விஜய் உடன் காங்கிரஸ் கூட்டணி? ஒரே வரியில் முடித்த தங்கபாலு!
திமுக தலைமையிலான கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்கு, காங்கிரஸ் கட்சியினரும், காந்தி மண்டப டிரஸ்ட் நிர்வாகிகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர். காந்தி மண்டபத்தை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சொத்து விபரங்கள் குறித்தும், அதன் நிலை குறித்தும் அறிந்து கொள்வதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபம், கயத்தார் கடம்பூர் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காந்தி மண்டப டிரஸ்ட் நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். சொத்துக்களின் விபரம், இன்றைய நிலைகுறித்தும் கேட்டறிந்தனர்.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு இணைத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணைச் செயலாளர் நிதின் கும்பல்கர், ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சி த.வெ.க உடன் கூட்டணி அமைக்குமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "காங்கிரஸ் கட்சி ஒரு அகில இந்திய கட்சி. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி தலைவராக ஸ்டாலின் உள்ளார். எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. தி.மு.க-வின் நான்கு ஆண்டு கால ஆட்சியை மக்கள் போற்றி வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசே தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒத்துக்கொண்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்" என்றார்.
மேலும், ’காந்தியம்’ தான் இந்தியாவை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்ட தங்கபாலு, அதை மக்களிடத்தில் பரப்புவதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.