உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை: அகற்றுமாறு கோரிக்கை..!
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் ஆக்கிரமித்தலும் அண்மைக்காலமாக தொடர்கின்றது.

தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீவன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை உகந்தை மலையிலுள்ள ஆலயம் அதனுடன் இணைந்த கடற்கரையிலுள்ள மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் ஆக்கிரமித்தலும் அண்மைக்காலமாக தொடர்கின்றது.
உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் புராதன தமிழர் வாழ்வியல் ஆதாரங்களைச் சிதைப்பதும் அதை அழிப்பதும் ஆக்கிரமிப்பதும் எனும் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள இந்த புத்தர் சிலையானது உகந்தை முருகன் ஆலய முன் வாயிலின் முன்பாகக் செல்லும் போது கடற்கரையில் இடது புறமாகக் காணப்படும் மலையில் கடற்படை முகாம் முன்பாகவுள்ள மலையில் கடற்படையின் தொடர்பு கோபுரம் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது உகந்தை முருகன் ஆலய புராதன வரலாறு கொண்ட புண்ணிய பூமியாகும் இங்கு எவ்வாறு இவர்கள் புத்தர் சிலை நிறுவலாம் எனும் கேள்வியோடு உகந்தைமலையில் 25 அடி முருகன் சிலை நிறுவும் பணியைத் தடுத்த வன இலாகாவினரும் அரசும் ஏன் இதைத் தடுக்கவில்லை எனும் கேள்விக்குப் பதில் தர வேண்டும்.
அத்தோடு உகந்தை முருகன் ஆலய வளாகத்திலும் அதனைச் சூழவும் வன இலாகா, மற்றும் படையினர் புதிய பல நிபந்தனைகளையும் விதித்து ஆலய சூழலைச் சுருக்கியுள்ளனர், பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர், வள்ளிமலை போன்ற இடங்களுக்குச் செல்லவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர், இது தவிர சந்நியாசி மலையும் பறிபோகும் அபாயம் காணப்படுகிறது.
இந்த சிலை விவகாரமும் எமது ஒற்றுமையின்மை,இனம்,மதம் என்ற எண்ணமும், பற்றும் அற்றவர்களினால் அங்கு ஏற்பட்ட நிருவாகமின்மை இடைவெளியில் ஏற்பட்ட நிலைகள்தான் இவை.
அத்தோடு இந்த இடத்தில் சிலை வைப்பதற்கான ஆயத்தமாக மலையில் பீடம் அமைத்தபோது கடந்த 2024 ல் நான் நேரில் சென்று அவதானித்ததோடு இதுபற்றி உரியவர்கள் சிலரோடு பேசினேன் அத்துடன் இது உகந்தை ஆலய சூழலில் நிறுவப்பட்டுள்ள இரண்டாவது புத்தர் சிலை அத்துடன் இன்னும் ஒரு சிலைக்கான பீடமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் சிங்களவர்கள் பலரைக் குடியேற்றும் திட்டம் மற்றும் வன இலாகாவின் செயற்பாடுகள் மற்றும் மலையில் நிறுவப்படவிருந்த 25 அடி முருகன் சிலையை நிறுவாமல் தடுத்தது அதன் பின்னர் தற்போது புத்தர் சிலை வைத்தது அதற்கு உடந்தையாக இருந்த படைகள்,அதிகாரிகள் உள்ளிட்ட பல விடயங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும்.
இந்த சிலை உடனடியாக அகற்றப்படுவதோடு இந்த அரசு எமது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.