கனடா தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் ஈழத்தமிழர்களின் அரசியல் தந்திரோபாய தேவைப்பாடும்!
கனடாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை இனவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள்.

கனடாவின் நகரமேயர் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி உருவாக்கியுள்ளதுடன், ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மறுப்பவர்கள் கனடாவிற்கு வரமுடியாது என்ற எச்சரிக்கையையும் வழங்கியுள்ளார். இது புலம்பெயர் தமிழர்களின் வாக்குப்பலத்தாலேயே சாத்தியமாகியுள்ளது. தாயத்தில் மக்கள் இத்தகைய வாக்கு பலத்தை சரியாக பயன்படுத்த தவறுகின்றார்களோ என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் 2009 களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு – கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழினப் படுகொலையை மையப்படுத்திய நிகழ்வுகளும், நினைவேந்தல்களும், நினைவு உரைகளும் நிலையான தன்மையை பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு 16 வது ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக அண்மைய ஆண்டுகளில் இறுதி யுத்தத்தின் துயரை நினைவூட்டும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு’ தமிழினப் படுகொலை நினைவேந்தலின் முக்கிய நிகழ்வாக நிலைபெற்று விட்டது. இவ்வாண்டு கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத் தூபி அந்நாட்டு அரச அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டுள்ளமை ஈழத்தமிழர்களிடையே புத்தெழுச்சியை கொடுத்துள்ளது. இப்பின்னணியிலேயே இக்கட்டுரை கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியும், அதனை மையப்படுத்தி எழுந்துள்ள உரையாடல்களினதும் அரசியல் வகிபாகத்தை அடையாளங் காண்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தாயகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்கள் அரச இயந்திரத்தின் நெருக்கடி பின்னணிகளுக்குள்ளேயே, மக்களின் தன்னார்வ எழுச்சிகளால் வருடா வருடம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. எனினும் தாயகத்தில் நினைவேந்தல்கள் நிலையான வடிவத்தை பெற முடியவில்லை என்ற குறைபாடு தொடர்ச்சியான துயராகவே காணப்படுகின்றது. இறுதி யுத்தத்தை தழுவி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே-18 அன்று தமிழினப் படுகொலைக்கான பொது நினைவேந்தல் கடந்த ஒரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. எனினும், முள்ளிவாய்க்காலின் நினைவு முற்றக்காணி தொடர்பிலும் இடையிடையே சில சச்சரவான வாதங்களும் அரச ஆளுகைக்கான முனைப்புகளும் இடம்பெற்று வருகின்றது.
அவ்வாறே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் நிறுவப்பட்ட தமிழினப் படுகொலை நினைவுத் தூபியும் 2021 ஆம் ஆண்டு இராணுவ நெருக்கீட்டில் உடைக்கப்பட்டது. எனினும் மாணவர்கள், மக்களின் தன்னார்வ எழுச்சி எதிர்ப்பு போராட்டம் மற்றும் சர்வதேசத்தின் அழுத்தத்தினால் மீள் நிர்மாணிப்புக்கு இலங்கை அரசாங்கம் மறுக்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டது. எனினும் அந்நிர்மாணமும் திட்டமிடப்பட்ட முழுமையான வடிவத்தை பெறவில்லை.
இவ்வாறான பின்னணியிலேயே தாயகத்தில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி வெறுமையாக காணப்படினும், தாயகத்துக்கு வெளியே ஈழத்தமிழர் மீதான இலங்கை சிங்கள-பௌத்த பேரினவாத கட்டமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் நினைவுத் தூபிகளாக பதிக்கப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு தாய்த் தமிழகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவாலயம் உருவாக்கப்பட்டது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நவம்பர்-08, 2013 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.
மேற்கு நாடுகளில் இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும்.
இந்த நினைவு முற்றத்தில் போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை 55 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட சுவரில் தனித்தனி கற்களால் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த நினைவு முற்றத்தில் மாவீரர் மண்டபம், முத்தமிழ் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தலைவர்கள் முதல் தமிழீழ விடுதலைப் போரின் போது தன் உயிரை ஈகையாக தந்த தமிழீழ விடுதலைப் புலிகள் படங்கள் போன்ற 300க்கும் மேற்பட்டோர் படங்கள் வைக்கப்பட்டது.
