நேர்மை – வெளிப்படைத்தன்மை – எளிமை இவையே சிற்றம்பலம் ஐயாவின் அடையாளங்கள்!
,

நேர்மை – வெளிப்படைத்தன்மை – எளிமை இவையே சிற்றம்பலம் ஐயாவின் அடையாளங்கள். அவரை முன்மாதிரியாகக்கொண்டு இளையவர்கள் அவரின் வழித்தடத்தை பின்தொடரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து அவரின் வாழ்நாள் சாதனைகளை வாழும்போதே வாழ்த்தும் கௌரவிப்பு விழாவும் நூல் வெளியீடும் மாதகல் இளைஞர் சங்க கலையரங்கத்தில் இன்று சனிக்கிழமை (17) இடம்பெற்றது.
விழா நாயகன் மற்றும் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்றுச் செல்லப்பட்டனர். இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தெரிவித்ததாவது, இந்த மாதகல் மண்ணுக்கு நான் பிரதேச செயலராக, மாவட்டச் செயலராக இருக்கும்போது வந்திருக்கின்றேன்.
இப்போது ஆளுநராகிய பின்னர் இரண்டாவது தடவையாகவும் வருகின்றேன். ஒவ்வொரு தடவையும் வரும்போதும் எனக்கு பிரதேச செயலராக இங்கு கடமையாற்றிய நினைவுகளே வருகின்றன.
அந்தப் பயங்கரமான காலத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் இங்கு வந்து சென்றிருக்கின்றேன்.
வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு உரையாற்றியவர்கள் சிற்றம்பலம் ஐயாவைப்பற்றி ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.
அவரின் வெளிப்படைத்தன்மை பற்றி சிலாகித்திருந்தனர். ஒரு சதத்துக்கும் கணக்குக்காட்டக் கூடிய ஒருவர். இன்று இவ்வாறான வெளிப்படைத்தன்மையானவர்களைக் காண்பது அரிது.
ஒரு நிறுவனம் வளர்ச்சியடைவதற்கு வெளிப்படைத்தன்மை முக்கியம்.
வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள்.
சிற்றம்பலம் ஐயாவிடம் சிறந்த ஆளுமையும் தலைமைத்துவமும் இருக்கின்றது. அவர் யாரிடமும் சத்தமாகப் பேசமாட்டார்.
மக்களிடத்தில் அன்பாக நடந்துகொள்ளும் ஒருவர். அதனால்தான் இன்று ஊரே அவருக்கான கௌரவிப்பு விழாவுக்கு திரண்டு வந்திருக்கின்றது.
இன்று ஒரு நிறுவனம் சிறப்பாக இயங்குகின்றது என்றால் உடனே அங்கே புல்லுருவிகளும் வந்துவிடுவார்கள்.
அவர்கள் அந்த நிறுவனத்திலிருந்து எப்படி உழைக்கலாம் என்றே சிந்திப்பார்கள். இதனால் நாளடைவில் அந்த நிறுவனங்கள் வீழ்ச்சியடைகின்றன. ஆனால் உங்கள் சிற்றம்பலம் ஐயாவால் ஊரிலுள்ள பல நிறுவனங்களும் இன்றும் சிறப்பாக இயங்குகின்றன.
அவர் தனது இந்த 82 வயதிலும் ஊருக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு மனிதரை ஊரே திரண்டு கௌரவிப்பது என்பது பாராட்டக்கூடியது. அவர் தொடர்ந்தும் ஊருக்கு சேவையாற்றவேண்டும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் 'கந்தன் அலங்காரம்' மற்றும் 'மாதகலின் விடிவெள்ளி' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி சுபாஜினி மதியழகன் மற்றும் சமயத் தலைவர்கள், புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.