கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்!
திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகியதை அடுத்து, திரைத்துறையில் கால் பதித்தார் மு.க. முத்து. எம்ஜிஆரை போலவே ஹேர்ஸ்டைலுடனும், உடல்மொழியுடனும் அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மூத்த சகோதரருமான மு.க. முத்து, உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (77) காலமானார். கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மு.க. முத்து, இன்று மரணம் அடைந்திருக்கிறார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி - பத்மாவதி தம்பதியருக்கு 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி பிறந்தவர் மு.க. முத்து. திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகியதை அடுத்து, திரைத்துறையில் கால் பதித்தார் மு.க. முத்து. எம்ஜிஆரை போலவே ஹேர்ஸ்டைலுடனும், உடல்மொழியுடனும் அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
எம்ஜிஆருக்கு போட்டியாக கருணாநிதி தனது மகனை சினிமாவில் இறக்கிவிட்டதாக அன்றைய காலக்கட்டத்தில் ஒரு பேச்சு இருந்தது. பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், பூக்காரி, அணையா விளக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் மு.க. முத்து நடித்தார். ஆரம்பக்காலத்தில், அவரது படங்கள் வெற்றி பெற்றாலும், பின்னர் தோல்வியை தழுவத் தொடங்கின.
இந்தக் காலக்கட்டத்தில்தான், தனது தந்தையுடன் மு.க. முத்துவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவரிடம் இருந்து விலகி தனியாக வசித்து வந்தார் மு.க. முத்து. பின்னர், அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்ததால் திரைத்துறையில் இருந்தும் அவர் விலகினார்.
இதன் தொடர்ச்சியாக, மு.க. முத்துவுக்கு சிவகாம சுந்தரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அத்தம்பதியருக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் பிறந்தனர். பின்னர், அரசியலில் தலைக்காட்டிய மு.க. முத்து, அதிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இதனால் அரசியலில் இருந்தும் அவர் விலகினார்.
தொடர்ந்து, தந்தையிடம் இருந்து பிரிந்தே இருந்த மு.க. முத்து, ஒருகட்டத்தில் வறுமையில் வாடி வருவதாக செய்தி வந்தது. அந்த சூழலில்தான், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை அவர் சந்தித்து உதவி கோரினார். இதையடுத்து, ரூ.5 லட்சம் நிதியுதவியை ஜெயலலிதா அவருக்கு வழங்கினார். இது, அன்றைய அரசியல் களத்தில் பெரும்பேசுபொருளானது.
பின்னர் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மு.க. முத்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்நிலையில், சமீபகாலமாக அவரது உடல்நிலை மிக மோசமாக தொடங்கியது. இந்நிலையில், இன்று காலை மு.க. முத்து மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முதலமைச்சர் அஞ்சலி:
தனது அண்ணன் மு.க. முத்து இறந்த செய்தி அறிந்ததும், உடனடியாக அவரது ஈஞ்சம்பாக்கம் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதே போல, மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த திமுக எம்.பி. கனிமொழியும், தனது அண்ணன் இறந்த செய்தி கேள்விப்பட்டு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்.
மு.க. முத்துவின் உடல், பொதுமக்களின் பார்வைக்காக கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்படும். அவரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும், சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.