தற்போது கனடாவின் பிராம்ப்டனில் உள்ள சிங்குகூசி பூங்காவில் கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நகர மேயரின் ஈடுபாட்டுடன் தமிழ் இனப்படுகொலைக்கான நினைவுத் தூபி மே-10, 2025 அன்று திறக்கப்பட்டது. குறித்த நினைவுத் தூபிக்கான அடிக்கல் ஆகஸ்ட் 14, 2024 அன்று நாட்டப்பட்டது. அன்றிலிருந்து இராஜதந்திர உறவின் அடிப்படையிலும், நீதித்துறையினூடாகவும் இத்தூபி நிர்மாண நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எவையுமே சாத்தியப்படவில்லை.
இதற்கான உயர்ந்தபட்ச எதிர்வினையாக பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுத்தூபி திறப்பு விழாவில், “இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று கூறுபவர்களுக்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை. கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இது ஈழத்தமிழர்களுக்கு உயர்வான உற்சாகத்தை அளித்துள்ளது. ஈழத்தமிழர்களும் சமூக வலைத்தளங்களில் பிரம்டன் மேயரை நாயகனாய் கொண்டாடுகின்றார்கள்.
கனடாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை இனவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை அழைத்து தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பான படங்களில் இலங்கையின் உடல்மொழி கடுமையானதாக வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, போர்க்கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவும் தமது போர் வெற்றி வாக்குகளை பேணும் வகையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். “தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது கனேடிய அரசாங்கத்தின் அரசியல் உந்துதல் நடவடிக்கையாகத் தோன்றுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக பிரிவினையைத் தூண்டிவிட்டன.” என்றவாறு நாமல் ராஜக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
எனினும் கனடா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர அழுத்தங்களையோ அல்லது இலங்கை எதிர்க்கட்சிகளின் இனவாத பிரசாரங்களையோ பொருட்படுத்துவதாக அமையவில்லை. மாறாக தமது செயற்பாட்டின் நியாயப்பாட்டையும் இலங்கையின் இனவாத அரசியலின் முகத்தை தோலுரிப்பதாகவுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் தனது எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்சவின் பதிவை பகிர்ந்து, “தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கு ராஜபக்சவின் எதிர்ப்பானது, இந்தக் குடும்பத்தின் கையால் இழந்த அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை உணர்ந்து நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும்” என்றவாறு பதிலளித்துள்ளார்.
தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள்.
கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி நிறுவப்பட்டதும், அது சார்ந்து எழும் உரையாடல்களும் ஈழத்தமிழர்களிடையே எழுச்சிமிகு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியை எதிர்கொண்டவர்களை உணர்ச்சிகள் வெகுவாக ஆட்கொண்டு விடுகின்றது. எனினும் இதனை வெறுமனவே உணர்ச்சிக்குட்பட்டதாக கடந்து விடமுடியாது. இது ஆழமான அரசியல் நடைமுறைக்கான உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. ஆதலாலேயே இலங்கை அரசாங்கம் 2024 இல் அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து அதனை நிறுத்துவதற்கு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. தற்போதும் தனது விசனத்தை கடுமையான உடல்மொழிகள் உள்ளடங்கலாக வெளிப்படுத்தியுள்ளது. இதனை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகின்றது.
முதலாவது, கனடா அரசியல் தரப்பினரது செயற்பாடுகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்துமான படிப்பினையை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் தாயக மக்களும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் வாக்குகள் மூலம் அரசியல் அடையாளத்தை பெற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள், ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டதை இனப்படுகொலையாக குறிப்பிட முடியாதென்றவாறு கருத்துரைத்துள்ளனர். எனினும் கனடாவின் நகரமேயர் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி உருவாக்கியுள்ளதுடன், ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மறுப்பவர்கள் கனடாவிற்கு வரமுடியாது என்ற எச்சரிக்கையையும் வழங்கியுள்ளார். இது புலம்பெயர் தமிழர்களின் வாக்குப்பலத்தாலேயே சாத்தியமாகியுள்ளது. தாயத்தில் மக்கள் இத்தகைய வாக்கு பலத்தை சரியாக பயன்படுத்த தவறுகின்றார்களோ என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது.
கடந்த பொதுத்தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுமந்திரனின் வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனினும் தொடர்ச்சியாக சுமந்திரன் அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் கனவை விதைத்து வருகின்றார். இது மக்கள் சுமந்திரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தமது வாக்கு பலத்தால் சரியான போதனையை வழங்க தவறியுள்ளார்கள் என்பதையே அடையாளப்படுத்துகின்றது.
