பாஜக - அதிமுக கூட்டணியை கண்டு திமுகவுக்கு பதற்றம்... விஜய்யை கூட்டணிக்கு அழைத்தது ஏன்? நயினார் விளக்கம்!
திமுக தமிழ்நாட்டில் இருக்க கூடாது என்ற கொள்கையில் பாஜகவும், தவெவும் ஒன்றாக இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த நாள் முதல் திமுக பதற்றத்தில் இருக்கிறது என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
ஈரான் நாட்டில் சிக்கித்தவித்த திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்கள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டு, ஈரானில் இருந்து கப்பலில் துபாய் வந்தனர். துபாயிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்த அவர்கள் நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனங்கள் மூலம் திருநெல்வேலி மாவட்டம் உவரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள் ஈரானிலிருந்து தாங்கள் மீட்டுவரப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கினர். அதில் “நாங்கள் மீன்பிடித் தொழிலுக்காக, கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு சென்றோம். ஆனால் நாங்கள் சென்ற பின்பு, அங்கு போர் நடந்து கொண்டு இருந்ததால், எங்களால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. அதனால் நாங்கள் மீன்பிடி தொழில் இல்லாமல் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டோம்.
இந்த நிலையில் ஜூன் மாதம் போர் மேலும் வலுத்ததால் அங்கு ஒரு அச்சமான சூழ்நிலை நிலவியது. எங்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகில் குண்டுகள் வெடிப்பது, எங்கள் தலைக்கு மேலாக குண்டுகள் பறந்து செல்வது, இரவில் அந்த வெளிச்சத்தை பார்ப்பது போன்றவற்றால் நாங்கள் மிகவும் பயந்திருந்தோம்.
மேலும் ஈரான் நாடு முழுவதும் ஜிபிஎஸ் கருவிகள் வேலை செய்யவில்லை. ஜிபிஎஸ் கருவி இல்லாமல் எங்களால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாது. இதனால் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தோம். இதையடுத்து திருநெல்வேலியில் உள்ள எங்கள் குடும்பத்தினர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மூலம் முயற்சிகள் மேற்கொண்டனர்.
அதன் பின்பு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் நாங்கள் 15 பேர் மீட்கப்பட்டு விமானம் இல்லாததால் ஈரானிலிருந்து கப்பலில் துபாய் வந்தோம். அங்கு சில நாட்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்பு துபாயிலிருந்து விமானத்தில் டெல்லிக்கும், டெல்லியில் இருந்து இப்போது சென்னைக்கும் வந்திருக்கிறோம். எங்களை பத்திரமாக மீட்டுக்கு கொண்டுவந்த பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு நன்றி.
நாங்கள் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு வந்துவிட்டோம். ஆனால் ஈரானில் நாங்கள் இருந்த தீவுக்கு அருகில் மற்றொரு தீவில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 15 பேர் இருக்கின்றனர். அவர்களையும் பத்திரமாக மீட்டு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மீனவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் முயற்சியால் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை நேரடியாக மீட்டு துபாய்க்கு கப்பலில் அனுப்பி வைத்தனர். துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக இப்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர திருநெல்வேலி மாவட்டம் மீனவர்கள் 15 பேர் ஈரானில் மற்றொரு தீவில் இருக்கின்றனர். அவர்களையும் மீட்டு அழைத்து வருவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த ஓரிரு தினங்களில் அவர்களும் இந்தியா திரும்புவார்கள். இவர்களை ஈரானிலிருந்து மீட்டு கொண்டுவந்து சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் போய் சேர்வதற்கான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு பாஜக ஏற்றுக்கொண்டுள்ளது.
இவர்களுக்கு ஈரானில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அங்கு போர் நடந்துகொண்டு இருப்பதால் இவர்களுக்கு மீன்பிடி தொழில் இல்லாமல் கஷ்டப்பட்டனர். எனவேதான் சொந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டுள்ளனர்” என்றார்.
அவரிடம் வருகிற 2026 தேர்தல் கூட்டணி குறித்து கேட்டபோது, “விஜய்க்கு கூட்டணிக்கு வர விருப்பம் இல்லை என தெரிகிறது. எங்களுடைய கொள்கை தமிழ்நாட்டில் திமுக இருக்கக் கூடாது. விஜய் கொள்கையும் அதுதான். இதில் எல்லாரும் சேர்ந்து இருந்ததால்தான் நன்றாக இருக்கும் என்று ஒரு கருத்தை சொன்னேன். இப்போது விஜய் கருத்தில் மாறுபாடு இருக்கிறது. விஜய் தனியாக நிற்க முடிவு செய்து கருத்து சொல்லி உள்ளார். அந்த கருத்திற்கு பதில் சொல்லமுடியாது.
திமுகவிற்கு பாஜகவை பார்த்தாலே பயம். 4 ஆண்டுகளாக பேசாமல் இருந்தவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைந்து விட்டது என்றதும் அன்றிலிருந்து பதற்றத்தில் இருக்கிறார்கள். அந்த பதற்றத்தின் வெளிபாடுதான் பி டீம் என்றெல்லாம் சொல்கின்றனர்” என்றார்.