பாடசாலைகளில் வன்முறையைத் தடுக்க பிரான்ஸ் அரசு அதிரடி!
!கத்தியுடன் பிடிபடும் மாணவர்களுக்கு இனி கட்டாய ஒழுங்கு நடவடிக்கை!

பிரான்சின் பள்ளிக்கூடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களின் புழக்கம் அதிகரித்து வரும் கவலைக்குரிய சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு , பிரெஞ்சு அரசாங்கம் ஒரு புதிய, கடுமையான விதியை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ஜூலை 3, 2025 முதல், பாடசாலைகளுக்கு ஆயுதத்துடன், குறிப்பாகக் கத்தியுடன் வந்து பிடிபடும் எந்தவொரு மாணவரும் இனி தானாகவே ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் (conseil de discipline) விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பிரான்சில் உள்ள பள்ளிக்கூடங்களில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அரசாங்கம் இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பான அரசாணை இன்று ஜூலை 3, வியாழன் அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் (Journal officiel) வெளியிடப்பட்டது.
இந்தப் புதிய ஆணையின்படி, "ஒரு மாணவர் பள்ளி வளாகத்திற்குள் ஆயுதத்தைக் கொண்டு வந்தாலோ அல்லது தன்வசம் ஆயுதம் வைத்திருந்தாலோ," அந்தப் பள்ளியின் முதல்வர் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைக் கூட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை, பள்ளியின் ஊழியர் ஒருவர் மீது உடல் ரீதியான தாக்குதல் நடந்தால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை கட்டாயமாக இருந்தது. மற்ற சந்தர்ப்பங்களில், இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பள்ளி முதல்வருக்கே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இனி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் பிடிபட்டால் விசாரணை என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும்.
மேலும், இந்த ஒழுங்கு நடவடிக்கையுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 40வது பிரிவின் கீழ், இந்தச் சம்பவம்குறித்து அரசு சட்டமா அதிபருக்கும் (procureur de la République) கட்டாயமாகத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கத்திகளால் பல மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் (Elisabeth Borne) இந்த மாற்றத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, Hauts-de-Seine Bagneux என்ற இடத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் தனது பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், Nogent நகரில் ஒரு கல்லூரி மேற்பார்வையாளர் கொல்லப்பட்டதும், Nantes நகரில் ஒரு மாணவி மற்றொரு இளம் வயது மாணவரால் கொல்லப்பட்டதும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திடீர் சோதனைகள்: இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு இணையாக, பள்ளிகளுக்கு வெளியே உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் மாணவர்களின் பைகளைத் திடீரெனச் சோதனை செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் புருனோ ரெட்டாய்லோ (Bruno Retailleau) உடன் இணைந்து கல்வி அமைச்சகம் விரும்புகிறது. மார்ச் மாதம் தொடங்கப்பட்ட பரந்த தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 6,000க்கும் மேற்பட்ட சோதனைகளுக்குப் பிறகு 186 கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜூன் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தெரிவித்தது.
பாதுகாப்பு நுழைவாயில்கள் குறித்த விவாதம்: பிரதமர் பிரான்சுவா பைரூ (François Bayrou), பள்ளிகளின் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் போன்ற பாதுகாப்பு நுழைவாயில்களை (portiques de sécurité) சோதனை அடிப்படையில் அமைப்பது குறித்து ஆராய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் இந்த நடவடிக்கையில் சந்தேகம் தெரிவித்துள்ளார். பள்ளிகளை "போர் பதுங்கு குழிகளாக" மாற்ற முடியாது என்றும், தினமும் மாணவர்களைச் சோதனையிடுவது சாத்தியமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய சட்டம், பள்ளிச் சூழலில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதியான ஒரு படியாகக் கருதப்படுகிறது.
சிவா சின்னப்பொடி