மாபியாக்களின் பிடிக்குள் ஆனையிறவு உப்பளம்..?
ஒரு ஏக்கர் விளைச்சல் நிலத்தில் வருடமொன்று சுமார் 400 மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்படும்

ஆனையிறவு 1760 ஆம் ஆண்டு போர்த்துகேயர் காலம் தொட்டு இன்று வரை பேசப்படுகின்ற ஒரு பெயராகவே இருந்து வருகிறது.
போரத்துகேயர், பிரித்தானியர், இலங்கை படையினர், விடுதலைப்புலிகள் என இராணுவ கேந்திர நிலையங்களாக பேசப்பட்டு வந்த பெயருக்குள் 1935 ஆம் ஆண்டு தொடக்கம் ஆனையிறவு உப்பளமும் இணைந்துகொண்டது. ஆனையிறவு உப்பளம் இலங்கையில் பிரசித்தி பெற்ற உப்பளமாகும், இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்புக்கு, இலங்கை சந்தைகளில் நல்ல கேள்வியுண்டு. ஆனால் இந்த உப்பளம் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல வருடங்களாக செயலற்று இருந்தது.
இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஏ9 பிரதான வீதிளை அண்டியதாக இந்த உப்பளம் அமைந்துள்ளது. 1935 ஆம் ஆண்டு தொடக்கம் 1966 வரை அரசாங்க உப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது. பின்னர் 1966 தொடக்கம் 1991 வரை இலங்கை தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழும், தொடர்ந்து 1991 தொடக்கம் 1997 வரை லங்கா சோல்ட் பிறைவேற் லிமிடெட் கம்பனியாலும், அதன் பின்னர் 1997 தொடக்கம் 2001 வரை மாந்தை சோல்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு கீழும் இயங்கிய ஆனையிறவு உப்பளம் தற்போது நேசனல் சோல்ட் லிமிடெட் கீழ் இயங்கி வருகிறது.
ஆனையிறவு உப்பளத்தில் ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு என இரண்டு உப்பளங்கள் காணப்படுகின்றன். ஆனையிறவில் 2242 ஏக்கர் பரப்பளவும் குறிஞ்சாதீவில் 1515 ஏக்கர் பரப்பளவும் உண்டு. இதில் ஆனையிறவில் உள்ள 2242 ஏக்கர் பரப்பளவு உப்பளத்தில் தற்போது 700 ஏக்கர் மட்டுமே பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதிலும் 600 ஏக்கர் பரப்பளவில்தான் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. குறிஞ்சாதீவில் உள்ள 1515 ஏக்கரில் இன்னமும் இந்த புனரமைப்ப பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது துரதிஸ்டமே. ஆனையிறவு உப்பளத்தில் 2014 பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016 உப்பு எடுக்க தொடங்கினார்கள். ஆனையிறவு உப்பளத்தில் உள்ள 700 ஏக்கர் பரப்பளவை வலயம் ஒன்று வலயம் இரண்டு என .350 ஏக்கர்களாக பிரித்து உப்பு உற்பத்தி பணிகள் இடம்பெறுகிறது.2018 ஆம் ஆண்டு 50 பாத்திகளும், 4 ஆழ் தொட்டிகளும் முழுமையாக செயற்பாட்டிற்கு வந்திருக்கிறது. 2024 மேலும் 70 பாத்திகளும், 3 ஆழ் தொட்டிகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் இவை இன்றும் பூரணமான பயன்பாட்டிற்கு வரவில்லை. 10 ஏக்கர் காச்சல் நிலத்திற்கு ஒரு ஏக்கர் விளைச்சல் நிலம் என்ற அளவில் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் படி ஆனையிறவில் உள்ள 700 ஏக்ககரில் 70 ஏக்கர் விளைச்சல் நிலமாக காணப்படுகிறது.
ஒரு ஏக்கர் விளைச்சல் நிலத்தில் வருடமொன்று சுமார் 400 மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்படும் அந்த வகையில் 70 எக்கர் விளைச்சல் நிலத்திற்கும் வருடமொன்றுக்கு சுமார் 28000 மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இது வினைத்திறனாக முன்னெடுக்கபடும் பணிகளில் தங்கியிருக்கிறது. இதனை விட குஞ்சாதீவு உப்பளம் புனரமைப்புச் செய்யப்படும் போது அங்கும் சுமார் 16 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உப்பளத்தை புனரமைப்புச் செய்வதற்கு சுமார் 350 மில்லியன் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உப்பளமும் பயன்பாட்டிற்கு வருகின்ற போது இங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் தொழில்வாய்ப்பை பெறுவார்கள்.
ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்கள் முழுமையாக மீளவும் இயங்க ஆரம்பித்தால் சுமார் 4000 வரையானவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக பெண்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வார்கள். இதனை தவிர ஏராளமான மறைமுக தொழில்வாய்ப்புகள் கிடைப்பதோடு, சந்தைப்படுத்தல் மூலம் அதிக வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் முக்கிய தொழில்துறையாக காணப்படும்.
இதனை தவிர உள்ளுர் கடற்றொழிலாளர்கள் தங்களது கறுவாட்டு உற்பத்திக்கான உப்பை பெற்றுக்கொள்ளவும் முடியும்.
முக்கியமாக முன்னர் போன்று ஆனையிறவு உப்பளத்தில் இருந்து பெறப்படுகின்ற முடிவுப்பொருட்களை கொண்டு பரந்தன் இராசாயன தொழிற்சாலையினை மீளவும் ஆரம்பிக்க முடியும் இதன் மூலம் காஸ்டிக் சோடா, திரவ சோடா, ஹைட்ரோகுளோரிக் அமிலம், போன்றவற்றை உற்பத்தி செய்ய முடியும். தற்போது இலங்கை இவற்றை இறக்குமதி செய்து வருகிறது.
ஆனையிறவு உப்பளத்தில் நிரந்த ஊழியர்கள், தற்காலி ஊழியர்கள், பருவகால ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் என கடந்த காலங்களில் பணியாற்றுள்ளனர். ஆனால் தற்போது இவர்களில் நிரந்தர பணியாளர்கள் 24 பேரும், பருவகால பணியாளர்கள்; 200 பேரும் பணியாற்றுகின்றனர். இந்த பருவகால பணியாளர்களுக்கு தினக் கூலியாக 2150 ரூபா வழங்கப்படுகின்ற போதும் அதில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்ட சிலகொடுப்பனவுகள் 2150 ரூபாவில் கழிக்கப்பட்டே வழங்கப்படுகிறது. இதிலும் மாதம் முழுவதும் தொழிலாளர்களுக்கு தொழில் வழங்குவதில்லை.
தொழிலாளர்களின் தொடர் போராட்டம்
கடந்த 14.05.2025 அன்று தொடக்கம் ஆனையிறவு உப்பளத் தொழிலாளிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாவது
1.திட்டமிட்ட ரீதியிலும் முகாமைத்துவக் குறைபாட்டினாலும் உப்பு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.
2.புதிதாக அமைக்கப்பட்டுள்ள உப்பு சுத்திகரிப்பு, உப்பு அரைத்தல் மற்றும் பொதியிடல் இயந்திரம் பழுதடைந்துவிட்டது எனத் தெரிவித்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.
3.அனுபவமும் தகுதியுமற்ற உத்தியோகத்தர்களின் நியமனம்.
4.உற்பத்தி செய்யப்பட்ட உப்பினை உரிய காலத்தில் சேகரிப்புச் செய்யாமல் விட்டதன் மூலம் உப்பு கரைந்து போனமை.
5.ஆனையிறவில் பொதியிடலுக்குரிய இயந்திரம் உள்ளபோதும் அதில் பொதியிடாமல் பிற இடங்களுக்கு கட்டி உப்பாக தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டிருக்கின்றமை.
6.உப்பு அரைத்தல், பொதியிடல் பகுதி இயங்காத காரணத்தினால் 40 வரையான தொழிலாளர்களுக்குரிய இடம் காலியாக்கப்பட்டுள்ளமை.
7.நியாயமற்ற முறையில் ஒரு தொகுதி ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டு, இன்னொரு தொகுதியினரைத் தவிர்த்தல்.
8.விரும்பியவாறு உப்புத் தொழிலாளர்களை இடநிறுத்தம் செய்தல்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே அந்த தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
மேற்படி தவறுகளையும் குறைபாடுகளையும் நீதியின்மையையும் நாம் உரிய இடங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். ஆயினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.
எனவேதான் தொழிலாளர்களாகிய நாம் ஜனநாயக ரீதியான எமது போராட்டத்தை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அரசாங்கம் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து உப்பளத்தை மேம்படுத்துவதோடு தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டு உரிய தீர்வைத் தர வேண்டும் என்று ஆனையிறவு உப்பத் தொழிலாளர்கள் கேட்டு நிற்கின்றனர்.
