யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 1258 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (17) மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்பு ரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி தேர்தல் பின்னராக இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்துள்ள தவிசாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், மாவட்டச் செயலகத்தினால் - மீள்குடியேற்றம் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 1258 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 9 இலட்சம் ரூபாவாகவும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, அந்தவகையில் 9 இலட்சம் பெறுமதியான 53 வீடுகளுக்கும், 10 இலட்சம் பெறுமதியான 563 வீடுகளுக்குமான நிதியுமாக மொத்தமாக மாவட்டத்திற்கு 891 மில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாகவும், மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56 மில்லியன் ரூபா, மின்சார இணைப்பு செயற்றிட்டத்திற்கு 43 மில்லியன் ரூபா, கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000 மில்லியன் வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாப்படவுள்ளதாகவும் தெரிவித்துடன், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் சரியான முறையில் பயன்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் தமது தொடக்கவுரையில், எல்லாப் பிரதேச செயலக பிரிவுகளிலும்சமச்சீரான அபிவிருத்தி தேவை எனவும், அபிவிருத்தியினால் மக்களுக்கு ஏற்படும் பயன்களையும் ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், வடக்கு மாகாணத்திற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார திணைக்கள த்திற்கும் ஆளனிகளை நியமிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அபிவிருத்தி இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சரியான முறையில் பயன்படுத்த ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், சனாதிபதி அவர்களின் நோக்கமானது அனைவரும் ஒன்றிணைந்து துரிதமான அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதேயாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்களின்தவிசாளர்களையும் வரவேற்ற ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், அபிவிருத்தி க்கு தவிசாளர்களின் ஆலோசனை களையும் முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டார் என்பதுடன், விசேடமாக வீட்டுத் திட்டத்தின் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, இவ்வாண்டுக்குரிய அபிவிருத்தித் திட்டங்களைஇவ்வாண்டுஇறுதிக்குள் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதே சனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பு என்றும், அனைவரினதும் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின்முன்னேற்றங்களும் ஆராயப்பட்டது.
மேலும், திண்மக்கழிவகற்றல், வீட்டுத் திட்டத்திற்கான மணல் விநியோகம், பாதீனித்தியத்தைக் கட்டுப்படுத்தல், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திசாலை, தாளையடி குடிநீர் திட்டம், காங்கேசன்துறையில் அமைந்துள்ள சனாதிபதி மாளிகை உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணாநாதன் இளங்குமரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி எம். தனுஜா, மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.