கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு பின்புறமாக உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்!
காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் ரஜனியை குண்டுக் கட்டாகத் துாக்கிக் கொண்டு செல்வதை அவதானித்தேன்.

1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ரஜனி.
யார் இந்த ரஜனி...
ரஜனி வேலாயுதம்பிள்ளை வயது 22 என்ற இளம் யுவதி கோண்டாவில் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் ப.டு.கொ.லை செய்யப்பட்டார்.
இவர் யாழ்,கோண்டாவில் டிப்போக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அண்மித்த பகுதியில் வைத்து 30.09.1996ம் ஆண்டு காணாமல் போயிருந்தார்.
தனது தாயார் மற்றும் உறவினர்களுடன் இணைந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்குப் பயணமாக தயாராக இருந்தார்.
வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களையும் செய்து முடித்தவர் மானிப்பாய் பகுதியிலுள்ள உள்ள தனது உறவினர்களுக்கு பயணம் பற்றி கூறுவதற்காக பல்கலைக்கழக இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியிலுள்ள காவலரண் ஊடாகச் சென்ற ரஜனி பின்னர் வீடு திரும்பவில்லை.
உடனே வீடு திரும்புவதாக கூறிச் சென்றவர் அன்றைய தினம் வீடு திரும்பாததால் போக்குவரத்து சிக்கலால்தான் வராமல் உள்ளாரென நினைத்த அவரது உறவுகள் அன்று ரஜனியை தேடாமல் விட்டுள்ளனல்.
மறுநாளும் மதியம் வரை ரஜனி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவளது அண்ணன் மானிப்பாய்க்கு சென்று உறவினர்களிடம் விசாரித்த போது ரஜனி நேற்றே திரும்பிச் சென்று விட்டதாக கூறியுள்ளார்கள்.
அதன் பின்னரே அண்ணன் உட்பட உறவினர்கள் ரஜனியை இராணுவ முகாம் முகாமாக தேடத்தொடங்கினர்
பொலிசாரிடமும் முறையிட்டுள்ளனர்.
முறையிட்டதில் எந்தவித தகவலும் கிடைக்காமல் இருந்தது.ரஜனி காணாமல் போய் இரண்டு கிழமைகள் ஆகிய நிலையில் கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு பின்புறமாக உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசவே அங்கு சென்று சிலர் பார்த்த போது பாதி திறந்து அரை குறையாக மூடப்பட்டிருந்த மலக்குழி ஒன்றினுள் பெண்ணின் சடலம் இருப்பதை அவதானித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள்.
அதன் பின்னரே காணாமல்போன ரஜனியின் சடலம்தான் அது என அடையாளம் காணப்பட்டது. ரஜனி அணிந்திருந்த சங்கிலி, தோடு, உடைகள் மற்றும் சைக்கிள் என்பனவும் அடையாளம் காணப்பட்டது. இதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் அப்பகுதியில் கடமையிலிருந்த ஆறு(06) படையினர் கைது செய்யப்பட்டனர்.
ரஜனியின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரஜனியின் வாய்க்குள் இருந்து ரஜனி அணிந்திருந்த உள்ளாடைகள் தொண்டை வரை அடையப்பட்டவாறு காணப்பட்டதாக தெரியவருகின்றது.
வீதியால் சென்ற ரஜனியை மறித்து காவலரணுக்குள் வைத்திருந்துவிட்டு பின்னர் ஆட்கள் அற்ற வீட்டுக்குள் தூக்கிச் சென்று ஆறு(06) இராணுவத்தினர் மாறி மாறி ரஜனியை கொடூரமாக சிதைத்துள்ளார்கள். ஆறாவதாக ராணுவச் சிப்பாயும் 5வதாக கற்பழித்த இராணுவச் சிப்பாயும் அரச சாட்சியாக மாறினார்கள்.