ஆனால் அவர்களது போராட்டம் ஆரம்பித்து 10 நாட்களை கடந்தும் அரச தரப்பில் இருந்து எந்த பதிலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக அவர்களது நியாயமான போராட்டத்திற்க புறம்பான செயற்பாடுகளே அங்கு இடம்பெற்றுவருகிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னனர் பெரும்பாலும் தொழிற்சங்கங்களை பயன்படுத்தி பலவேறு போராட்டங்களை நடாத்தி அதன் மூலமும் மக்கள் செல்வாக்கை பெற்று அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் ஆனையிறவில் ஏழைத்தொhழிலாளர்கள் நீதிக்காக போராடுகின்ற போது அவர்களை திரும்பியும் பார்க்காமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தனியார் கொள்வனவாளர்கள் அவற்றை பெற்றுச்செல்கின்றனர். இவர்கள் ஆனையிறவில் ஒரு கிலோ உப்பை தற்போது 67 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அதனை இங்கிருந்து அம்பாந்தோட்டைக்கும், புத்தளத்திற்கும், கொண்டு செல்கின்றனர் அங்கு பொதியிடுகின்றனர். பின்னர் அவற்றை அங்கிருருந்து மீளவும் வடக்கு பிரதேசம் உட்பட பல பிரதேசங்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஏற்றிக்கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு, பொதியிடல் செலவு, மீளவும் கொண்டுவருவதற்கான செலவு என உற்பத்தி செலவு அதிகரிக்கும் நடவடிக்கையே தற்போது இடம்பெறுகிறது
ஆனையிறவு உப்பளத்தின் ஒரு பகுதியான குறிஞ்சாதீவு உப்பளத்தை தனியாருக்கு விற்பனை செய்வதில் மேற்சொன்ன உப்பள உயரதிகாரிகள் அதிக அக்கறை காட்டிவருகின்றனர். ஏற்கனவே அதனை தனியாருக்கு விற்பனை செய்ய போவதாக அறிவித்தல் வெளியிட்ட பின்னர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்து எட்டு வரையான தனியார்கள் விண்ணப்பத்திருந்தார்கள் ஆனால் பின்னர் அந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டு பின்னர் தனியார் கம்பனி ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது அந்த தனியார் கம்பனிக்கு திட்டமுன்மொழிவை கூட உப்பளத்தின் உயரதிகாரிகள் சிலர் மேற்கொண்டதாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் இதனை கேள்வியுற்ற ஏற்கனவே விண்ணப்பத்திருந்த எட்டு விண்ணப்பதார்கள் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து தற்போது அந்த வழக்கு இடம்பெற்று வருகிறது.
ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்களை புனரமைத்து அதனை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் நேரடி வேலைவாய்ப்பை பெறுவதோடு, இந்த பிரதேசத்தின் பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் அது கொமிசன்களை தடுத்துவிடும். சில உயரதிகாரிகளுக்கு ஆனையிறவிலிருந்து எவ்வளவு உப்பு வெளியே செல்கிறே அதற்கேற்ற அளவில் கொமிசன்களும் கிடைக்கும். அதன் காரணமாகவே உப்பளம் பயன்பாட்டிற்கு வந்து 10 வருடங்களை கடந்தும் அதனை முழுமையாக வினைத்திறனாக பயன்படுத்தாது வைத்திருகின்றனர்.
கோடைகாலங்களில் தொழிலாளர்களுக்கு தினமும் வேலை வழங்க கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டும் அதனை வழங்காது வருகின்றனர். அதிகளவு உப்பு உற்பத்தி பொதியிடல் மேற்கொள்ள கூடிய வசதிவாய்ப்புக்கள் காணப்பட்டும் அதில் ஆர்வம் காட்டாது அசட்டையீனம் செய்வது வருகின்றனர்.
ஒரு பிரதேசத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் முன்னேறத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உப்பளம் சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்துப்படுகிறது. இதனாலேய அந்த தொழிலாளர்கள் போராடுகின்றனர்.அதுவும் தொழிலாளர்களின் கட்சி என்று சொல்லப்படுகின்ற ஜேவிபியின் காலத்தில் ஒரு தொழிலாளர் சமூகம்; போராடுகிறது. ஆனால் அவர்களது போராட்டத்தை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
மு.தமிழ்செல்வன்