இந்தியா மீது அமெரிக்கா 500% வரியா? ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க புதிய முயற்சி!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது.
குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
இது நமது நலன்களை பாதிக்கக் கூடும் என்றும் செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தற்போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செய்திச் சேனல் ஏபிசி நியூஸிடம் பேசிய செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம், "எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் இருந்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வேண்டும், இந்தியாவும், சீனாவும் புதினின் 70 விழுக்காடு எண்ணெயை வாங்குகின்றன, அதுவே அவர் தொடர்ந்து போர் புரிய உதவுகிறது. எனது மசோதாவுக்கு இதுவரை 84 எம்.பி.களின் ஆதரவு கிடைத்துள்ளது, எனக் கூறினார்.
"இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் புதினின் யுத்த கொள்கையை ஆதரிப்பதை நிறுத்தி, அவர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த நாடுகள் மீது வரி விதிக்க தேவையான அதிகாரத்தை இந்த மசோதா அதிபருக்கு வழங்கும்," என்றும் லிண்ட்ஸே கிரஹாம் கூறினார்.
படக்குறிப்பு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என பைடன் நிர்வாகமும் விரும்பியது
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தன. இந்த தடைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்தியா ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என மேற்குலக நாடுகள் விரும்பின, ஆனால் போரின் போது ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் புதிய உச்சத்திற்கு சென்றது.
ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யில் ரஷ்யாவின் பங்கு இரண்டு விழுக்காடுக்கு கீழ் இருந்தது, இப்போது கிட்டத்தட்ட 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ரஷ்ய தடைகள் சட்ட மசோதா 2025 (The Russia Sanctions Act, 2025) அமல்படுத்தப்பட்டால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் அல்லது யுரேனியம் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கப்படும்.
இது இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியா தினமும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 51 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றப்படுகிறது.
படக்குறிப்பு, அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம்
மசோதாவில் என்ன இருக்கிறது?
ரஷ்ய தடைகள் சட்டம் 2025 (The Russia Sanctions Act, 2025) என்பது அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஒரு மசோதா. யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யாவின் மறுப்பு ஆகியவற்றுக்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நாடுகள் மீது பெரிய அளவிலான தடைகளை விதிப்பது இந்த மசோதாவின் நோக்கம்.
இது அமெரிக்க செனட்டில், செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமால் ஏப்ரல் 2025ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தற்போது அமெரிக்க செனட் அவையின் பரிசீலனையில் உள்ளது. இது அமலுக்கு வர அவையில் பெரும்பான்மையும் பின்னர் அதிபரின் ஒப்புதலும் தேவைப்படுகிறது.
இந்த மசோதாவை முன்மொழியும்படி அதிபர் டிரம்ப் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கிரஹாம் சொல்கிறார்.
"டிரம்பிடம் தற்போது இல்லாத ஒரு ஆயுதத்தை தர விரும்புகிறோம். ஜூலை மாதத்திற்கு பிறகு நாங்கள் அந்த மசோதாவை நிறைவேற்றுவோம். அதிபர் அதில் கையெழுத்திடுவார். இந்த சட்டத்தில் விலக்கு அளிப்பதற்கான அம்சமும் உள்ளது. அதை அமல்படுத்துவது அதிபரின் கையில் இருக்கும்," என்கிறார் அவர்.
தங்களுடைய நோக்கம் புதினை பேச்சுவார்த்தைக்கு முன்வர கட்டாயப்படுத்துவதுதான் என்கிறார் கிரஹாம்.
படக்குறிப்பு, சீனாவுக்கு அடுத்து ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடு இந்தியா
இந்தியா மீதான தாக்கம் என்னவாக இருக்கும்?
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிக்கும் மசோதா குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, "செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமின் மசோதா பற்றி பேசும்போது, எங்களுடைய நலன்களை பாதிக்கக்கூடிய ஏதேனும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தால் அது எங்களுக்கும் முக்கியமானது. நாங்கள் தொடர்ந்து செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்பில் உள்ளோம். எங்களது தூதரகம் மற்றும் தூதரும் அவருடன் தொடர்பில் உள்ளனர்.
"எரிசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான எங்களது கவலைகளை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம். இந்த விஷயம் எங்கள் முன்வந்தால் நாங்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்."
2022ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய எண்ணெயை வாங்கும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. 2025 மே மாதத்தில் இந்தியா தினமும் சுமார் 19.6 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது, இது கடந்த பத்து மாதங்களில் மிகவும் அதிக அளவாகும்.
இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் தினமும் 20 முதல் 22 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவனமான கெப்ளரின் முதல்கட்ட தரவுகள் காட்டுகின்றன.
இது இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அளவாகும். அத்தோடு, இராக், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வாங்கப்படும் மொத்த அளவைவிட அதிகமாகும்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், இதை ரஷ்யாவுக்கு அழுத்தம் தர அமெரிக்கா பயன்படுத்தும் உத்தியாக பார்க்கிறார்.
"சில நாட்களுக்கு முன் டிரம்ப் குறித்து புதின் நேர்மறை கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறைகளும் பேசிக் கொண்டிருப்பதாகவும், சில பொருளாதார ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே திரைமறைவில் இருக்கும் நிலை இப்போது தோன்றுவது போல் அவ்வளவு மோசமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னமும் பல "இருந்தால்" மற்றும் "ஆனால்" இருக்கின்றன. எனவே, பிரச்னைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம் என ஜெய்சங்கர் சொல்வது சரியானதுதான் என நினைக்கிறேன்," என்கிறார் கன்வல் சிபல்.
எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சிக்கான மையம் சிந்தனைக்குழுவின் தரவுகள்படி, தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு மே 2025 வரை, ரஷ்ய நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.
2022 டிசம்பர் 5ஆம் தேதி முதல் 2025 மே மாதம் வரை, ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 விழுக்காட்டையும், இந்தியா 38 விழுக்காட்டையும் வாங்கின.
படக்குறிப்பு, தடைகள் இருந்தாலும் ரஷ்யாவின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருப்பதாக புதின் சொல்கிறார்
மேற்குலகின் தடைகளும், ரஷ்யாவின் பதிலடியும்
யுக்ரேன் போர் தொடங்கிய பின்னர், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதிக்கத் தொடங்கின, அவை காலப்போக்கில் மேலும் கடுமையாயின. இந்த தடைகள் ரஷ்யாவின் நிதி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்கின்றன.
யுக்ரேனில் சமாதானம் செய்துகொள்ள தங்களது தடைகள் அதிபர் விளாடிமிர் புதினை கட்டாயப்படுத்தும் என நம்புவதாக மேற்கத்திய நாடுகள் சொல்கின்றன. ஆனால் தர்க்க ரீதியான நியாயங்கள் மட்டுமே ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மீது கூடுதல் தடைகளை விதித்தால் அதனால் ஐரோப்பாதான் அதிகமாக நஷ்டங்களை சந்திக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தெரிவித்திருந்தார். 2024-ல் ரஷ்யாவின் பொருளாதாரம் 4.3% அளவு வளர்ச்சியடையும் என்றும் ஆனால் அதே நேரம் யூரோ மண்டலம் பொருளாதாரம் வெறும் 0.9% அளவுதான் வளர்ச்சியடையும் என அவர் தெரிவித்தார்.
இது இந்தியாவுக்கு சவாலான நேரம். இந்தியாவுக்கு மலிவான எரிசக்தி தேவை, அதே நேரம் மேற்குலகின் தடைகளையும் உதாசீனம் செய்துவிட முடியாது. இதைப் போன்ற ஒரு சூழலில் இதுவரை எச்சரிக்கையும், சமநிலையும் கொண்ட ஒரு அணுகுமுறையையே இந்தியா பின்பற்றி வருகிறது.
பிபிசி