இரண்டாவது, சர்வதேச தளத்தில் இலங்கை அரசாங்கங்களால் ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஏற்றுக்கொள்வதனை வெறுமனவே நிகழ்வாக கடந்திட முடியாது. நீண்டதொரு தந்திரோபாய நகர்வுக்கான தளமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கனடா பூகோள அரசியலில் பிரதான சக்தியாக அமைகின்றது. கனடா இலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை அங்கீகரித்துள்ளமையானது, ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஓர் மைல்கல்லாகும். கனடாவின் உள்ளூர் அதிகார மட்டம் முதல் கனடா மத்திய அரசு வரை இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளமையை உறுதி செய்துள்ளது.
இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே இன்றைய தேவையாகும். குறிப்பாக கனடாவில் மே 12 – 18, தமிழர் இனப்படுகொலை கல்வி வாரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னரே ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை அங்கீகரிப்பதன் மூலம், நடந்து கொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையின் நீடித்த படிப்பினைகளைப் பற்றி சிந்திக்கவும், அதைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதனை வினைத்திறனாக கையாள்வதனூடாக வாக்குப்பலத்தினூடாக கிடைக்கப்பெற்ற அரசியல் தளத்துடன் ஏனைய மக்களின் ஒத்துழைப்புகளையும் பெறக்கூடியதாக அமையும்.
தமிழ்ச் சமூகமும் இளைஞர்களும் ஏனைய மக்களோடு தமிழ் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வதோடு, தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் தலைமுறைகளுக்கு இடையேயான அதிர்ச்சியை ஏனைய சமூகங்களோடு பகிருவது அவசியமானதாகும். மேற்கு நாடுகளில் இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும்.
மூன்றாவது, ஈழத்தமிழர்களின் அரசியலானது 2009 களுக்கு பின்னர் அடிப்படையில் இனப்படுகொலைக்கான நீதியைக் கோருவதனை மையப்படுத்தியே காணப்படுகின்றது. அதுவே ஈழத்தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான தந்திரோபாய செயற்பாடாகும். எனினும் தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள்.
கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி, இனப்படுகொலை என்ற சொல்லாடலுடன் அரசொன்றின் ஆதரவுடன் நிறுவப்பட்ட முதலாவது நினைவுத் தூபி ஆகும். இதனை ஈழத்தமிழர்கள் கொண்டாடுவதற்கு சமாந்தரமாக ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றி இருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் இனவாதிகள் என கூட்டாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இராஜதந்திர ரீதியான ஆட்சேபனைகளையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தனியன்களாக தமது சமூக வலைத்தளங்களில் பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுணை நாயகனாக கொண்டாடுகின்ற போதிலும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் சார்பாக கூட்டு நன்றியுணர்வை வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். உயர்ந்தபட்சம் தமிழ் பிரதிநிதிகளின் பிரசன்னம் அந்நிகழ்வில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையினூடாகவேனும் கனேடிய அரசாங்கத்திற்கும் செயற்பாட்டாளர்களுக்கும் கூட்டு நன்றியினை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். எனினும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதனை செய்ய தவறியுள்ளார்கள். மாறாக உள்ளூ ராட்சி சபை தேர்தல் முடிவுகளின் பின்னரான ஆசன இழுபறிக்குள் ஓய்வின்றி உள்ளார்கள்.
எனவே கனடாவில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் கனடா அரசாங்கத்தின் ஆதரவும், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை உந்திவிடும் ஓர் ஊக்கக்காரணியமாக அமைகின்றது. இதனைப் பற்றிக்கொண்டு சர்வதேச அளவில் ஏனைய சமூகங்களின் ஈடுபாட்டுடனும் ஒத்துழைப்புடனும் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை சர்வதேச போராட்டமாக மாற்றுவது ஈழத்தமிழர்களின் அரசியல் வியூகத்திலேயே தங்கியுள்ளது.
புலம்பெயர் தளம் தமது வாக்குப்பலத்தினூடாக வெகுவாக அரசியல் மட்டத்தில் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை ஒருங்கு சேர்த்துள்ளது. கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபி மற்றும் சமகாலத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் அதனையே உறுதி செய்கின்றது. எனினும் இம்முன்னேற்றம் அரசியல் மட்டத்தை கடந்து சமூக மட்டத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிக் கோரிக்கையை ஈழத்தமிழர்களுக்கு சமாந்தரமாக ஏனைய சமூகங்களும் ஒன்றிணைந்து கோரும் சூழலை உருவாக்க வேண்டும். இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டங்கள் உணர்வெழுச்சிகளுக்குள் சுருங்காது, தந்திரோபாயமாக நகர்த்தப்படுகையிலேயே நிலையான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும்.
ஐ.வி.மகாசேனன்