“ஜிகாத் படுகொலைகளும்” விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை!
சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்

“ஜிகாத்” எனும் முஸ்லிம் ஊர்காவல் படையினர், இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த விடயங்களும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். என நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
திராய்க்கேணி படுகொலைகள் என அறியப்படும் கொலைகள் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6 ஆம் திகதி இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்றது. இந்தப் சம்பவத்தில் சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
களுவாஞ்சிகுடியில் நேற்று புதன்கிழமை (16.07.25) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், திராய்க்கேணி கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கி.மீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம் ஊர்க்காவல் படை அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் ஊர்க்காவல் படையால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது. இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.
சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லிம்கள் பலர் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.
அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். 1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.
20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் 69 தமிழர்கள் படுகொலை
05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை .
10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .
16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.
26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
29.07.1990 ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.
12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லிம் ஊர்க்காவல் படை குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் கோவில் தர்மகர்த்தா தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லிம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. அயல் கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே சிங்கள இராணுவ உதவியுடன் இப்படுகொலையினை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச்சேனை, செங்கலடி, ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.
பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாக பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.
தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திராய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம்.
இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவர்களாகவும் காணப்படுகின்றனர் . முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் இக்கிராமம் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.