மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியத்தாருங்கள் : அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மக்களிடம் வேண்டுகோள்!
மொழி உரிமை தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடிய அதிகாரத்தை அரச ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மொழியினால் மிக மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். அவ்வாறான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம். துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க தெரிவித்தார்.
அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மேலும் தெரிவிக்கையில்,
மொழி உரிமை தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடிய அதிகாரத்தை அரச ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எமது ஆணைக்குழு நான்கு முறைகளில் செயற்பட்டுவருகின்றது. அரச கருமமொழிகள் கொள்கைகளை நடைமுறைபடுத்துவற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். மொழி தொடர்பான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம்.துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.
குறிப்பாக கடந்த காலங்களில் மொழியினால் எத்தகைய மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
இலங்கையை போன்ற பல்லின , பல்மத மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட அழகிய தேசம் வேறு எங்கும் கிடையாது. நாம் தமிழர், சிங்களவர் , இஸ்லாமியர் என்ற கொள்கையினை விடுத்து “நாம் இலங்கையர்” என்ற என்ற ஒருமைப்பாட்டுக் கொள்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் இன்றைய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஒருமைப்பாட்டு நோக்கமே எங்களது வலிமையான குறிக்கோளாகும்.
பாடசாலைகள் மட்டுமின்றி, சமுக வளர்ச்சிக்கான அடிப்படையாக மும்மொழித் தேர்ச்சி கட்டாயமாகக் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு குழந்தையை சமூகமயமாக்கும் கட்டத்தில், அதற்குத் தேவையான மொழித் திறன்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்றையும் ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும். மாற்றம் ஆரம்ப நிலையிலிருந்தே நடைமுறைக்கு வந்தால், அரச கரும மொழி கொள்கையின் ஊடாக நல்லிணக்கம் உள்ள நாடாக காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார , அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த மஹலேகம் , தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.