உடனுக்குடன் பழிவாங்கிய பாகிஸ்தான்.. இந்திய தூதரக ஊழியர் 24 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உளவு பார்த்ததாக கூறி, அவரை நாடு திரும்ப இந்தியா உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, அவரது குடும்பத்துடன் 24 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உளவு பார்த்ததாக கூறி, அவரை நாடு திரும்ப இந்தியா உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதற்கு பழிவாங்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மீது அதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து அவரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலானது, இரு நாடுகளுக்கு இடையே பெரிய அளவிலான மோதலை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட போர் தொடங்குவது போன்ற சூழல் உருவானது. இதை பார்த்து பாகிஸ்தான் பணிந்து போன நிலையில், இந்தியா இந்த மோதலை கைவிட்டது. எனினும், இரு நாடுகள் இடையேயான தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர் ஒருவரை, உடனடியாக நாடு திரும்புமாறு இந்தியா அண்மையில் உத்தரவிட்டது. இந்தியாவில் அவர் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டிய இந்தியா, சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் தூதரக ஊழியர், 24 மணிநேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கெடு விதித்தது.
இந்நிலையில், இதற்கு பழிவாங்கும் விதமாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இந்திய ஊழியரை, உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டி, "ஏற்க முடியாத நபர்" (persona non grata) எனக் கூறி தங்கள் நாட்டை விட்டு 24 மணிநேரத்தில் வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாடு தெரிவித்துள்ளது.
முன்னதாக, பஞ்சாப்பில் உளவு பார்த்ததாக கூறி பெண் உட்பட இருவரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களுக்கும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர் ஒருவருக்கும் தொடர்பு இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அதேபோல, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு கசியவிட்டதாக மற்றொரு பஞ்சாப் போலீசார் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரங்களில் மேற்குறிப்பிட்ட பாகிஸ்தான் தூதரக ஊழியர் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.