ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடைபயணத்திற்கு அனுமதி கோரிய வழக்கு! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
பொத்தூர் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க உத்தரவிட வண்டும்,

ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடைபயணத்திற்கு அனுமதி கோரிய வழக்கு! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனு மீது 4 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவடி காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சமுகத்தில் நிலவும் ஏற்றதாழ்வை களைவதற்காகவும், சமுகத்தில் பின் தங்கிய பிரிவினரின் முன்னேற்றம், பின்தங்கியோரின் கல்விக்காக சேவையாற்றியவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தபோது அதன் மீது காவல்துறை எந்த முடிவும் எடுக்கவில்லை.
மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் அமைந்துள்ள பொத்தூர் வரை வழக்கறிஞர்கள் வரும் மார்ச் 30ஆம் தேதி அல்லது அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி என ஏதேனும் ஒரு தேதியில் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்,"எனக் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஆம்ஸ்ட்ராங்கினால் பயனடைந்த வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு மரியாதை செய்ய விரும்புகின்றனர். எனவே, ஆம்ஸ்ட்ராங் உருவப்படம் மற்றும் பேனாவை ஏந்தி சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து அவரது நினைவிடம் அமைந்துள்ள பொத்தூர் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க உத்தரவிட வண்டும்,"எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபிநாத், "மனுதாரர் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கேட்ட மனுவில், ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்த நாளை முன்னிட்டோ அல்லது அவரது நினைவு நாளை முன்னிட்டோ நடைபயணம் மேற்கொள்வதாக எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. நடைபயணம் மேற்கொள்வதற்கான எந்த ஒரு அவசியமும், காரணமும் இல்லாத நிலையில் நடைபயணத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் 4 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து அனுமதி அளிப்பதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை," என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், "மனுதாரர் அளித்த 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்," என ஆவடி காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.