கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆதரவாக நம்பிக்கை வெளியிட்டுள்ள கனடா பிரதமர்!
ஈழத் தமிழரான கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவர் மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஈழத் தமிழரான கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவர் மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து, 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் கனடா பிரதமருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதாவது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி தொடர்ந்து பணியாற்றுவது சிக்கலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னி அவர் மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என தெரிவித்துள்ளார்.
கெரி ஆனந்த சங்கரிக்கு எதிராக கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு முதல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து ஆனந்தசங்கரி 2016 மற்றும் 2023-ல் கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் கனடா நீதிமன்றம் அந்த நபரின் கடைசி முறையீட்டையும் நிராகரித்ததுடன், தேசிய பாதுகாப்புக்கும், பொது பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவித்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
குறித்த அறிக்கையில், 2023-இல் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு இத்தகைய கடிதங்களை எழுதுவதை நிறுத்தியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்காளர்களுக்காக ஆதரவு கடிதங்கள் எழுதுவது வழக்கமான செயலாகும் என கெரி ஆனந்தசங்கரி அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதானல் வேறு தகவல்களை வெளியிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கனடாவில் இயங்கி வரும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அமைப்பு ஒன்றின் பிரதானி ஷெரில் சபேரியா இதை ஒரு முக்கிய தவறான முடிவாகக் குறிப்பிடுகிறார்.
ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்குவது எவ்வித ஏற்புடையதல்ல எனவும், இது நாடு முழுக்க பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சீர்குலைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஆனந்தசங்கரி பதவியில் தொடரக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
இது போல் கடிதம் எழுதியவர்கள், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கவே கூடாது என எதிர்க்கட்சி செனட் தலைவர் லியோ ஹூசாகோஸ் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.