'காவல் நிலைய படுகொலை... தமிழ்நாட்டில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!
தி.மு.க ஆட்சியில் 24 காவல்நிலைய கொலைகள் நடந்துள்ளது!

காவல் நிலைய மரணங்கள், என்கவுன்ட்டர், கை, கால்கள் முறிக்கப்படுவது போன்ற பல்வேறு மிருகத்தனமான செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன என பெ.சண்முகம் வேதனை தெரிவித்தார்.
காவல் நிலைய படுகொலைகள் தமிழ்நாட்டில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார். 'காவல்துறையினர் இளைஞரை அடித்து கொலை செய்துள்ளது உறுதியாகத் தெரிகிறது' என நீதிமன்றமே கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், மடப்புரத்தில் உள்ள மறைந்த அஜித்குமார் வீட்டிற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதரரை நேரிந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், "உரிய தண்டனை வழங்கப்படாததால், என்ன செய்தாலும் காப்பாற்றப்படுவோம் என்ற தைரியத்தில் காவல் துறை இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறது. உரிய காலத்திற்குள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டால் தான், இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், கால தாமதப்படுத்தாமல் விரைவாக இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சண்முகம், தமிழ்நாடு அரசு, இவ்வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், காவல் நிலைய மரணங்கள், என்கவுன்ட்டர், கை, கால்கள் முறிக்கப்படுவது போன்ற பல்வேறு மிருகத் தனமான செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதாக வேதனை தெரிவித்தார்.
குறிப்பாக, தி.மு.க ஆட்சியில் 24 காவல்நிலைய கொலைகள் நடந்துள்ளதாகவும், அஜித்குமாரின் கொலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தொடர்பு உள்ளது என்று குற்றஞ்சாட்டிய அவர், அந்த ஐஏஎஸ் யார்? என்பதை அரசு மூடி மறைப்பதாகவும் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு வந்தது என்றும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தண்டணை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கேட்டுக்கொண்டார்.