கவின் ஆணவக் கொலை குறித்து தவெக தலைவர் விஜய் பேசாதது ஏன்? நடிகர் சாய் தீனா ஆவேசம்!
கருத்துகளை சினிமா நடிகர்களிடம் கேட்பதை முதலில் நிறுத்துங்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ், தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அரசியல்வாதிகளிடம் கேளுங்கள். சாதிய முறை நல்லதா? கெட்டதா? சாதி இருக்கணுமா? வேணாமா? என்று அரசியல் தலைவர்களிடம் கேளுங்கள்.

"ஆணவக் கொலை குறித்த கருத்துகளை சினிமா நடிகர்களிடம் கேட்பதை நிறுத்தி விட்டு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கேளுங்கள்" என நடிகர் சாய் தீனா தெரிவித்துள்ளார்.
புதுமுக நடிகர் மாஸ் ரவி, சாய் தீனா, கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'காத்து வாக்குல ஒரு காதல்' திரைப்படக் குழுவினர் நேற்று (ஆகஸ்ட் 6) சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நெல்லையில் கவின் என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சாய் தீனா, “இது போன்ற கருத்துகளை சினிமா நடிகர்களிடம் கேட்பதை முதலில் நிறுத்துங்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ், தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அரசியல்வாதிகளிடம் கேளுங்கள். சாதிய முறை நல்லதா? கெட்டதா? சாதி இருக்கணுமா? வேணாமா? என்று அரசியல் தலைவர்களிடம் கேளுங்கள்.
மக்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கும் அரசு, சமூக நீதியையும் வழங்க வேண்டும். இது போன்ற கேள்விகளை அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கேளுங்கள். சினிமா நடிகர்களால் என்ன பண்ண முடியும்? நான் எஸ்கார்ட் (Escort) உடன் சுற்றுபவன் கிடையாது. சமூக நீதியோடு பழகுகிறோம், சாப்பிடுகிறோம். ஆனால், திருமணம் என்று வரும் போது மட்டும் சாதி வந்து விடுகிறது. எனவே, சாதியை ஒழிக்க வேண்டும்.
சமூக நீதியை பேணிக் காக்க வேண்டும். நாம் அனைவரும் தமிழர்கள். ஆனால், சாதியால் வேறுபட்டுள்ளோம். நம்மை வெளிநாட்டில் இருந்து வந்து யாரும் கொலை செய்வதில்லை. அனைத்துமே இங்கே தான் நடக்கிறது. எனவே, சமூக நீதியை பேணிக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை கல்வியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.
மேலும், தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய், நெல்லை ஆணவக் கொலை குறித்து கருத்து தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு, “ஆணவக் கொலை நடந்ததற்கு விஜய் பதில் சொல்ல வேண்டும். அதற்கான பொறுப்பு அவருக்கு உள்ளது” என்றார்.