஒரு தனியார் நிலத்தில் கட்டப்பட்ட புத்த கோவிலிற்கான பிரச்சினைக்கு இன்றுவரை, ஏன் ஒரு தீர்வை முன்மொழியவில்லை? உங்கள் அரசாங்கம் உண்மையில் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை விரும்பினால், இந்த புத்த கோவிலுக்கு அருகில் அரசாங்க நிதியில் ஒரு சைவ (இந்து) கோவிலைக் கட்டுங்கள் பார்ப்போம். அத்துடன் புத்த கோவில் கட்டப்பட்ட நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
நேரடியான கேள்விகள்.
2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் காபூலின் வட-கிழக்கில் அமைந்துள்ள பாமியல் பள்ளத்தாக்கில் தலிபான்களால் இரண்டு புத்தர் சிலைகள் அழிக்கப்பட்ட பொழுது, சிறிலங்காவில் உள்ள பௌத்தர்களாகிய நீங்கள், அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றினீர்கள் என்பதை மறந்திருக்க மாட்டீர்களென நம்புகிறேன். அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி, ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், ஐ.நா. பொதுச் சபையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியது. இதேவேளை, கொழும்பில் நான்கு மகாநாயக்கர்கள் தலைமையில், ஒரு வெகுஜனப் போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பௌத்த துறவிகள், பல்வேறு பௌத்த குழுக்களின் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன் பொருள் நீங்கள் புத்தர் அல்லது புத்தர் சிலைகளின் மதிப்பு மற்றும் பெறுமதியை மட்டுமே புரிபவர்களா? இல்லையேல் நீங்கள் மற்றைய மதங்களின் பெறுமதியை, மதிப்பை நீங்கள் மிக மோசமாக கையாழுவதற்கு காரணம் என்ன? இந்த அணுகு முறைகளும் புத்தரின் சிந்தனையென கூறுவீர்களா? இப்பொழுது, அதே பௌத்தர்கள், சிறிலங்காவில் சைவ/இந்து கோயில்களை அழித்து புத்தர் சிலைகளை நிறுவுகிறார்கள். இது தான் உங்கள் கட்சி கூறும் – ஒற்றுமை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பு என்று கூறுகிறீர்களா?
யாழ்ப்பாணத்தில் உரை
2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் நீங்கள் 55 நிமிடமாக ஆற்றிய உரையைக் கேட்டேன். வெளிப்படையாக சொல்வதானால், இந்த உரை உங்கள் ஆதரவாளர்களுக்கு நல்லது. யாழ்ப்பாணத்தில் உங்கள் உரை, வடக்கு கிழக்கில் “அபிவிருத்தி” என்ற அடிப்படையிலே மேற்கொள்ளப்படுகிறது. இவற்றை தவிர்த்து அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் யாரும் கதைப்பது கிடையாது.
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், தங்கள் உயிர்களை பணயம் வைத்து, கடந்த எட்டு தசாப்தங்களாக ஏன் போராடுகிறார்கள், ஏன் இவ்வளவு அழிவை சந்தித்துள்ளார்கள் என்பதை நீங்கள் யாரும் உணராது அலட்சியம் செய்கிறீர்கள்! வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி இல்லாத காரணத்தால், அவர்கள் போராடினார்கள் என்பது உங்கள் சிந்தனையா? சர்வதேச விளையாட்டு அரங்கு யாருக்கு?
நீங்கள் யாவரும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் – சிங்கள குடியேற்றத்திற்கும் பௌத்த மயப்படுத்தலிற்கும் வழி வகுக்கிறீர்கள் என்பதே யதார்த்தம், உண்மை. உதாரணத்திற்கு சர்வதேச விளையாட்டு அரங்கு கட்டுவதற்கு குறைந்தது ஆயிரம் சிங்கள – பௌத்த தொழிலாளர்கள் அங்கு சென்று, மறைமுகமான சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வார்கள் என்பது எங்களிற்கு விளங்காத விடயமா?
உங்கள் உரையில் தமிழர்கள் தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டீர்கள். போர் முடிந்த பின்னர் ராஜபக்சக்கள் இதையே தமிழ் மக்களிற்கு கூறினார்கள். நீங்கள், உங்கள் கடந்த காலத்தை மறக்க முடியுமா? கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என சொல்லும் நீங்கள், ஏன் ஒவ்வொரு மேடைகளிலும் உங்கள் பழைய கதைகளையே பேசுகிறீர்கள்?
நீங்கள் யார்?
இன்று, ராஜபக்சக்கள் குடும்பம் நிதியை தவறாகக் கையாண்டது பற்றி நீங்கள் விசாரிக்கிறீர்கள். போருக்கு ஜே,வி.பி குருட்டுத்தனமாக ஆதரவளித்ததால், ராஜபக்சக்கள் பயனடையவும், நிதியை தவறாகக் கையாளவும் வழிவகுத்துள்ளது என்பதை நீங்கள் உணரவில்லையா?
உங்கள் உரையில், உங்கள் அரசாங்கமும் ஜே.வி.பி/என்.பி.பி.யும் சுத்தமான கைகளைக் கொண்டிருப்பதாக கூறினீர்கள். இங்கே நான் இரண்டு கேள்விகளை கேட்க விரும்புகிறேன். ஆவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தொழிலாளர் உரிமைகளை அலட்சியம் பண்ணிய குற்றிச்சாட்டினால், குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட நபர், இன்று உங்கள் ஜெனீவா தூதுவராக இருப்பதை நீங்கள் அறியவில்லையா?
அடுத்து, உங்கள் அரசாங்கத்தின் நட்பு நாடான கியூபாவிற்கான தற்போதைய தூதுவர் யார்? இவ் நபரை கியூபாவிற்கு தூதராக அனுப்ப உங்களால் முடியுமானால், உங்கள் முன்னைய நாடாளுமன்ற சபாநாயகரை ஏன் நீக்கினீர்கள்?
உங்களுக்கு எனது கடைசி அறிவுரை என்னவென்றால், எங்களுக்குள் வேறுபாடு இருக்கலாம், மேலும் உங்கள் அரசாங்கம் தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்கப் போவதில்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இவற்றிற்று எங்களால் வழமைபோல் வழிகள் கண்டுபிடிக்க முடியும்.
ஐ.நா.மனித உரிமை சபையில், சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய ரணில் விக்ரமசிங்க, இப்பொழுது உங்களை ஐ.நா.மனித உரிமை சபையிலிருந்து வெளியேறுமாறு சொல்வதில் பல கபடங்கள் உள்ளது. இவர்கள் பற்றி மிக எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளது. உங்களை ஏமாற்றுவதற்காக பல விஷயங்களை கபடமாக தூண்டுகிறார்கள்!