இரு சிப்பாய்களும் ரஜனியை சீரழிக்க முற்பட்ட போதே அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். அத்துடன் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரஜனியின் சடலத்தை துாக்கிச் சென்று மலசல கூட குழிக்குள் போட்டுள்ளார்கள்.
பல வருடங்களாக இழபறியில் இருந்த வழக்கினை இலங்கை அரசாங்கமானது போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக 2011 ஆம் ஆண்டு அவசர அவசரமாக தூசு தட்டி எடுத்து முடித்து வைத்தது.
இதில் மூன்று (03) இராணுவத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களே தூக்கிலிடப்படாத நிலையில் இத்தீர்ப்பின் மூலம் இவ்வழக்கின் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையானது நிறைவேற்றப்படுமா என்றே தீர்ப்பு வழங்கப்பட்டபோது 2011 இல் தமிழ் மக்களிடையே எழுந்த கேள்வியாகும்.
இந்த வழக்கின் சாட்சியாளராக சீ.குணசிங்கம் அவர்கள் கோண்டாவில் பகுதியில் இருந்து வழக்குகளிற்காக கொழும்பு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு கொழும்பு நீதிமன்றில் நடைபெற்ற போது அரச சட்டத்தரணியாக கடமையாற்றியவர் பிரசாந்தி என்ற பெயருடைய சிங்கள பெண் சட்டத்தரணி ஆவார். ( குறித்த பெண் அரச சட்டத்தரணியே கிருசாந்தி கொலை வழக்கிலும் ஆயராகியிருந்தார்.
பிரசாந்தியுடன் சேர்ந்து ரஜனியின் குடும்பத்தினரின் நலன்களைக் கவனிப்பதற்கு என என். ரவிராஜ் சட்டத்தரணியும் க.பூபாலசிங்கம் சட்டத்தரணியும் செயற்பட்டார்கள். அப்போது கடமையிலிருந்து பிரதம நீதவான் முனிதாச முன்னிலையில் படையினர்கள் தரப்பு சட்டத்தரணியாக சஞ்யேத்கம என்பவர் ஆஜராகி வாதிட்டார்கள். குறித்த வழக்கின் முக்கிய சாட்சியாக
அப்பகுதியில் கடமையாற்றிய பொலிஸ்காறரான உபாலி அவர்கள் பின்வருமாறு சாட்சி கூறியுள்ளார்.
"நான் காவல் கடமையிலிருந்த காவலரண் கோண்டாவிலுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பலாலி வீதியில் அமைந்திருந்தது. குறித்த காவல் நிலையத்திற்கு அருகில் கடைகளும் இருந்தன. குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிய 1ம், 3ம், 4ம் எதிரிகள் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் ரஜனியை குண்டுக் கட்டாகத் துாக்கிக் கொண்டு செல்வதை அவதானித்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் 3ம், 4ம் எதிரிகள் என்னையும் வருமாறு அழைத்தனர். நான் மறுத்துவிட்டேன்.
அதன் பின்னர் அவர்கள் மேலும் ஒரு மணி நேரம் ரஜனியுடன் காணப்பட்டார்கள். பின்னர் அவர்கள் வெளியே வரும் போது அதிர்ச்சியான நிலையில் இருந்தார்கள். நான் என்ன நடந்தது என கேட்ட போது அவள் இறந்து விட்டாள் என தெரிவித்தார்கள்.
அத்துடன் என்னையும் இது தொடர்பாக யாரிடமும் கூற வேண்டாம் என அச்சுறுத்தினார்கள். அதனால் நான் பயத்தில் யாரிடமும் கூறவில்லை" என இவ்வாறு சாட்சியமளித்துள்ளார் சம்பந்தப்பட்ட பொலிசார்.
இணையம் ஊடாக பெறப்பட்டு சீர்செய்யப்பட்ட தகவல்களை உள்ளடக்கியது.
- ஈழவேங்கை - தாயகத்திலிருந்து அகதி