வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு!
தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் இது தொடர்பில் அறிவித்தாரா? இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள புதிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் தேசிய பாதுகாப்பின் கேந்திர மையமாகவுள்ள வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த விமான படை முகாம் 1985 ஆம் ஆண்டு 133 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. வடக்கு , கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றல், மூடப்பட்ட வீதிகளை திறத்தல் காணி விடுவிப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட நகைகளை மீள ஒப்படைத்தல் என்பன தற்போது கண்காட்சி போன்று இடம்பெறுகின்றன.
2024.03.23 ஆம் திகதியன்று எஸ்.ஞானசம்பந்தன் என்பவர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் .அக்கடிதத்தில் வவுனியா விமான படை முகாம் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஒருபகுதி தனது தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரத்துக்கு சொந்தமானது. ஆகவே இந்த காணியை விடுவித்து தனக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரியிருந்தார்.
இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலாளர் இந்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில் விமானப் படையிடம் அறிக்கை கோரினார் .2024.07.04 ஆம் திகதியன்று விமானப் படை இவ்விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.அந்த அறிக்கையில் ‘1985 ஆம் ஆண்டு மூன்று கட்டங்களாக இந்த காணி விமான படைக்கு கையளிக்கப்பட்டது . முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக 1997.12.12 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்ட இந்த காணிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ள எஸ்.ஞானசம்பந்தன் என்பவரின் தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரம் என்பவர் 2 இலட்சம் ரூபா நஷ் ஈட்டை பெற்றுக்கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் எஸ்.ஞானசம்பந்தர் என்பவர் இந்த முயற்சியை கைவிட்டு விட்டு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது காணியை விடுவிக்குமாறு 2024.12.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் இந்த கடிதத்தை துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் இந்த கடிதம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு இணைப்பு கடிதம் ஒன்றை எழுதி, குறித்த காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு விமானப்படைக்கு ஆலோசனை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?இந்த ஆலோசனையை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே வழங்கியுள்ளார். இந்த விமானப் படை முகாமை அகற்றி இவ்விடத்தில் ஆரம்ப குடியிருப்பாளர்களை மீண்டும் அந்த காணியில் குடிமயர்த்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய இவ்விடயத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் அறிவித்தாரா?இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன.1985 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே இந்த முகாமுக்கான காணிகள் பெறப்பட்டன. எனவே தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.