உளறிக்கொட்டும் டிரம்ப்: ''பாகிஸ்தானும், இந்தியாவும் சமமான சக்தியா?" - மோடியை வறுத்தெடுக்கும் காங்கிரஸ்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து, இந்தியா - பாகிஸ்தான் குறித்து சர்ச்சை!

இந்தியா - பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து இயங்கும் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இதன் பிறகு இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அவற்றை இந்திய படைகள் தடுத்து நிறுத்தி அழித்தன.
இதைத்தொடர்ந்து, சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒருவழியாக ஒப்புக்கொண்டன. இந்நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள், கடந்த மே 12 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துவது, எந்தவொரு ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கக்கூடாது என்ற உறுதிப்பாட்டை தொடர்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், எல்லைகள் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள ராணுவத்தை குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை இரு தரப்பினரும் பரிசீலிப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவிய மோதலை நிறுத்தியது அமெரிக்காதான் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத மோதல், அமெரிக்காவின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிறுத்தாவிட்டால் அந்நாடுகளுடன் வணிகம் செய்ய மாட்டேன் என நான் கூறியதை அடுத்து, இரு நாடுகளும் மோதல்போக்கை நிறுத்த ஒப்புக்கொண்டன" எனக் கூறினார். மேலும், சவுதிக்கு சென்றுள்ள டிரம்ப், அங்கேயும் இதே கருத்தை கூறினார்.
இந்நிலையில், சவுதியில் டிரம்ப் பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பர துறைத் தலைவர் பவன் கேரா, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிடுவது மட்டுமல்லாமல், பிரதமர் மோடியை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் ஒப்பிடுகிறார். இதுபோன்ற ஒரு ஒப்பீடு, இந்திய பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்ற ஒன்றா?" என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேபோல, அக்கட்சியின் தரவு - பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி கூறுகையில், ''பாகிஸ்தான் பிரதமரும், இந்தியப் பிரதமரும் சமமானவர்கள். பாகிஸ்தானும் இந்தியாவும் சமமான சக்திகள். இதை சொல்வது யார் தெரியுமா? பிரதமர் மோடியின் 'நல்ல நண்பர்' டிரம்ப் தான்." என கிண்டல் அடித்துள்ளார்.
டிரம்ப் கூறியது ஒட்டுமொத்த நாட்டையும் பரபரப்பாக்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதுபற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. இதையடுத்து, மோடியை காங்கிரஸ் தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறது.