செம்மணி புதைகுழியிலிருந்தாவது தமிழினத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்
தமிழினத்திற்கு இடம்பெற்ற கொடுமைகளுக்கு முடிவு கிடைக்க சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும் - ஆறு திருமுருகன் வேண்டுகோள்

செம்மணி புதைகுழியிலிருந்தாவது தமிழினத்திற்கு இடம்பெற்ற கொடுமைகளுக்கு முடிவு கிடைக்க சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும் இலங்கையில் வாழுகின்ற ஈரநெஞ்சுடைய மனிதநேய அமைப்புக்களும், சமய பண்பு மிக்க பெரியோர்களும் இந்த விடையத்தில் நேர்மையாக குரல் கொடுத்து சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்படும் சோகமான சூழ்நிலையில் திகைத்துப்போய் இருக்கின்ற சமூகம் எத்தனை பேரை இழந்து, எத்தனை பேர் காணாமல் போய் கவலையுடன் இருக்கும் போது செம்மணி மனித புதைகுழி சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் தந்துள்ளது.
எனவே செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் சர்வதேச ரீதியான விசாரணை இடம்பெறவேண்டும் உண்மையான தீர்வு இந்த விடையத்தின் ஊடாக ஏற்படுத்தப்படவேண்டும்.
எனவே இன்று இந்த முயற்சியில் ஈடுபடுகின்ற நீதித்துறை சார்ந்தவர்களை நாம் நன்றியோடு போற்றுகின்ற அதேவேளை இந்த விசாரணை தொடரவேண்டும் இந்த விசாரணையின் ஊடாக தமிழ் இனத்திற்கு நடைபெற்ற கொடுமைகள் முடிவுக்கு வரவேண்டும் என்று இந்த வேளையில் வேண்டி செம்மணிப் புதைகுழி தொடர்பாக பச்சிளம் பாலகரில் இருந்து ஆண்கள் பெண்கள் என்று வேறு பாடின்றி இவ்வளவு கொடூரமாக புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்கின்ற செய்தி உலகத்தை உலுக்கிக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாகி வியப்புக்குள்ளாகியுள்ளது.
எனவே இரக்கம் இல்லாமல் நடைபெற்ற யாராலும் மன்னிக்கமுடியாத துயரமான சம்பவத்திற்கு இலங்கையில் வாழுகின்ற ஈரநெஞ்சுடைய மனிதநேய அமைப்புக்களும் ,சமய பண்பு மிக்க பெரியோர்களும் இந்த விடையத்தில் நேர்மையாக குரல் கொடுத்து சரியான ஒரு தீர்வை செம்மணி விவகாரம் பெற்றுத்தரவேண்டும் என்றார்.